அம்பிகா: தொடர்ந்து அழுத்தம் கொடுத்தால் இசி மாறும்

தேர்தல் சீரமைப்புக்காக பெர்சே 2.0 தொடர்ந்து நெருக்குதல் கொடுத்து வந்துள்ளது. ஜூலை 9-இல் பேரணி ஒன்று நடைபெற்றது. அதில், போலீஸின் கண்ணீர்புகைக் குண்டுகளையும் இராசனம் கலகப்பட்ட நீர் பீரங்கி வண்டிகளிலிருந்து பீய்ச்சி அடிக்கப்பட்டதையும் துச்சமாக எண்ணி பலதுறைகளையும் சேர்ந்த மலேசியர்கள் சுமார் 15,000 பேர் தங்கள் கோரிக்கையை வலியுறுத்த ஒன்று திரண்டனர்.

அதன்பின் இரண்டு தடவை பொதுமேடையில் பெர்சே 2.0 தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசனுடன்  தேர்தல் ஆணைய(இசி)த் துணைத்தலைவர் வான் அஹ்மட் வான் ஒமார் தேர்தல் சீரமைப்பு குறித்து வாதமிட்டுள்ளார். ஆனாலும், தேர்தல் நடைமுறைகளில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படும் என்பதற்கான அறிகுறி எதனையும் அவர் வெளிப்படுத்தவில்லை. அப்படிச் செய்யும் அதிகாரம் ஆணையத்துக்கு இல்லை என்கிறார் அவர்.

இதனால் ஏமாற்றமடைந்த பெர்சே 2.0 ஆதரவாளர்கள், இவ்விவகாரம் தொடர்பில் ஆணையத்திடம் பேசிப் பயனில்லை என்றும் நாடாளுமன்றத்தில் சட்டங்களில் திருத்தம் செய்யும் அளவுக்குப் பெரும்பான்மை பலம் பெற்றிருக்கும் பிஎன் அரசாங்கத்துடன் விவாதிப்பதே பொருத்தமாக இருக்கும் என்றார்கள்.

ஆனால் அம்பிகா, அவ்விவகாரத்தை தேர்தல் ஆணையத்துடன்தான் விவாதிக்க வேண்டும் என்கிறார். அவருக்கு இசி-மீது இன்னும் நம்பிக்கை இருக்கிறது.

“எனக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. நாம் நினைக்கும் காரியம் நடக்கும் என்று இன்னமும் நம்புகிறேன்”, என்று கடந்த வாரம் மலேசியாகினியுடன் நடைபெற்ற ஒரு நேர்காணலில் அவர் உறுதியாகத் தெரிவித்தார்.

“இரு தரப்பு (இசி, ஆளும் கட்சி) களுடனும் பேச வேண்டியிருக்கலாம் என்று நினைக்கிறேன். இசி, தனக்கு அதிகாரம் இல்லை என்று நினைக்கலாம். ஆனால், நாங்கள் ஒப்புக்கொள்ள மாட்டோம். அவர்கள் நினைப்பதைவிட கூடுதல் அதிகாரம் அவர்களுக்கு உண்டு. அதை அவர்கள் உணரும்படிச் செய்ய விடாமல் வலியுறுத்தி வர வேண்டும்.

“அது அவர்களின் பொறுப்புத்தான். அவர்களிடமிருந்து கவனத்தைத் திருப்பக்கூடாது. அப்படிச் செய்தால் தேர்தல் நடைமுறைகளுக்கு அவர்கள் பொறுப்பல்ல என்று சொல்வதுபோல் ஆகி விடும். அதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்.”

“முழுப் பொறுப்பும் அவர்களுடையதுதான். அவர்களால் நிறைய செய்ய முடியும். அரசாங்கத்துக்கு எதிராக ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டியிருந்தால்கூட அதையும் அவர்கள் செய்யத்தான் வேண்டும். ஏனென்றால் அது சுதந்திரமாக செயல்படும் ஒரு அமைப்பு.”

இசி வழக்கம்போல் சிந்திக்காமல் “மாறுபட்டுச் சிந்திக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்ட அம்பிகா, “அவர்கள் தங்கள் அதிகாரத்தை உணர வேண்டும், அதைப் பயன்படுத்தவும் வேண்டும்”, என்றார்.

ஜூலை 9 பேரணிக்குப் பின்னர் “சிறிதளவு முன்னேற்றம்” ஏற்பட்டுள்ளது என்றாரவர். இசி, தேர்தல் பரப்புரைக் காலத்தை நீட்டிக்கவும் தேர்தல் சீரமைப்பு தொடர்பில் அரசியல் கட்சிகள் சம்பத்தப்படாத குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்ற மொழியப்பட்டிருப்பதை ஆராயவும் ஒப்புக்கொண்டுள்ளது.

“வெளிநாட்டு வாக்காளர்கள் தொடர்பிலும் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன”. வெளிநாட்டில் பயிலும் மலேசிய மாணவர்களை வாக்காளர்களாக பதிவு செய்ய மலேசியத் தூதரகங்களில் உதவிப் பதிவாளர்கள் அமர்த்தப்படுவார்கள் என்று இசி அறிவித்திருப்பதை வைத்து அவர் இவ்வாறு கூறினார்.

பேரணிக்குப் பின்னர் பெர்சே 2.0 அமைதியாகி விட்டது என்றும் வேகம் குறைந்துவிட்டது என்றும் கூறப்படுவதை அம்பிகா ஒப்புக்கொள்ளவில்லை.மக்கள் அவரவர் சொந்த முயற்சியில் அந்த இயக்கத்தைத் தொடர்கிறார்கள் என்றார்.

“மக்கள் பெர்சேயைத் தங்களுடையதாக எண்ணிச் செயல்படுகிறார்கள். அதை நினைத்து பெருமிதம் அடைகிறேன்.”

அம்பிகாவைப் பொறுத்தவரை, தேர்தல் சீரமைப்புப் பற்றிப் பேச நாடு முழுவதிலிருந்து அவருக்கு அழைப்பு வந்துகொண்டே இருக்கிறது.

பேரணியால் தேர்தல் சீரமைப்பு நேரடியாக நிகழ்ந்துவிடவில்லை என்றாலும் தேர்தல் என்பது எங்கும் விவாதிக்கப்படும் ஒரு விவகாரமாகிவிட்டது.மக்கள் அதைப் பற்றிப் பேசுவதில் மட்டும் ஆர்வம் காட்டவில்லை, வாக்காளராக வேண்டும், வாக்களிக்க வேண்டும் என்பதிலும் ஆர்வம் காட்டுக்கிறார்கள்.

தேர்தல் சீரமைப்பு இயக்கத்தைத் தொடரும் வகையில் வார இறுதிகளில் மஞ்சள்நிற ஆடை அணிய வேண்டும் என்ற வேண்டுகோளுக்கு மக்களிடையே அவ்வளவு வரவேற்பு இல்லையே என்பதைச் சுட்டிக்காட்டியபோது அதை அவர் பொருட்படுத்த வில்லை.

“அது ஒன்றும் பெரிய விசயமல்ல, மஞ்சள் இன்னமும் பெர்சே 2.0-இன் நிறமாகத்தான் கருதப்படுகிறது. அவ்வப்போது மக்கள் மஞ்சள் நிற ஆடை அணியத்தான் செய்கிறார்கள். அந்த வகையில் இந்த விவகாரத்துக்கு உயிர் கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறோம்”, என்று புன்முறுவல் பூத்தார் அம்பிகா.