ராஜீவ் காந்தி கொலை வழக்கு: உச்சநீதிமன்றமே விசாரிக்க முடிவு!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மூன்று பேரின் வழக்கை, சென்னை உயர்நீதிமன்றத்திலிருந்து மாற்றி, தானே விசாரிக்க இந்திய உச்சநீதிமன்றம் முடிவெடுத்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள அவர்களது மனுவை, உச்சநீதிமன்றத்துக்கு மாற்றி, ஜூலை 10-ம் தேதி விசாரணைக்கு பட்டியலிடுமாறு ஜி.எஸ். சிங்வி தலைமையிலான பெஞ்ச் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்கு எதிராக, தாங்கள் அளித்த கருணை மனு மீது முடிவெடுக்க 11 ஆண்டுகள் காலதாமதம் ஆனதால், அந்த தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டும் என்று முருகன், பேரறிவாளன் மற்றும் சாந்தன் ஆகியோர் மனுத்தாக்கல் செய்திருக்கிறார்கள்.

அவர்களது மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும்போது, அங்கு பெருமளவிலான அரசியல் கட்சியினர் கூடியிருந்ததாகவும், அங்கு நியாயமான விசாரணை நடைபெறும் சூழல் இல்லாத நிலையில், அந்த மனுக்களை உச்சநீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என்றும் மூப்பனார் பேரவையைச் சேர்ந்த வெங்கட் என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

மேலும், தமிழக அரசு சட்டப்பேரவையிலேயே, அந்த மூவரையும் தூக்கில் போடக்கூடாது என்றும், அவர்களது தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றியிருப்பதாகவும் அவர் தனது மனுவில் சுட்டிக்காட்டியிருந்தார்.

அந்த மூவரும் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், அவர்களுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றுவதை சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்திருந்தது. அதுதொடர்பாக, மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பியது.

அவர்கள் மீதான தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்த பிறகும், கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் நிராகரித்த நிலையிலும், அந்த மூவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் அதற்கு எதிராக மனுத்தாக்கல் செய்தார்கள்.