ஜனநாயகத்தை கொலை செய்கிறார் ப.சிதம்பரம்: அக்னிவேஷ்

பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்கு இந்திய அரசு எந்த உதவியையும் செய்யவில்லை என சமூக ஆர்வலரும் மாவோயிஸ்டுகளின் முன்னாள் அமைதித் தூதுவருமான சுவாமி அக்னிவேஷ் குற்றம் சாட்டினார்.

மேலும் இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஜனநாயகத்தை கெடுப்பதில் முதன்மை வகிக்கிறார் எனவும் அவர் குற்றம் சாட்டினார்.

மாவோயிஸ்டுகள் தங்கள் கோரிக்கைகளை அமைதியாகவும் சட்டபூர்வமாகவும் தெரிவிக்க இந்திய அரசு எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை என குற்றம் சாட்டிய அக்னிவேஷ், தற்போது மாவோயிஸ்டுகளால் ஏற்படும் கடத்தல் மற்றும் வன்முறை சம்பவங்கள் அனைத்தும் அவர்களின் பிரச்னைகளை தீர்க்காததே காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.

மாவோயிஸ்டுகளை விடுவிக்காமலேயே பிணையாளிகளை மாவோயிஸ்டுகள் விடுதலை செய்தது குறித்து கேட்டதற்கு அது அவர்களின் பெருந்தன்மை என்று குறிப்பிட்டார்.

மாவோயிஸ்டுகளை காட்டிலும் இந்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் பயங்கரவாதி என குற்றம் சாட்டிய அக்னிவேஷ், மாவோயிஸ்டு தலைவர் ஆசாத் கொலை செய்த விதம் குறித்து நினைவு கூர்ந்தார்.

மாவோயிஸ்டுகள் பிரச்னைகளை குறித்தான உண்மைகளை நாட்டு மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் தாம் இந்தியா முழுவதும் சுற்று பயணம் மேற்கொள்ளவிருப்பதாக மேலும் தெரிவித்தார்.

TAGS: