ஹாடி: நாடு காலனித்துவ ஆட்சியில் இருந்ததே இல்லை எனக் கூறுவது முற்றிலும் அபத்தமானது

மலேசியா ஒரு போதும் காலனித்துவ ஆட்சியின் கீழ்  இருந்ததே இல்லை என வரலாற்று ஆசிரியர் ஒருவர் சொல்லியிருப்பதை பாஸ் தலைவர்கள் கடுமையாக குறை கூறியுள்ளனர். அத்தகைய கருத்துக்கள் மக்களை தவறாக வழி நடத்தும் நோக்கம் கொண்டவை என்றும் அவர்கள் வருணித்தனர்.

அத்தகைய “சர்ச்சைகள் மக்களை முட்டாளாக்குவதற்காக” இப்போது எழுப்பப்படுகின்றன. வாக்களிப்பு முறையிலும் வாக்காளர் பட்டியலிலும் காணப்படுகின்ற பல்வேறு குளறுபடிகள் மீது படிந்துள்ள மக்கள் கவனத்தை திசை திருப்புவதே அதன் நோக்கம் என்று பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் கூறினார்.

“உண்மையில் மக்கள் முட்டாளாக்கப்படுகின்றனர். அதனால் அவர்கள் அண்மையில் எப்பப்பட்ட தேர்தல் மோசடிகளை நினைக்க மாட்டார்கள் என அவர்கள் எண்ணுகின்றனர்.”

40 முதல் 60 ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் சிந்தித்த பிரச்னைகளுடன் ஒப்பிடுகையில் இன்றைய பிரச்னைகள் வேறுபட்டவை. உண்மையில் பல பழைய பிரச்னைகள் தீர்க்கப்பட்டு விட்டன”, என்றார் ஹாடி.

நமது சுதந்திர வரலாறு குறித்து நிகழும் சர்ச்சைகளை அவர் ஒப்புக் கொண்டார். ஏனெனில் மலாய்க்காரர்களுக்கு அம்னோ மட்டுமே போராடியது என்னும் எண்ணத்தைத் தோற்றுவிக்கும் வகையில் அந்த வரலாறு ஜோடிக்கப்பட்டுள்ளது என்றும் பாஸ் தலைவர் கருதுகிறார்.

“மலாய்க்காரர்கள் அந்த 60 ஆண்டு காலத்துக்கு முந்திய பிரச்னைகளினால் முட்டாளாகி விட மாட்டார்கள் என நாங்கள் நம்புகிறோம்.”

“700 முதல் 800 ஆண்டுகளுக்கு முன்பு நிலவிய பிரச்னைகளை என்னவென்று சொல்வது?  போர்த்துக்கீசியர்கள் வந்த போது அவர்களை யாரும் எதிர்க்கவில்லையே?”

“காலனித்துவ ஆட்சியாளர்களுக்கு எதிராக போராட்டம் நடத்திய ஒரே அமைப்பு அம்னோ என இப்போது சித்தரிக்கப்படுகிறது”, என்றார் ஹாடி.

“நானும் வரலாற்றுப் பாடத்தைப் படித்துள்ளேன். அந்த காலத்தில் அம்னோவும் இல்லை. பாஸ் கட்சியும் இல்லை. ஆனால் மக்கள் காலனித்துவ ஆட்சியாளர்களுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருந்தனர்.”

பாஸ் கட்சி வெளியிட்டுள்ள சமூக நல நாடு மீதான கலந்தாய்வுக் கூட்டம் ஒன்றை இன்று காலை தொடக்கி வைத்த பின்னர் ஹாடி நிருபர்களிடம் பேசினார்.

கோலாலம்பூரில் கோம்பாக், தாமான் மெலாவாரில் அந்தக் கூட்டம் நடைபெறுகிறது.

மலேசியா பிரிட்டிஷ்காரர்களின் காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்தது எனச் சொல்வது தவறு என சுல்தான் இட்ரிஸ் போதனைப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுப் பிரிவுத் தலைவர் ஜைனல் கிளிங் நேற்று கூறியிருந்தார். பிரிட்டிஷ்காரர்கள் தங்கள் “பாதுகாப்பை” மட்டுமே மலேசியாவுக்கு வழங்கினர் என அவர் சொன்னார்.

சிங்கப்பூர், மலாக்கா, பினாங்கு ஆகியவை மட்டுமே பிரிட்டிஷ் காலனிகள் என அவர் கூறிக் கொண்டார்.