சிரியாவில் தொடர் குண்டு வெடிப்பு: 40 பேர் பலி

சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத் அரசுக்கு எதிராக கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக போராட்டம் நடந்து வருகிறது. போராட்டத்தில் ஈடுபடும் மக்களை ராணுவம் கொன்று குவித்து வருகிறது. இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இதைத் தொடர்ந்து ஐ.நா. சபை தலையிட்டு கடந்த மாதம் 12-ந்தேதி முதல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை அமல்படுத்தி உள்ளது. இருந்தும் அங்கு போராட்டம் ஓயவில்லை. பொதுமக்களுடன் சேர்ந்து மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை சிரிய தலைநகர் பகுதியில் உள்ள ராணுவ உளவுப் பிரிவு கட்டடம் அருகே அடுத்தடுத்து இரண்டு சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்துச் சிதறின. இந்த குண்டு வெடிப்பில் சிக்கி 40 பேர் பலியாகியுள்ளனர்.

மேலும் இந்த குண்டு வெடிப்பில் சிக்கி 170-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தமுள்ளதாக அங்குள்ள தொலைக்காட்சி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.  இதனால் பலியானோரின் எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடம் ரத்தகளறியாக காட்சியளித்தது. பலத்த சத்ததுடன் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் சிக்கி பலியானோர்களின் உடல்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிரியாவில் அமைதி திரும்பவேண்டும் என்றும், போர்நிறுத்தம் செய்ய இதுவே சரியான தருணம் என்று ஐ.நா.வின் சிறப்பு தூதர் கோபி அனான் நேற்று வேண்டுகோள் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.