தமிழக முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

தமிழக முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, சென்னை போயஸ் கார்டனில் உள்ள முதல்வரின் வீட்டுக்கு காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம், காவல்துறை குற்ற ஆவணக் காப்பக டி.எஸ்.பி.யின் மின்னஞ்சல் முகவரிக்கு புதன்கிழமை இரவு ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில் தமிழக முதல்வரின் போயஸ் கார்டன் வீடு, மதுரை மீனாட்சியம்மன் கோயில் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் வியாழக்கிழமை காலை வெடிகுண்டு வெடிக்கும் என குறிப்பிடப்பட்டிருந்ததாம்.

அந்த மின்னஞ்சல் குறித்து விருதுநகர் காவல்துறையினர், சென்னை பெருநகர காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போயஸ் கார்டனில் உள்ள முதல்வரின் வீட்டில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு காவல்துறையினர் மோப்பநாய் உதவியுடன் புதன்கிழமை நள்ளிரவு சோதனை செய்தனர்.

முதல்வர் வீட்டில்காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அவரது பணிமனையிலும் பாதுகாப்பை அதிகரிக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அதேவேளை, மீனாட்சியம்மன் கோயில், ஆண்டாள் கோயில் ஆகியவற்றிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

காவல்துறையினரின் விசாரணையில், மும்பையை அடுத்த தாணே எம்பயர் நவாப் சாலையை சேர்ந்த நாச்சிமுத்து என்ற முகமதுகான் என்பவரது மின்னஞ்சல் முகவரியில் இருந்து வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பதாகத் தெரியவந்துள்ளது. அவர் தன்னை மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்தவர் என்று அதில் குறிப்பிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.