ஸ்பெக்ட்ரம் ஊழலில் கைதான ராசா பிணையில் விடுதலை

15 மாதம் திகார் சிறையில் அடைக்கப்பட்டருக்கும் மாஜி இந்திய மத்திய அமைச்சர் ராசாவின்பிணை மனு மீதான தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டது. சி.பி.ஐ., எதிர்ப்பு தெரிவித்திருந்தும் இவருக்கு சிறப்பு நீதிமன்றம் பிணை வழங்கியது.

தொலை தொடர்பு துறையில் ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஏலம் தொடர்பாக நாட்டுக்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டது என்ற தணிக்கை குழு அறிவிக்கைக்கு பின்னர் இந்த விவகாரம் கடந்த 2010 ல் விஸ்வரூபம் எடுத்தது. தொடர்ந்து நாடாளுமன்றத்தில் பெரும் அமளியால் இந்திய மத்திய அரசு கடும் நெருக்கடியை சந்தித்தது.

இதனால் அமைச்சர் பதவியை இழந்த ராசா கடந்த 2011 பிப்., மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து தொலை தொடர்பு அதிகாரிகள் கனிமொழி எம்.பி.,, தனியார் டெலிகம் நிறுவன இயக்குனர்கள் என 19 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். இதில் அனைவரும் பிணை பெற்று விட்டனர். ராசா மட்டும் சிறையில் இருந்து வருகிறார். அனைவருக்கும் பிணை கிடைத்து விட்டதால் முதல் குற்றவாளியான ராசா தனக்கும்பிணை வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை கடந்த வாரம் நடந்தது. இந்திய மத்திய அமைச்சராக இருந்து அதிகாரம் பெற்றரவராக இருந்ததால் இவர் சாட்சிகளை கலைக்கும் அபாயம் உள்ளது. இவருக்கு பிணை வழங்க கூடாது என்று சி.பி.ஐ., எதிர்ப்பு தெரிவித்தது.

ஆயுள் தண்டனை பெறும் அளவிற்கு குற்றம் புரிந்தவர்களுக்கும், கைதிகளுக்கு பிணை வழங்கலாம் என்பது சட்டத்தில் இடம் இருக்கிறது. ஒரு அமைச்சராக இருந்திருப்பதால் இவர் நாட்டை விட்டு ஓடுவார் என சந்தேகிக்க முடியாது. சட்டப்பூர்வ விசாரணைக்கு தொடர்ந்து அவர் ஒத்துழைப்பு வழங்குவார். என ராசா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார். இன்று பிணை மனு மீதான உத்தரவு வெளியானது.

பொது வாழ்வில் ஈடுபட்டு நம்பிக்கை துரோகம் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவின் கீழ் ராசா மீது வழக்கு புனையப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆயுள் தண்டனை வரை வழங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ராசா பிணை தீர்ப்பு வெளியானதும் அவரது ஆதரவாளர்களும் தி.மு.க.,வினரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.