இந்தியர் வாக்குகள் திசை மாறினால் சிலாங்கூர் மந்திரி புசார், நுருல் இஸ்ஸா தோல்வி காண்பர்

அடுத்து வரும் பொதுத் தேர்தலில் இந்தியர் வாக்குகள் மீண்டும் பிஎன் -னுக்கு திரும்பினால் சில பக்காத்தான் பெரும்புள்ளிகள் தங்கள் இடங்களை இழக்க நேரும் என அரசியல் ஆய்வாளரான ஒங் கியான் மிங் கூறுகிறார்.

அவ்வாறு இந்தியர் வாக்குகள் திசை மாறுமானால் எம்பி-க்களான லெம்பா பந்தாய் நுருல் இஸ்ஸா அன்வார், கோலா சிலாங்கூர் சுல்கெபிலி அகமட், மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களான காலித் இப்ராஹிம்(ஈஜோக்) பிகேஆர் தகவல் பிரிவு இயக்குநர் நிக் நாஸ்மி நிக் அகமட் (ஸ்ரீ செத்தியா) ஆகியோர் அரசியல் பலியாகக் கூடிய பெரும் புள்ளிகளில் அடங்குவர் என அவர் சொன்னார்.

“இந்தியர் வாக்குகளில் 30 விழுக்காடு ஆளும் கூட்டணிக்கு ஆதரவாக திரும்பினால் பிஎன் குறைந்தது  9 நாடாளுமன்ற இடங்களை வெல்ல முடியும்”, என ஒங் இன்று பெட்டாலிங் ஜெயாவில் நடத்தப்பட்ட கருத்தாய்வு ஒன்றில் கூறினார்.

“அதே வேளையில் 14 மாநிலத் தொகுதிகளும் மீண்டும் பிஎன்-னுக்கு திரும்பி விடும்.”

இந்தியர் வாக்குகள் வெற்றியை நிர்ணயிக்கக் கூடிய ஒன்பது நாடாளுமன்ற, 14 சட்டமன்றத் தொகுதிகளையும் தாம் அடையாளம் கண்டுள்ளதாகவும் ஒங் குறிப்பிட்டார். அதில் தாம் ஏற்கனவே குறிப்பிட்ட பக்காத்தான் இடங்களும் அடங்கும் என்றார் அவர்.

2004ம் ஆண்டு தேர்தலில் பிஎன்-னுக்கான இந்தியர் ஆதரவு 80 விழுக்காடாக இருந்ததை தமது ஆய்வுகள் காட்டியதாக ஒங் குறிப்பிட்டார். அதற்கு பிரதமர் அப்துல்லா அகமட் படாவி முதலில் பதவி ஏற்றுக் கொண்டதும் அவர் மீது நல்லெண்ணம் காரணமாகும்.

ஆனால் அந்த ஆதரவு  2008ல் 50 விழுக்காடாக சரிந்து விட்டது. அதனால் அரசியல் சுனாமி ஏற்பட்டது.

இந்திய விவகாரங்களை அரசாங்கம் கையாண்ட விதம் குறித்து ஏற்பட்ட அதிருப்தியே ஆதரவு சரிந்ததற்குக் காரணமாகும்.

மிபா எனப்படும் மலேசிய இந்திய வர்த்தக சங்கம் ஏற்பாடு செய்த கருத்தாய்வுக் கூட்டத்தில் ஒங் பேசினார்.

“இந்தியர் வாக்காளர்களுடைய உள்ளங்களைக் கவருவதற்கு நடத்தப்படும் போராட்டம்” குறித்த தங்களது கருத்துக்களை தெரிவிப்பதற்காக அரசியலில் பல்வேறு தரப்புக்களையும் சார்ந்த அரசியல்வாதிகளும் கல்வியாளர்களும் சமூக அமைப்புக்களின் பேராளர்களும் வணிகர்களும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

பிஎன் இந்தியர்களை ஈர்க்க முயலுகிறது

அந்த சிறுபான்மை இந்திய சமூகத்தின் ஆதரவு 80 விழுக்காடாக இருந்த 2008ம் ஆண்டுக்கு முந்திய நிலைக்கு பிஎன்-னுக்குத் திரும்பும் சாத்தியத்தின் அடிப்படையில் 30 விழுக்காடு வாக்குகள் திசை மாறுவது பற்றிக் குறிப்பிடப்பட்டது என ஒங் சொன்னார்.

பக்காத்தான் முயற்சிகளுக்கு இணையாக இந்தியர் பிரச்னைகளை சமாளிப்பதற்கு கூட்டரசு அரசாங்கம் கூடுதல் முயற்சிகளை மேற்கொள்வதும் அவற்றில் அதிக ஈடுபாடு காட்டுவதும் 30 விழுக்காடு வாக்குகள் திசை மாறுவதற்குக் காரணமக இருக்கலாம்.

தமது கருத்துக்கு உலு சிலாங்கூர் இடைத் தேர்தல் முடிவுகள் நல்ல எடுத்துக்காட்டு என்றும் ஒங் குறிப்பிட்டார். அங்கு கூடுதலாக கிடைத்த 9 விழுக்காடு இந்தியர் வாக்குகள் அந்த இடத்தை பிஎன் மீண்டும் பிடிக்க உதவியது என்றார் அவர்.

அத்தகைய சூழ்நிலை அடுத்த பொதுத் தேர்தலிலும் நிலவினால் தாம் ஏற்கனவே குறிப்பிட்ட முக்கியமான இடங்களைப் பக்காத்தான் இழக்கக் கூடும்.

இந்த நாட்டு 27 மில்லியன் மக்கள் தொகையில் இந்தியர்கள் எண்ணிக்கை கிட்டத்தட்ட 2 மில்லியன் ஆகும்.

ஏற்கனவே விளக்கப்பட்ட போல பல கலப்புத் தொகுதிகளில் முடிவுகளை நிர்ணயிப்பதற்கும் பெரும்பான்மையை உறுதி செய்வதற்கும் அவர்கள் வல்லமையைப் பெற்றுள்ளனர்.

ஆகவே புத்ராஜெயாவைக் கைப்பற்றும் போராட்டத்தில் இந்தியர்களுடைய உள்ளங்களைக் கவருவது பிஎன்-னுக்கும் பக்காத்தானுக்கும் முக்கியமானதாகும். அரசியல் பிரச்சாரங்களும் கொள்கை முடிவுகளும் ஒதுக்கீடுகளும் அதன் அடிப்படையில் அமைந்துள்ளன.

மேல் விபரம் பின்னர்..