பரமக்குடியில் கலவரம்; துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் 4 பேர் பலி

தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி ஐந்து முனைச் சாலையில் தலித் மக்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

பலியானவர்களில் இருவரின் உடல்கள் பரமக்குடி அரசு மருத்துவமனைக்கும் மற்ற இருவரது உடல்களும் இராமநாதபுரம் மற்றும் மதுரை அரச மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன என்று உள்ளூர் தகவல்கள் கூறுகின்றன.

கடந்த சனிக்கிழமை தலித் மாணவர் ஒருவர் ஒரு கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டதே இந்த மோதல்களுக்கு அடிப்படை காரணம் என்றும் கூறப்படுகிறது.

இதை அடுத்து பரமக்குடிக்கு, தலித் தலைவர் இமானுவேல் சேகரின் நினைவு நாள் நிகழ்வுகளில் கலந்து கொள்ள சென்ற தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் தூத்துக்குடியில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி பரமக்குடியில் தலித் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட போதே அவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன.

இதன்போது காவல்துறையினர் மீது கற்களும் கம்புகள் எறியப்பட்டதை அடுத்து, அவர்களை கலைக்க கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரையும் காவல்துறையினர் பீய்ச்சி அடித்துள்ளனர்.

பிறகு காவல்துறை வாகனம் ஒன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. அந்தத் தீயை அணைக்க வந்த தீயணைப்பு வாகனத்துக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.

கலவரக்காரர்களை கலைக்க காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அங்கிருக்கும் செய்தியாளர் ஒருவர் கூறுகிறார்.

இந்தச் சம்பவத்தை அடுத்து இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.