பிரிட்டிஷ்காரர்கள் காலனித்துவ ஆட்சியாளர்களைப் போன்று இயங்கினர்

மலாயாவில் பிரிட்டிஷ்காரர்கள் காலனித்துவ ஆட்சியாளர்களைப் போன்று இயங்கினர் என்பது தான் உண்மை நிலை என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறுகிறார்.

மலாயா, பிரிட்டிஷாரின் காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்தது இல்லை என தேசிய பேராசிரியர்கள் மன்ற உறுப்பினர் ஜைனல் கிளிங் கூறியிருப்பதை ஒப்புக் கொண்ட மகாதீர், பிரிட்டிஷ்காரர்களின் ஆணைகளுக்கு ஏற்ப சுல்தான்கள் இயங்கும் நிலை காலப் போக்கில் ஏற்பட்டது என்றார்.

“நுட்பமாக பார்த்தால் நாம் ஒரு போதும் காலனித்துவ ஆட்சியில் இருந்தது இல்லை. பிரிட்டிஷ்காரர்களை அழைத்து நாட்டை நிர்வாகம் செய்வதற்கு ஆலோசனை வழங்குமாறு கேட்டுக் கொள்வதென சுல்தான்கள் முடிவு செய்தது நாம்தான். அப்படிப் பார்த்தால் நாம் அவர்கள் ஆட்சிக்கு உட்படவில்லை.”

“பினாங்கைப் போன்று வர்த்தக மையம் ஒன்றை அமைத்துக் கொள்வதற்காக அவர்கள் நமக்குப் பணம் கொடுத்தார்கள். ஆனால் உண்மையில் பிரிட்டிஷ்காரர்கள் இங்கு இருந்த போது நாம் காலனித்துவ ஆட்சியில் இருப்பதைப் போன்று நடந்து கொண்டனர்.”

“அதனை வேறு விதமாகச் சொன்னால் பிரிட்டிஷ்காரர்கள் ஆலோசனை கூறவில்லை. ஆணைகளைப் பிறப்பித்தார்கள்.”

டாக்டர் மகாதீர் இன்று செர்டாங்கில் பெர்டானா பல்கலைக்கழகத்தை தொடக்கி வைத்த பின்னர் நிருபர்களிடம் பேசினார்.

மலாயா பிரிட்டிஷ் காலனியாக ஒரு போதும் இருந்தது இல்லை என்றும் பாதுகாப்புக்கு உட்பட்ட பிரதேசமாகவே இருந்தது என்றும் கடந்த வாரம் ஜைனல் கூறியிருந்தார்.

1874ம் ஆண்டு பங்கோர் ஒப்பந்தத்திற்குப் பின்னர் மலாயா காலனியாக்கப்பட்டதற்கான எந்த ஆவணமும் கையெழுத்திடப்படவில்லை எனவும் ஜைனல் சொன்னார்.

“கடந்த 400 ஆண்டுகளாக  இரண்டாம் உலகப் போரின் போது  மலாயா ஜப்பானிய ஆக்கிரமிப்பில் இருந்த காலத்தைத் தவிர சிங்கப்பூர், மலாக்கா, பினாங்கு ஆகியவை மட்டுமே காலனிகளாக இருந்து வந்தன.”

1950ம் ஆண்டு புக்கிட் கெப்போங் போலீஸ் நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தலைமை தாங்கிய மாட் இந்ரா, அந்த சம்பவத்தில் உண்மையான ஹீரோ என்றும் பிரிட்டிஷ் சம்பளப் பட்டியலில் இருந்த போலீசார் அல்ல என்றும் மாட் சாபு தமது சொற்பொழிவு ஒன்றில் குறிப்பிட்டதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து மலாயா வரலாறு தொடர்பான சர்ச்சை மூண்டது.

சொற்பொழிவு ஒன்றின் போது தாம் ஆற்றிய உரையைத் திரித்து வெளியிட்டதற்காக மாட் சாபு உத்துசான் மலேசியா மீது வழக்குத் தொடரப் போவதாக மருட்டியுள்ளார்.

“வரலாற்றை கண்டு பிடிக்கக் கூடாது”

“மக்கள்” வரலாற்றை “கண்டு பிடிப்பதை” தவிர்ப்பது மிக முக்கியம் என்றும் அந்த முன்னாள் பிரதமர் சொன்னார். அவர் எந்தத் தரப்பைச் சாடுகிறார் என்பதை அவர் தெளிவுபடுத்தவில்லை.

“நான் பிரிட்டிஷ், ஜப்பானிய, சயாமிய, பிரிட்டிஷ் இராணுவ, அடுத்து சிவில் ஆட்சிகளை  பார்த்துள்ளேன். அடுத்து சுதந்திர மலேசியாவிலும் வாழந்துள்ளேன். என் கண்ணுக்கு எதிரே வரலாறு உருவாகியுள்ளது.

பொருத்தமற்ற உண்மையில்லாத அறிக்கைகளை மக்கள் விடுவதை நான் பார்க்கிறேன். அவர்கள் வரலாற்றைக் கண்டு பிடிக்காமல் இருப்பது நல்லது. வரலாற்று உண்மைகளை ஒப்புக் கொள்ள வேண்டும்.”

மலாயாவுக்கு ஆலோசகர்களாக இருந்த காலத்தில் பிரிட்டிஷ்காரர்கள் நடந்து கொண்ட முறையை மலேசியர்கள் மறக்கக் கூடாது என்றும் மகாதீர் அறிவுரை கூறினார்.

TAGS: