டெல்கோ சேவை வரிவிதிப்பைத் தள்ளி வைத்தது (விரிவாக)

தொலைத்தொடர்பு நிறுவனங்கள்(டெல்கோ) 6 விழுக்காடு சேவை வரியை அமல்படுத்தும் திட்டத்தைத் தள்ளிவைத்தன. சேவை வரி தொடர்பில் மலேசிய தொடர்பு, பல்லூடக ஆணையத்துடன் கலந்துரையாடப் போவதாகவும் அதுவரை சேவை வரி நடைமுறைப்படுத்தப்படாது எனவும் அவை அறிவித்தன.

கடந்த வியாழக்கிழமை அந்நிறுவனங்கள், கைபேசிகளுக்கான முன்கூட்டிக் கட்டணம் செலுத்திப் பெறப்படும் அட்டைகளுக்கும் சேவைகளுக்கும் செப்டம்பர் 15 தொடங்கி 6விழுக்காடு சேவை வரி விதிக்கப்படும் என்று கூறியிருந்தன.

இது பற்றி வாடிக்கையாளர்களுக்கும் குறுஞ்செய்தி வழியாக தெரிவிக்கப்பட்டு விட்டது.

சேவை வரி என்பது அச்சேவையைப் பயன்படுத்திக்கொள்ளும் வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டிய ஒரு வரி என்றும் அப்படித்தான் சேவை வரி தொடர்பான சட்டம் கூறுகிறது என்றும் டெல்கோ கூறியது.

1975ஆம் ஆண்டு சேவை வரிச் சட்டம், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் நடப்பு தொலைத்தொடர்புச் சேவைகளுக்கு விதிக்கும் கட்டணத்துக்கு ஏற்ற விகிதத்தில் சேவை வரியையும் விதிக்க வேண்டும் என்கிறது.

உணவகங்களிலும் தங்குவிடுதிகளிலும் உணவுப்பொருள்களுக்கு விதிக்கப்படும் சேவை வரி போன்றதுதான் இது.

அந்த வகையில் சேவை வரி என்பது புதிய ஒன்றல்ல. ஆனால்,1998-இல் இந்த வரி அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இதுவரை சேவை வரியை டெல்கோவே ஏற்றுக்கொண்டது.