மலேசியாவுடனான அகதிகள் ஒப்பந்தத்திற்கு புத்துயிரூட்ட கில்லர்ட் முயற்சி

ஆஸ்திரேலியாவில் புகலிடம் நாடியுள்ளவர்களை மலேசியாவுக்கு அனுப்புவதற்கு வகை செய்த மலேசியா ஆஸ்திரேலியா ஒப்பந்தத்திற்கு எதிராக அந்த நாட்டின் உயர் நீதிமன்றம் கடந்த மாதம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து அந்த ஒப்பந்தத்திற்கு புத்துயிரூட்டும் முயற்சியில் ஆஸ்திரேலியப் பிரதமர் ஜுலை கில்லார்ட் இறங்கியுள்ளார்.

அந்த நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து அவருடைய சிறுபான்மை அரசாங்கத்துக்கான ஆதரவும் சரிந்துள்ளது. கடந்த ஒர் ஆண்டாக பிரதமர் பொறுப்பிலிருந்து அவர் வீழ்த்தப்படக் கூடிய அபாயமும் தலை தூக்கியுள்ளது.

மலேசியாவுடனான ஒப்பந்தத்துக்கு தமது அரசாங்கம் புத்துயிரூட்டும் என்றும் உயர் நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டுள்ள ஆட்சேபனைகளை முறியடிக்கும் வகையில் குடிநுழைவுச் சட்டங்களைத் திருத்தும் என்றும் ஜில்லார்ட் இன்று கூறினார்.

“அடைக்கலம் நாடியவர்கள் சம்பந்தப்பட்ட பிரச்னைக்கு மலேசியா நல்ல தீர்வை அளித்தது. மக்கள் கடத்தப்பட்டனர். இப்போதும் அது தான் சிறந்த தீர்வாகும்,” என அவர் நாடாளுமன்றத்தில் நிருபர்களிடம் கூறினார்.

மலேசியாவும் ஆஸ்திரேலியாவும் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் கீழ் ஆஸ்திரேலியா அடைக்கலம் நாடியுள்ள 800 பேரை மலேசியாவுக்கு அனுப்பும். அதற்கு ஈடாக மலேசியாவிலிருந்து 4,000 அகதிகளை ஆஸ்திரேலியா ஏற்றுக் கொள்ளும்.

23 மில்லியன் மக்கள் வாழும் ஆஸ்திரேலியாவைப் படகுகள் மூலம் ஆண்டு தோறும் சில ஆயிரக்கணக்கான மக்கள் புகலிடம் நாடி தஞ்சமடைகின்றனர். அதனால் எல்லப் பாதுகாப்பு குறித்து அந்த நாட்டில் கடும் சர்ச்சை மூண்டுள்ளது.

ராய்ட்டர்ஸ்