பேரணியில் சரமாரி துப்பாக்கிச் சூடு 12 பேர் பரிதாப பலி

பாகிஸ்தானில் நடந்த பேரணியில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியதில், 12 பேர் பரிதாபமாக இறந்தனர். முப்பதுக்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்திய  பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகு உருது பேசும் மக்கள் பலர் பாகிஸ்தானில் குடியேறினர். இவர்களை உள்ளடக்கிய தனி மாநிலம் வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கராச்சியில் நேற்று பேரணி நடந்தது. அவாமி தெரிக் மற்றும் தடை செய்யப்பட்ட பீப்பிள்ஸ் அம்ன் கமிட்டியினர் இந்த பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

லியாரி பகுதியில் இருந்து கராச்சி பிரஸ் கிளப் வரை பேரணி நடத்த திட்டமிடப்பட்டது. இதில் ஏராளமானோர் பங்கேற்று ஊர்வலமாக சென்றனர். அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் திடீரென சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 12 பேர் பரிதாபமாக இறந்தனர். முப்பதுக்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர்.

கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன, வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. இதனால் பதற்றம் ஏற்பட்டது. உடனடியாக பாதுகாப்புப் படையினர் அங்கு குவிக்கப்பட்டனர்.