இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட மசூதிகள் கணக்கெடுப்புக்கு முஸ்லிம்கள் எதிர்ப்பு

இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட மசூதிகள் மற்றும் மதரஸாக்களை கணக்கெடுக்கும் போலீஸாரின் முயற்சிக்கு அங்குள்ள முஸ்லிம்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட மசூதிகள், மதரஸாக்கள் எண்ணிக்கையை அறியும் பொருட்டு, அவை பற்றிய தகவல்களைத் தருமாறு முஸ்லிம் மத விவகாரத் துறைக்கு குற்றப் புலனாய்வுத் துறை வேண்டுகோள் விடுத்திருந்தது.

இதனை அறிந்த முஸ்லிம் தலைவர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்தத் தகவல் சேகரிப்பில் “உள்நோக்கத்துடன்’ குற்றப் புலனாய்வுத் துறை ஈடுபடுவதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.

இலங்கையின் மூத்த அமைச்சரான ஏ.எச்.எம். ஃபெற்ஜி, இது பற்றி காவல்துறை ஐ.ஜி.யிடம் பேசப்போவதாகக் கூறியுள்ளார். ராஜபட்ச கூட்டணி அரசில் இடம்பெற்றுள்ள “ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்’ தலைவர் ஹசன் அலி, இந்த விவகாரம் அதிபர் மகிந்த ராஜபட்சவின் பார்வைக்கு கொண்டுசெல்லப்படும் என அறிவித்தார்.

அதேநேரத்தில், மசூதிகள் மற்றும் மதரஸாக்கள் குறித்து குற்றப் புலனாய்வுத் துறை தகவல் சேகரிப்பில் ஈடுபட்டதாகக் கூறப்படுவதை காவல்துறை செய்தித் தொடர்பாளர் அஜீத் ரோகண மறுத்துள்ளார்.

“மத்திய மாகாணத்தில் தம்புள்ள என்ற இடத்தில் உள்ள மசூதியை இடம் மாற்ற வேண்டும் எனக் கோரி புத்தமதத் துறவிகள் மேற்கொண்ட போராட்டப் பின்னணியில் இந்த விவகாரத்தையும் முஸ்லிம் தலைவர்கள் பார்க்கின்றனர். உண்மையிலேயே அனைத்து மசூதிகளும் மதரஸாக்களும் பதிவு செய்யப்பட்டுள்ளனவா என்பதை அறிந்து கொள்வதே குற்றப் புலனாய்வுத் துறையின் நோக்கம். பதிவு செய்வது என்பது இயல்பான சட்ட நடைமுறையாகும்’ என்று அரசின் ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினரான ஏ.எச்.எம். ஆஜ்வர் தெரிவித்தார்.

இந்நிலையில், சட்டப்படி பதிவு செய்து விடுமாறு அனைத்து முஸ்லிம் மத அமைப்புகளையும் முஸ்லிம் மத விவகாரத் துறையின் இயக்குநர் ஏ.எச்.எம். நவாவி அறிக்கை ஒன்றின் மூலம் கேட்டுக்கொண்டுள்ளார்.

TAGS: