அரசாங்கம்: மலேசியா, உலக அளவிலான பேச்சு சுதந்திர தரத்தை பூர்த்தி செய்கிறது

மலேசியர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள பேச்சு, தகவல் சுதந்திரம் அனைத்துலகத் தரங்களுக்கு இணையானது என அரசாங்கம் தேசிய மனித உரிமை ஆணையத்திடம் கூறியுள்ளது.

கடந்த மக்களவைக் கூட்டத் தொடரில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சமர்பிக்கப்பட்ட 2010ம் ஆண்டுக்கான சுஹாக்காம் அறிக்கைக்கு அரசாங்கம் அளித்துள்ள 69 பக்க பதிலில் அவ்வாறு  தெரிவிக்கப்பட்டுள்ளது.

விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள், அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனத்துக்கு ஏற்ப அமைந்துள்ளன என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

“மற்றவர்களுடைய தோற்றம் , தேசியப் பாதுகாப்பு, பொது ஒழுங்கு, தார்மீகக் கோட்பாடுகள்
ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு சட்டங்கள் மூலம் உரிமைகளை (பேச்சு சுதந்திரம்) கட்டுப்படுத்தலாம் என அந்த பிரகடனத்தின் 19(3) பிரிவு கூறுகிறது.”

அதன் அடிப்படையில் பேச்சு, கருத்து சுதந்திரத்தை மீறுவதாக சுஹாக்காம் கருதும் சட்டங்கள் நியாயமானவையே என்றும் அரசாங்கம் தெரிவித்தது.

கட்டுப்படுத்தப்பட்ட பேச்சு சுதந்திரம் அனுமதிக்கப்படுகிறது

“பேச்சு, கருத்துச் சுதந்திரம் முழுமையானது அல்ல. மலேசியா, பல இனங்களைக் கொண்ட, பல சமயங்களைக் கொண்ட நாட்டு என்பதை ஒருவர் நினைவில் வைத்திருக்க வேண்டும்.”

“அவதூறுகள், மருட்டல்கள், தேசத் துரோக அறிக்கைகள் போன்ற தவறாகப் பயன்படுத்தப்படும் பேச்சுச் சுதந்திரம், சமூகங்களுக்கு இடையில் உறவுகளை பாதிக்கிறது. தேசியப் பாதுகாப்புக்கும் மருட்டலை ஏற்படுத்துகிறது,” என்றும் தனது பதிலில் அரசாங்கம் கூறியுள்ளது.

“அரசியலமைப்பின் 10(1)(எ) பிரிவு மலேசியர்களுக்குப் பேச்சு சுதந்திரத்தை வழங்குவதை அரசாங்கம் அறிந்துள்ள போதிலும் அந்த உரிமையை சட்டம் மூலம் கட்டுப்படுத்துவதற்கும் இன்னொரு அரசியலமைப்புப் பிரிவு இடம் அளிக்கிறது.”

“அந்த 10(2)வது பிரிவிற்கு இணங்க, 1984ம் ஆண்டுக்கான அச்சுக்கூட, வெளியீடுகள் சட்டம், 1972ம் ஆண்டுக்கான அதிகாரத்துவ ரகசியச் சட்டம், 1948ம் ஆண்டுக்கான தேசத் துரோகச் சட்டம், 1971ம் ஆண்டுக்கான பல்கலைக்கழக, பல்கலைக்கழகக் கல்லூரிச் சட்டம், 1960 ஆண்டுக்கான உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் ஆகியவை இயற்றப்பட்டன.”

“மலேசியாவில் பேச்சு சுதந்திரமும் தகவல் சுதந்திரமும் தவறாகப் பயன்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்வதும் தேசியப் பாதுகாப்பையும் ஒழுங்கு முறையையும் நிலை நிறுத்துவதும் அந்தச் சட்டங்களின் நோக்கம்,” என்றும் அது குறிப்பிட்டது.

“அரசாங்கம் அதனைக் கருத்தில் கொண்டு அரசாங்கம் ஊடக ஆலோசனை மன்றத்தை முன்மொழிந்துள்ளது. ஆனால் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.”  

“மலேசியாவைப் போன்ற பல இன, பல சமய, பல பண்பாடுகளைக் கொண்ட ஒரு நாட்டில் நெறிமுறையுடன் இயங்கும் ஊடகத் துறை அவசியம் என அரசாங்கம் கருதுவதாகவும் அந்தப் பதிலில் கூறப்பட்டுள்ளது.