தப்பி ஓடிய நித்தியை பிடிக்க முதல்வர் உத்தரவு! ஆசிரமத்திற்கு சீல்!

கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருக்கு அருகில் இருக்கும் சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தாவின் ஆசிரமத்தை மூடும் படியும், நித்தியானந்தாவை கைது செய்யும்படியும் கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

நித்தியானந்தாவிடம் முன்பு சீடராக இருந்த இரண்டுபேர் அவர் மீது அளித்த பாலியல் புகார்கள் தொடர்பாக செய்தியாளர்கள் சிலர் அவரிடம் கேள்வி கேட்டதைத்தொடர்ந்து உருவான மோதலைத் தொடர்ந்து, நித்தியானந்தா மீதும் அவரது சீடர்கள் மீதும் புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக செய்தியாளர்களை தாக்கிய புகார்களில் குற்றம் சாட்டப்பட்ட நித்தியானந்தாவின் சீடர்கள் கைது செய்யப்பட்டனர். ஆனால் நித்தியானந்தா ஆசிரமத்தில் இல்லை என்பதால் அவர் கைது செய்யப்படவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

நித்தியானந்தாவிடம் முன்பு பணியாற்றிய பெண்ணும், ஆணும் தங்களை நித்தியானந்தா பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கொடுத்த புகார்கள் தொடர்பான செய்திகள் உள்ளூர் தொலைக்காட்சியில் கடந்த வாரம் ஒளிபரப்பானதை தொடர்ந்து கர்நாடகத்தில் பெரும் பரபரப்பு உருவானது.

பல்வேறு கர்நாடக அமைப்புக்கள் நித்தியானந்தாவுக்கு எதிராகவும் அவரது ஆசிரமத்திற்கு எதிராகவும் போராட்டங்களை முன்னெடுத்தன. நித்தியானந்தா ஆசிரமத்தை கர்நாடக அரசு கைப்பற்ற வேண்டும் என்றும் நித்தியானந்தாவை கைது செய்யவேண்டும் என்றும் கன்னட அமைப்புக்கள் கோரிக்கை வைத்துவருகின்றன.

இதன் விளைவாக ஏற்பட்ட சட்ட ஒழுங்குப் பிரச்னை குறித்து உள்ளூர் மாவட்ட ஆட்சியரும், காவல்துறை அதிகாரிகளும் கர்நாடக அரசின் கவனத்துக்கு கொண்டு வந்தனர். இந்த விவகாரம் குறித்து விசாரித்த நித்தியானந்தா ஆசிரமம் அமைந்திருக்கும் ராமநகர மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர் கர்நாடக முதல்வர் சதானந்த கவுடாவை திங்களன்று காலை நேரில் சந்தித்து தங்களின் விசாரணை அறிக்கைகளை தாக்கல் செய்தனர்.

இந்த அறிக்கைகளை பரிசீலித்த முதல்வர் நித்தியானந்தா ஆசிரமத்தை மூடுமாறும் தலைமறைவாக உள்ள நித்தியானந்தாவை கைது செய்யும்படியும் உத்தரவிட்டார்.

ஏற்கெனவே பாலியல் குற்றச்சாட்டு வழக்குகளில் கைதாகி பிணையில் வெளியிலிருக்கும் நித்தியானந்தாவின் ஜாமீனை ரத்து செய்யவும் கர்நாடக அரசு முயற்சி எடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நித்தியானந்தா இப்போது எங்கே இருக்கிறார் என்று தெரியாத நிலையில் அவரைத் தேடும் பணியில் கர்நாடக காவல்துறை ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது.