வறுமையில் நான்கு கோடியே 60 இலட்சம் அமெரிக்கர்கள்!

அமெரிக்காவின் பொருளாதாரம் மிகக் குறைந்த வேகத்தில் வளர்வதால் அங்கு வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அந்நாட்டின் அண்மைய கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.

அமெரிக்க மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பிரிவின் இயக்குனர், நேற்று முன்தினம் அமெரிக்காவில் வறுமையில் வாடும் மக்களின் எண்ணிக்கை பற்றிய புள்ளி விவரங்களை வெளியிட்டார்.

அதன்படி, கடந்தாண்டு இறுதிவரை ஒட்டு மொத்த மக்கள் தொகையில் 15.1 சதவீதம் பேர் அதாவது நான்கு கோடியே 60 இலட்சம் பேர் வறுமையில் வாடுகின்றனர். நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பம் ஆண்டுக்கு 22,113 டாலர் சம்பாதித்தால் அக்குடும்பம் வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருப்பதாக அமெரிக்காவில் கணக்கிடப்படுகிறது.

கடந்த 52 ஆண்டுகளில் தற்போதுதான் வறுமையில் வாடும் மக்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளது. கடந்தாண்டு மட்டும் நடுத்தரப் பிரிவில் இருந்து 26 இலட்சம் மக்கள் வறுமையில் வீழ்ந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. அதேபோல் நடுத்தர வர்க்கப் பிரிவு மக்களின் வருமானம் கடந்தாண்டின் இறுதியில் 2.3 சதவீதம் குறைந்துள்ளது.

நடுத்தர வர்க்க குடும்பங்களில் வருமானம் கணிசமான அளவில் குறைந்துள்ளதால் நாட்டில் 15 வயது முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். 25-ல் இருந்து 34 வயதுக்குட்பட்டோரில் 45.3 சதவீதம் பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளனர்.