ஈழப்போர் என்பது பிரபாகரன் மூட்டிய அணையா நெருப்பு: காசி ஆனந்தன்

ஈழப்போர் என்பது பிரபாகரன் மூட்டிய நெருப்பு, அது எப்போதும் அணையாது என ஈழத்து புரட்சி கவிஞர் காசி ஆனந்தன் தெரிவித்தார்.

ஈழ விடுதலைப் போராட்டமானது எண்ணில் அடங்காத பல இழப்புகளை சந்தித்துள்ளது. அது இந்திய விடுதலைப் போராட்டத்தை விட மகத்தானது என்று தமிழகத்தின் விழுப்புரத்தில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் காசி ஆனந்தன் பேசினார்.

இந்திய விடுதலைப் போரில் சுமார் 30,000 பேர் இறந்து இருப்பார்கள். ஆனால் ஈழ மண்ணில் நடந்த போரில் மூன்று லட்சத்திற்கு மேல் இறந்துள்ளனர்; தங்களது உயிர்களை அர்ப்பணித்துள்ளனர்.

அப்போது விமானத்தில் வந்து யாரும் குண்டு வீசவில்லை. இப்போது அப்படியில்லை, அதிகமாக தமிழர்கள் வாழ்ந்த பூமியில் அதிகமான அளவில் குண்டு போட்டு சாகடித்துள்ளனர்.

இந்திய போரில் யாரும் விதவையாக்கப்படவில்லை. மாறாக இலங்கையில் 89,000 பெண்கள் விதவையாக்கப்பட்டுள்ளனர்.

இந்த இழப்புகளுக்கு இந்தியாவும் ஒரு காரணம் என்றால் அதை யாராலும் மறுக்க முடியாது.

ஆனால், அங்குள்ளவர்கள் இன்னும் உறுதியாக இருக்கிறார்கள். புலம்பெயர்ந்த தமிழர்களாகிய நாங்களும் உறுதியாக இருக்கிறோம். ஈழப்போர் என்பது பிரபாகரன் மூட்டிய நெருப்பு, இந்த போராட்டம் தொடர்ந்து செல்ல எங்களுடன் உங்கள் கைகளை கோர்த்துக்கொள்ளுங்கள் என்று காசி ஆனந்தன் மேலும் பேசினார்.