நஜிப்பை நம்பத்தேவையில்லை!

கா. ஆறுமுகம் அவர்களின் ஆய்வுக் காணல்  (நஜிப் நல்லவரானால் அம்னோவுக்கு எதிரியாவார்)  அறிவர்ர்ந்த எந்தவிதமான சந்தேகத்துக்கும் இடமில்லாத தெளிவான உண்மைகள். காலங் காலமாக இந்தியர்களின் (தமிழர்களின்) இன்னல்களுக்கு விடிவே இல்லாமல் இப்படித்தான் கடந்துகொண்டிருக்கிறது.

வெள்ளைக்காரன் காலத்திலும் இதுதான் நடந்தது. கள்ளுக்கடையை கட்டிக்கொடுத்தான். மாதத்திற்க்கு ஒரு சினிமா போட்டான். கோயிலைக் கட்டிக் கொடுத்தான். தீமிதி திருவிழா கொண்டாடினான். அதே கோயில் கொட்டகையில் பள்ளிக்கூடத்தையும் உருவாக்கிக் கொடுத்து அந்தத் தோட்டத்துக்குள்ளேயே கட்டிப்போட்டான்.

துன் வீ. தி. சம்பந்தனார் காலத்தில், “குருவிக்கும் ஒரு கூடு உண்டு, நமக்கு ஒரு வீடு வேண்டாமா?” என்ற சுலோகத்தை முழக்கம் செய்து கொஞ்சம் கண்ணைத் திறந்தார். அவரை நம்பி பணம் போட்டவர்கள் இன்றுவரையில் வீணாகிப் போய்விடவில்லை.
ஆனால், அந்தச் சமயத்திலும் அந்த மாபெரும் மனிதருக்கு வந்த இன்னல்கள்தான் எத்தனை எத்தனை?

நாம் அனைவரும் சீனமக்களிடம் ஆலமர விழுதுகளாய் கோலோச்சிக் கொண்டிருக்கும் ஒற்றுமை என்ற மிகப் பெரிய சக்தியை நமக்கும் வேண்டும் என்ற் யாசகத்தை அவர்களை பார்த்து யாசிக்கவேண்டும். குறைகள் ஆட்சிபீடத்தில் இல்லை. நம்மிடம்தான் உள்ளது. அதை முதலில் களையவேண்டும். வெறுமனே ஒற்றுமை என்று முகத்துக்கு நேரே சொல்லிவிட்டு கொல்லைப்புறமாக ஆட்சியாளர்களிடம் மானியத்தை யாசகமாக வாங்கிக்கொள்ளக்கூடாது. அப்படியே யாசகம் பெற்றாலும் பொது நன்மைக்கு உரியதாக இருக்கவேண்டும்.

ஆனால், நடப்பது என்ன? அவரவர் இஷ்டத்துக்கு பட்டம் விட்டுக் கொண்டிருப்பதைத்தான் நாம் பார்துகொண்டிருக்கின்றோம். நாம் முதலில் மாறவேண்டும். மாற்றம் நம்மைத் தேடி வரும். ஒரே மலேசியாவின் கொள்கை என்ன? அவரவர் இனத்தானிடம் அவரவர் கொடுக்கல் வாங்கல் வைத்துகொண்டால் சீனர்களைப் போல் நம்மை நம்பியே நாம் மென்மேலும் உயரலாம். அதைத்தானே சீனனும் மலாய்க்காரனும் வாழ்வியலாக்கிக்கொண்டான்.

ஒரு தமிழன் ஒரு தொழிலை ஆரம்பிக்கும் போதே அவன் நம் இனத்தை நம்பித்தான் தொடங்குகின்றான். ஆனால், இந்தத் தமிழன் என்ன செய்கிறான் தமிழனைத் தாண்டிச் சென்று அடுத்தவனிடம்தானே வாங்குகிறான்.

நம்முடைய பார்வையையும் கொள்கையையும் சரிப்படுத்துவோம். எல்லாம் சரியாகிவிடும். உங்கள் வீட்டுக் குழந்தை அழுதால் கொய்தியோ வெண்டுமா? கொய்த்தியோ சூப் வேண்டுமா என்று கேட்காதீர்கள். வடை வேண்டுமா? தோசை வேண்டுமா? இட்லி வேண்டுமா என்று கேளுங்கள். நமக்குள் நாமே ஒரு பிணைப்பை ஏற்படுத்திகொடுக்க வகை செய்யும். நம்மவர்களின் வாழ்வாதாரத்துக்கு ஒரு வழியை ஏற்படுத்திக்கொடுக்கும். நாம் என்றும் எவரிடமும் கை ஏந்தவேண்டியதில்லை.

-ஊரணி