வழக்குரைஞர் மன்றம் தாஜுடின் விவகாரத்தில் ஜிஎல்சி-க்களை எச்சரிக்கிறது

தாஜுடின் ராம்லியுடனான விவகாரத்தில் நீதிமன்றத்துக்கு வெளியில் தீர்வு காணும் போது ஜிஎல்சி என்ற அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனங்களின் இயக்குநர் வாரிய உறுப்பினர்கள், தங்களது கடமைகளைச் செய்ய தவறி விட்டதாகக் கண்டு பிடிக்கப்பட்டால் கவனக் குறைவாக இருந்ததற்காக நீதிமன்ற வழக்குகளை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என வழக்குரைஞர் மன்றம் எச்சரித்துள்ளது.

ஒரு காலத்தில் மலேசிய விமான நிறுவன இயக்குநராக இருந்த தாஜுடினுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளைத் தொடருவதா இல்லையா என்பதை முடிவு செய்வதற்கு முன்னர் அந்த ஜிஎல்சி இயக்குநர்கள் தங்களது பொறுப்புக்களுக்கு ஏற்ப இருக்கிறதா என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும் வழக்குரைஞர் மன்றத் தலைவர் லிம் சீ வீ கேட்டுக் கொண்டார்.

“அவர்கள் தங்கள் கடமைகளிலிருந்து தவறினால் கவனக் குறைவாக நடந்து கொண்டதாக எந்த ஒரு பங்குதாரரோ அல்லது அடுத்து வரும் இயக்குநர்களோ வழக்குத் தொடரும் வாய்ப்பு உள்ளது.”

“ஆகவே தாஜுடினுக்கு எதிராக வழக்கு மீட்டுக் கொள்ளப்படுவது ஜிஎல்சி இயக்குநர்கள் கடமையை மீறி விட்டதாகக் கருதப்படலாம்”, என லிம் எச்சரித்தார். இயக்குநர்கள் என்னும் முறையில் அவர்கள் பங்குதாரரர்களுக்குக் கடமைப்பட்டவர்கள் என்றார் அவர்.

“என்றாலும் கடமைகள் மீறப்படவில்லை என பங்குதாரர்கள் தீர்மானம் நிறைவேற்றி,  மோசடி அல்லது சட்டவிரோதம் ஏதும் இல்லாமல் இருந்தால் இயக்குநர்கள் வழக்கை மீட்டுக் கொள்ளலாம்”, என அவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

தாஜுடின் விவகாரத்தை நீதிமன்றத்துக்கு வெளியில் தீர்த்துக் கொள்வது பற்றி ஆராயுமாறு பிரதமர்துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸ், ஜிஎல்சி-க்களுக்குக் கடிதம் எழுதியுள்ளது பற்றி லிம் கருத்துரைத்தார்.