“கிரீஸ் பூதங்கள்”: அச்சத்தில் உறைந்து போயுள்ள மக்கள்

இலங்கையின் பல பகுதிகளிலும் “கிரீஸ் பூதங்கள்” என்ற மர்ம மனிதர்களின் தொல்லையால் மக்கள் அச்சத்தில் உறைந்து போயுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.

இலங்கையின் மலையகப் பகுதிகளில் அண்மைக்காலமாக கிரீஸ் பூதம் எனும் மர்ம மனிதர்கள் பற்றிய அச்சம் அதிகரித்து வந்த நிலையில் தற்போது இந்த அச்சம் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் கிழக்கு மாகாணத்திலும் பரவியுள்ளது.

நேரில் கண்ட சாட்சியங்களின் படி உடல் முழுவதும் கிரீஸ் எண்ணையை பூசிக்கொண்டு, கொள்ளையடித்தல், பெண்களை சீண்டுதல், பொதுமக்களைத் தாக்குதல் போன்ற குற்றச்செயல் நடவடிக்கைகளில் ஒரு மர்ம கும்பல் திட்டமிட்டு மேற்கொண்டு வருவதாகவும், இவர்களுக்குப் பிண்ணனியில் இராணுவத்தினர் உள்ளதாகவும் மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இதனிடையே, இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தின் நவற்குடா பிரதேசத்தில் சாலையில் சந்தேகத்திக்கிடமாக நடமாடிய மர்ம மனிதனை பொதுமக்கள் துரத்திப்பிடித்து கடுமையாகத் தாக்கியுள்ளனர். இச்சம்பவம் இன்று (13.08.2011) காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மர்ம மனிதன் பிடிபட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த இராணுவத்தினர் அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மீது தடியடி மேற்கொண்டு மக்களைக் கலைத்தனர். இதனால் இராணுவத்தினருக்கும் பொதுமக்களுக்குமிடையே முறுகல் நிலை ஏற்பட்டதுடன் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலைகளில் டயர்களைப் போட்டு எரித்து தமது எதிர்ப்பைக்காட்டினர்.

இதுபோன்ற சம்பவங்களினால் மேலும் பல பிரதேசங்களில் பாதுகாப்பு பிரிவினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே ஏற்பட்ட முறுகல் நிலை கடும் பதற்றத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சில இடங்களில் ஊரடங்கு நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது.

மக்களை மிகவும்  அச்சத்தில் ஆழ்தியுள்ள இந்த விவகாரம் மக்களை திசைதிருப்ப இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள மறைமுக செயற்பாடு என பலர் கருதுகின்றனர்.