ஒரே மலேசியா கொள்கை இந்தியர்களின் ஏழ்மையை ஒழிக்குமா?

மரகதம்: என்ன கோமாளி நலமா! எங்கும் எதிலும் ஒரே மலேசியாதான். இந்த சத்து மலேசியா கொள்கை வழி இந்தியர்களின் ஏழ்மை ஒழியுமா?

கோமாளி: அம்மண தேசத்தில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன் என்பார்கள். சொன்னால் நம்ப மாட்டாய் மரகதம் உலகமே இன்று அம்மணமாய்தான் உள்ளது. அதனால்தான் யாராவது ஏழ்மையை ஒழிக்க முடியும் என்றால் அவர்கள் பைத்தியம்தான். அரசியல்வாதிகள் அவலை நினைத்துக்கொண்டு உரலை இடிப்பவர்கள் மட்டுமல்ல, கடைந்த மோரிலும் வெண்ணெய் எடுப்பவர்கள்.

கோமாளி விழியில் விளக்கெண்ணெய் போட்டு தேடியும்  இந்தியர்களின் ஏழ்மை ஒழிப்பு வழிமுறைகளை நஜிப்பின் சத்து மலேசியா கொள்கையில் கண்டு பிடிக்க முடியவில்லை.

மரகதம், உன்னை சுற்றிப்பார். உனது வீட்டு மின்சாரம் இன்று தனியார் மயம். அதன் தலைமை நிர்வாகிக்கு மாதம் சுமார் ரிம 100,000 சம்பளம். போன ஆண்டு போனஸ் மட்டும் 38 மாத சம்பளம். இது யாருடைய சொத்து? நாள்தோரும் டோல் கட்டாமல் பயணிக்க இயலாது. சாலைகள் யாருடையது? கோலாலம்பூரையும் கிள்ளானையும் இணைக்கும் கூட்டரசு நெடுஞ்சாலையில் உள்ள இரண்டு டோல் சாவடிகள் நாள் ஒன்றுக்கு ரிம16 லட்சத்தை மக்களிடமிருந்து கறக்கிறார்கள். அதேபோல்தான் நீர் விநியோகம், தொலைபேசி, மருத்துவம், உயர்க்கல்வி போன்றவை.

உலகமே அம்மணம் என்றேனே, அதுக்கும் விளக்கம் உண்டு. கடந்த 30 ஆண்டுகளில் ஏழை – பணக்காரர் இடையே உள்ள இடைவெளி உலக அளவில் தொடர்ந்து விரிவாக்கம் கண்டு வருகிறது. நாம் அனவரும் சேர்ந்து உருவாக்கும் உற்பத்திகள்தான் உலகத்தின் பணம் அல்லது சொத்து மதிப்பு.

மரகதம், நீயும் நானும் உலகில் உள்ள மற்றவர்களும் எதையுமே செய்யாமல் வீட்டில் இருந்தால் என்ன நடக்கும்? சிறுது காலத்திலேயே உணவுப் பஞ்சம், நோய் என்ற வகையில் பணம் உள்ளவன் ஏழை இப்படி எல்லாருமே இறக்க நேரிடும்.

எனவே உற்பத்திதான் உயிர் வாழ்வதற்கு அடித்தளம். அதற்கு மூலதனமும் உழைப்பும் வேண்டும். மூலதனமும் உழைப்பும் சேர்த்தால்தான் உற்பத்தி கிடைக்கும்.

மூலதனத்தை வைத்திருப்பவர்கள் முதலாளிகள். உழைப்பை கொடுப்பவர்கள் தொழிலாளார்களாக உள்ள மக்கள். ஆனால் உற்பத்தியினால் கிடைக்கும் பணம் அல்லது சொத்து மதிப்பு எப்படிப் பங்கிடப்படுகிறது என்பதுதான் கேள்வி.

1970-ஆம் ஆண்டுமுதல் 2008-ஆம் ஆண்டு வரையில் உலக அளவில் உழைக்கும் தொழிலாளர்களுக்கு கிடைத்த பங்கு ஆண்டுக்கு சுமார் ரிம 5,000 கோடி குறைந்துள்ளது. அப்படி என்றால் முதாலாளிகளின் சொத்து அதே அளவில் ஆண்டுக்கு ஆண்டு கூடி வருகிறது என்று பொருள்.

மரகதம், கோமாளி என்ன சொல்கிறேன் என்றால், உலக அளவில் மாறியுள்ள பொருளாதார அமைப்பு முறை உழைப்பவர்களை கசக்கி பிழியும் தன்மை கொண்டதாகிவிட்டது. ஆனால், மக்களை மேலும் அடிமைப்படுத்தும் நிலமையும் உண்டு.

அதற்கு பெயர்தான் கடன்.

உழைப்பவர்கள் கடன் வழி வாழ முடியும் என்ற வியூகம்தான் புதிய யுக நிதி நிர்வாகம். கார் வாங்க கடன், போன் வாங்க கடன், இப்படி வீடு, கல்வி, தள்வாடப்பொருட்கள் வாங்க கடன் கொடுத்து மேலும் மக்களை உறிஞ்சுகிறது இந்த அமைப்புமுறை. கடன் வாங்கியவர்கள் அதைக்கட்ட மேலும் உழைக்க வேண்டும், ஓவர் டைம் செய்ய வேண்டும். முடிவில் இயந்திரமாக இயங்க வேண்டும். மலேசியாவில் இவ்வகை கடன் அற்ற நபர் யாருமேயில்லை என்ற நிலைதான் மக்களிடையே உள்ளது.

அதாவது இவ்வளவு காலம் உழைத்தும் எதற்காக நாம் ஒவ்வொருவரும் கடனில் வாழ்கிறோம். அல்லது பணம் கொண்டவர்கள் நம்மை எப்படி தொடர்ந்து கடனாளியாகவே வைத்துள்ளார்கள்?

இதைத்தான் புது தாராளமயக் கொள்கை (neoliberalism) என்பார்கள். மகாதீர், அப்துல்லா, நஜிப் ஆகியோர் நமது பொருளாதாரத்தை இக்கொள்கையின் கீழ்தான் வழிநடத்துகிறார்கள். அதில்தான் சொத்து சேர்க்கிறார்கள்.

அதன் முதாலாளிகள்தான் கட்சி அரசியலின் பைனான்சியேர்ஸ், நாட்டு பொருளாதாரத்தின் ஆலோசகர்கள்.

இப்போ நடப்பதெல்லாம் சனநாயகம் என்ற பெயரில் மக்களின் ஓட்டுக்களை வாங்கி மக்களையே ஏமாற்றுவதுதான் நடைமுறையாகியுள்ளது.

நல்ல ஆட்சிவரும் என்ற ஏழைகளின் நிலை கடல் வற்றினால் கருவாடு தின்னலாம் என்று உடல் வற்றி செத்த கொக்குமாதிரிதான். மேலும் நமது நாட்டில் சிறுபான்மையான இந்தியர்களின் நிலை இனவாத அரசியல் முறையால் மேலும் பலவீனமாகி வருகிறது.

தேர்தலில் நமது நிலையானது தெளிவற்றவகையிலேயே உள்ளது. பரிசு கூடைகளையும், கோழி ஆட்டு பிரியானிகளையும் கொடுத்து நம்மை விலை பேசுகிறார்கள். இதில் இளகும் மக்களும் உண்டு. இளகின இரும்பைக் கண்டால் கொல்லன் ஓங்கி அடிப்பான் என்பது போல இதனால் பாதிப்படைவதும் நாம்தான்.

மரகதம், இரண்டு வீட்டிலும் கலியாணம், இடையிலே செத்ததாம் நாய்க்குட்டி என்ற நிலைமைக்கு நாம் வந்து விடக்கூடாது. தேர்தலுக்கு முன்பே நமது ஏழ்மைக்கு உகந்த தீர்வைத்தேடவேண்டும்.