டிஎபி: தாஜுடினைக் காப்பாற்றும் முயற்சி மிகப் பெரிதாக இருக்கும்

முன்னாள் மலேசிய விமான நிறுவனத் தலைவர் தாஜுடின் ராம்லிக்கு எதிராக பல ஜிஎல்சி என்ற அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனங்கள் தொடுத்துள்ள வழக்குகளில் அரசாங்கம் தலையிட்டுள்ளதாகக் கூறப்படுவது, “அம்னோ புத்ராக்களைக் காப்பாறும் முயற்சிகள் அனைத்தையும் காட்டிலும் மிகப் பெரியது” என டிஎபி குற்றம் சாட்டியுள்ளது.

“அந்த வழக்குகளை மீட்டுக் கொள்வதால் கூட்டரசு அரசாங்கத்துக்கு எப்படி பில்லியன் கணக்கான ரிங்கிட் மிச்சப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதைக் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியவில்லை. ஏனெனில் ஈராயிரத்தாவது ஆண்டு தாஜுடினும் மலேசிய விமான நிறுவனமும் பில்லியன் கணக்கான ரிங்கிட் செலவில் மீட்கப்பட்டதைக் கருத்தில் கொண்டால் வரி செலுத்தும் மலேசியர்களே பாதிக்கப்படுகின்றனர்,” என டிஎபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் விடுத்த அறிக்கை கூறியது.

அரசாங்கம் தாஜுடினுக்கு தீர்வு காண்பது மீது பேச்சு நடத்தவில்லை என்றும் வெறும் “விவாதங்களை” மட்டுமே நடத்துவதாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அளித்துள்ள விளக்கத்தையும் லிம் சாடினார். அது தாஜுடினை காப்பாற்றும் முயற்சி என்று லிம் வருணித்தார்.

“கிட்டத்தட்ட 10 பில்லியன் ரிங்கிட் இழப்பை மலேசிய விமான நிறுவனத்துக்கும் கூட்டரசு கருவூலத்துக்கும் வரி செலுத்தும் மக்களுக்கு ஏற்படுத்திய பின்னர், ஜிஎல்சி-க்கள் தொடுத்துள்ள எல்லா சிவில் வழக்குகளுக்கும் ‘உலக அளவில் தீர்வு’ காணுமாறு அரசாங்கத்தை நெருக்கும் வலிமையை தாஜுடின் இன்னும் பெற்றுள்ளார் என நஜிப்பும் நஸ்ரியும் கருதுகின்றனரா?”

“தாஜுடின் மீது வழக்குப் போட்டுள்ள மலேசிய விமான நிறுவனம், டெலிகோம் மலேசியா போன்ற அமைப்புக்களின் வழக்குரைஞர்கள் தங்களது வழக்குகளை பிரபலமான அம்னோ வழக்குரைஞரிடம் ஒப்படைக்க வேண்டுமா?” என்றும் லிம் வினவினார்.

தாஜுடினுடன் தீர்வு ஒன்றைக் காணுமாறு ஜிஎல்சி-க்களுக்கு கடிதம் எழுதியிருப்பதை சட்டத் துறைக்குப் பொறுப்பான அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸ் கடந்த வியாழக்கிழமை ஒப்புக் கொண்டார்.

அந்த செல்வந்தருக்கு எதிரான வழக்குகளை கைவிடுமாறு மட்டுமே தாம் “ஆலோசனை” கூறியதாக அவர் சொன்னார்.

ஈராயிரத்தாவது ஆண்டு மலேசிய விமான நிறுவனத்தில் தாஜுடினுக்கு இருந்த 29.09 விழுக்காடு பங்குகளை கொள்முதல் செய்வதற்கு ஒரு பங்குக்கு எட்டு ரிங்கிட் கொடுத்ததை லிம் நினைவு கூர்ந்தார். அந்த விலை அன்றைய சந்தை விலையை விட 4 ரிங்கிட் 32 சென் அதிகமாகும்.

“இப்போதைய தாஜுடின் தலையீடு, ‘அம்னோ புத்ராக்களை காப்பாற்றும் முயற்சிகள் அனைத்தையும் விட மிகப் பெரியது’ என்பதற்கான அறிகுறிகளைக் கொண்டுள்ளன.”

“அது மீட்கும் முயற்சியைப் போன்று தோன்றுகிறது. அது மீட்கும் முயற்சியைப் போன்று தொனிக்கிறது. ஆனால் அது மீட்கும் முயற்சி அல்ல…” என்றார் லிம்.

“அது காப்பாற்றும் முயற்சி அல்ல என்பதை பொது மக்களையும் வரி செலுத்துவோரையும் நம்ப வைப்பதற்கு நஜிப்பும் நஸ்ரியும் சம்பந்தப்பட்ட எல்லாத் தகவல்களையும் வழங்க வேண்டும்”, என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.