ஸாக்கி: பேராக் நெருக்கடியில் சம்பந்தப்படவில்லை

முன்னாள் தலைமை நீதிபதி ஸாக்கி அஸ்மி, பேராக்கின் அரசமைப்பு நெருக்கடி தொடர்பில் எந்த வழக்கிலும் தாம் சம்பதப்பட்டதில்லை என்றும் அரசியல் கட்சிகள் சம்பந்தப்பட்ட வழக்கு எதுவும் தம் விசாரணைக்கு வந்ததில்லை என்றும் கூறுகிறார்.

ஒரு காலத்தில் அம்னோ சட்ட ஆலோசகராகவும் அதன் ஒழுங்கு வாரியத் தலைவராகவும் இருந்த அஸ்மி,  யாரும் பாரபட்சமாக நடந்துகொள்வதாக நினைத்துவிடக்கூடாதே என்பதற்காக அப்படிப்பட்ட வழக்குகளிலிருந்து ஒதுங்குவது அவசியமாயிற்று என்றார்.

அவர் பதவியிலிருந்தபோது மிகவும் அணுக்கமான கவனிப்பைப் பெற்ற ஒரு வழக்கு, பக்காத்தான் ரக்யாட்டின் முகம்மட் நிஜார் ஜமாலுடின் பிஎன்னின் ஜம்ரி அப்துல் காடிருக்கு எதிராக, பேராக்கின் சட்டப்பூர்வ மந்திரி புசார் யார் என்பதைத் தீர்மானிக்க வேண்டி தொடுத்திருந்த ஒரு வழக்காகும். 

ஆனால், அவ்வழக்கில் தாம் சம்பந்தப்படவில்லை என்று ஸாக்கி மலேசியாகினியின் நேர்காணலில் கூறினார். அவ்வழக்கை விசாரிக்கும் நீதிபதிகள் குழுவைத் தேர்ந்தெடுத்தவர் துணைத் தலைமை நீதிபதியான முறையீட்டு நீதிமன்றத் தலைவர் அலாவுதின் முகம்மட் ஷாரிப் என்றாரவர்.

“அரசியல் தொடர்புள்ள எந்த வழக்கையும் நான் விசாரித்ததில்லை. யார் அவற்றை விசாரிப்பது என்பதைக்கூட நான் முடிவு செய்வதில்லை. துணைத் தலைமை நீதிபதியிடம் அப்பொறுப்பை ஒப்படைத்து விடுவேன்.”

2009 பிப்ரவரியில்,பேராக்கில் மூன்று பக்காத்தான் சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சிவிலகி ‘பிஎன் ஆதரவு’ சுயேச்சைகளாக செயல்படப் போவதாக அறிவித்ததைத் தொடர்ந்து ஒரு நெருக்கடி தோன்றியது.

ஜம்ரியை மந்திரி புசாராகக் கொண்ட புதிய பிஎன் அரசு மாநில ஆட்சிக்குப் பொறுப்பேற்றது. அதை எதிர்த்து நிஜார் வழக்கு தொடுத்தார்.

மே 11-இல், ஈப்போ உயர்நீதி மன்றம் நிஜாருக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது. ஜம்ரி, தீர்ப்பை நிறுத்திவைக்க மனு செய்துகொண்டார். அதை முறையீட்டு நீதிமன்றம் உடனே ஏற்றது. அவ்வளவு விரைவாக அது செயல்பட்ட விதம் குறித்து நிஜாரின் வழக்குரைஞர்கள் வியப்புத் தெரிவித்தனர்.

முறையீட்டு நீதிமன்றம், உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பைத் தள்ளுபடி செய்தது. அதன் முடிவை ஐவரடங்கிய கூட்டரசு நீதிமன்ற நீதிபதிகள் குழுவும் நிலைநிறுத்தியது.

தீர்ப்பை நிறுத்தி வைக்கக் கேட்டுக்கொள்ளும் மனுவை மூவரடங்கிய நீதிபதிகள் குழு விசாரிக்காமல் தனியொரு நீதிபதி- நீதிபதி ரம்லி அலி-மட்டும் விசாரித்தது ஏன் என்று அப்போது கேள்விகள் எழுந்தன.

அதைப் பற்றிக் கேட்டதற்கு, அதை முடிவு செய்வதில் தமக்குச் சம்பந்தமில்லை என்றும் அந்த மனுவை விசாரிக்க நீதிபதி ரம்லியை ஏற்பாடு செய்தவர் நீதிமன்ற பதிவதிகாரி என்றும்   ஸாக்கி  கூறினார்.

கூட்டரசு நீதிமன்றத்தில் அவ்வழக்கை 11-நீதிபதிகள் அடங்கிய குழு விசாரிக்க வேண்டும் என்று நிஜார் மனு செய்தார். அவரது முயற்சி வெற்றிபெறவில்லை.  அதிலும் தாம் சம்பந்தப்படவில்லை என்பதை ஸாக்கி வலியுறுத்தினார்.

“துணைத் தலைமை நீதிபதிதான் அதை முடிவு செய்தார்.அவர் ஐவர் அடங்கிய நீதிபதிகள் குழு போதுமானது என்று நினைத்திருக்கிறார். என்னைக் கேட்டால், எதற்கு  அதிகமான நீதிபதிகள் என்றுதான் கேட்பேன். 9,11,13,15 அல்லது 21 பேர் இருந்துதான் என்ன ஆகப் போகிறது?

“13 பேரில் ஒருவர் அவர்களுக்குச் சாதகமாக முடிவு செய்யலாம்.. அதை வைத்து அதுதான் சரியான தீர்ப்பு என்று கூறிட முடியுமா?”

“தலையீடு கிடையாது’’

அது அரசமைப்பு விவகாரம் சம்பந்தப்பட்ட ஒரு முக்கியமான வழக்காயிற்றே என்று கூறியதற்கு, அதைப் போன்ற வழக்குகள் இன்னும் சிறிய குழுவினரால் விசாரிக்கப்பட்டிருக்கிறது என்பதை ஸாக்கி சுட்டிக்காட்டினார்.

சரவாக்கில் 1966-இல் அப்போதைய முதலமைச்சர் ஸ்டீபன் காலோங் நிங்கான், ஆளுனர் துன் அபாங் ஓபெங்குக்கு எதிராக தொடுத்த வழக்கை கூச்சிங் கூட்டரசு நீதிமன்றத்தில் மூவரடங்கிய நீதிபதிகள் குழுதான் விசாரணை செய்தது.

சரவாக் சட்டமன்றத்தின் 42 சட்டமன்ற உறுப்பினர்களில் 21 பேர் தங்களுக்கு முதலமைச்சர்மீது நம்பிக்கை இல்லை என்று கூறி கடிதம் எழுதியதை அடுத்து தம்மைப் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்த ஆளுனரை எதிர்த்து காலோங் அந்த வழக்கைத் தொடுத்திருந்தார்.

“மலேசியா சுதந்திரம் பெற்றதிலிருந்து அரசமைப்பு சம்பந்தப்பட்ட பல வழக்குகள் நீதிமன்றத்துக்கு வந்து மூவரடங்கிய நீதிபதிகள் குழுவால் விசாரிக்கப்பட்டுள்ளன. அதனால் இங்கு மட்டும் ஏன் ஐவர் அல்லது 11 பேரடங்கிய நீதிபதிகள் குழுவை நியமிக்க வேண்டும்?”, என்று ஸாக்கி வினவினார்.

மலேசியாவில் மூவரடங்கிய நீதிபதிகள் குழுவைக் கொண்டு விசாரணை செய்வதுதான் வழக்கமாக இருக்கிறது என்றவர் குறிப்பிட்டார். 10-விழுக்காட்டு வழக்குகளில் மட்டும் ஐவர் அடங்கிய நீதிபதிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளது. ஒரே ஒரு வழக்கில் மட்டும் எழுவர் அடங்கிய நீதிபதிகள் குழு நியமிக்கப்பட்டது  
 
நிஜார் வழக்கையும் பேராக் சட்டமன்ற முன்னாள் தலைவர் வி.சிவகுமாரின் வழக்கையும் விசாரிப்பதில் கூட்டரசு நீதிபதிகள் நிறைய பேர் ஈடுபட்டனர். விசாரணைக்கு  அவர்களை நியமனம் செய்ததில் தாம் சம்பந்தப்படவில்லை என்பதை  ஸாக்கி மீண்டும் வலியுறுத்தினார்.

தம் முன்னாள் சட்ட நிறுவனம்-ஷரிசாட் ரஷிட், லீ நிறுவனம்- சம்பந்தப்பட்ட வழக்குகளைக் கூட தாம் விசாரணை செய்ததில்லை என்று ஸாக்கி கூறினார்.

“நான் முறையீட்டு நீதிமன்றத் தலைவராக இருந்தபோது யுஇஎம் வழக்கு வந்தது. முறையீட்டு நீதிமன்ற நீதிமன்றக் குழுவில் அப்போது நீதிபதி கோபால் ஸ்ரீராம் இருந்தார். அவர், (உயர்நீதிமன்ற) தீர்ப்பைத் தள்ளுபடி செய்தார்.

“யுஇஎம் என்னுடைய முன்னாள் வாடிக்கையாளர் நிறுவனம்தான். தீர்ப்பு அதற்கு எதிராக இருந்தது. நான் அதில் தலையிடவில்லை.

“என் முன்னாள் வாடிக்கையாளர் நிறுவனம்  தோற்றுப்போனது. நான் விரும்பியிருந்தால் அதில் தலையிட்டிருக்கலாம் அல்லவா?

“நீதித்துறை சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்கிறீர்களே, என் வாடிக்கையாளர் நிறுவனத்துக்கு எதிராக தீர்ப்பளிக்கப்பட்ட இந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்டு நீங்கள் எழுதலாமே.என் செயலைக் கொஞ்சம் பாராட்டுங்கள்”, என்றார் ஸாக்கி.

முறையீட்டு நீதிமன்றத்தில் யுஇஎம்-முக்கு எதிராக தீர்ப்பு அளிக்கப்பட்டது உண்மைதான். ஆனால்,அத் தீர்ப்பைக்  கூட்டரசு நீதிமன்றம் ரத்து செய்தது.