பாஸ்: வாக்கு தவறிவிட்டார் பிரதமர், மாட் சாபு விவகாரமே சான்று

புக்கிட் கெப்போங் சம்பவம் தொடர்பில் அதிகாரப்பூர்வமாக சொல்லப்படும் தகவல்களுக்கு எதிராக பேசியதற்காக பாஸ் துணைத் தலைவர் முகம்மட் சாபுமீது  அவதூறு வழக்கு தொடுப்பதானது பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் ஜனநாயக சீரமைப்புகள் செய்யப்போவதாக அளித்த வாக்குறுதியை மீறிவிட்டார் என்பதைக் காண்பிக்கிறது. பாஸ் தகவல் தலைவர் துவான் இப்ராகிம் துவான் மான் இவ்வாறு கூறினார்.

“பிரதமர் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் அகற்றப்படும் என்று அறிவித்தபோது அரசியல் காரணத்துக்காக எவரும் கைது செய்யப்பட மாட்டார் என்று உறுதி கூறியிருந்தார். சொல்லி ஓயவில்லை. அதற்குள் முகம்மட் சாபுமீது அரசியல் குற்றச்சாட்டு கொண்டுவரப்பட்டுள்ளது”, என்றாரவர்.

கடந்த வாரம், நாட்டு மக்களுக்குத் தொலைக்காட்சிவழி ஆற்றிய உரையில் பல சிவில் உரிமைகளை அறிவித்த பிரதமர், மாறுபட்ட அரசியல் கொள்கையின் காரணமாக எவரும் தடுத்து வைக்கப்பட மாட்டார் என்றும் உறுதி கூறியிருந்தார்.

“முகம்மட் சாபுவின் பேச்சு, தேசியப் பாதுகாப்புக்கு மருட்டலாக இருந்ததா…என்ன?..அவர்மீது குற்றம் சாட்டப்படுவதற்கு அரசியல் அன்றி வேறு எது நோக்கமாக இருக்க முடியும்?”, என்று துவான் இப்ராகிம் வினவினார்.

முகம்மட் சாபு, ஆகஸ்ட் 21-இல், ஒரு நிகழ்வில் பேசியபோது 1950-இல் புக்கிட் கெப்போங் போலீஸ் நிலையம் மீது தாக்குதல் நடத்திய முகம்மட் இந்ராவை ஒரு சுதந்திரப் போராளி என்று பாராட்டினார்.

அந்தப் பேச்சை பெரிய விவகாரமாக்கி செய்தி வெளியிட்ட அம்னோவுக்குச் சொந்தமான மலாய் நாளேடா உத்துசான் மலேசியா, அவர் கம்யூனிஸ்டுகளுக்கு ஆதரவாக பேசுவதாகக் கூறியது. தம்மைக் கம்யூனிஸ்டு ஆதரவாளர் என்று கூறிய அச்செய்தித்தாள்மீது மாட் சாபு வழக்கு தொடுத்துள்ளார்.

தேசிய பேராசிரியர் மன்ற(எம்பிஎன்)த்தைச் சேர்ந்த சைனல் கிளிங், நாடு என்றும் ஒரு காலனியாக இருந்ததில்லை என்று கூறினாரே அவர்மீதும் அதிகாரப்பூர்வ வரலாற்றுக்கு எதிராக பேசினார் என ஏன் வழக்கு தொடுக்கவில்லை என்றும் பாஸ் கேள்வி எழுப்பியது.

“முகம்மட் சாபுமீது குற்றம் சுமத்தும்போது எம்பிஎன்னையும் சைனல் கிளிங்கையும் என்ன செய்வது?”, என்று துவான் இப்ராகிம் வினவினார்.

மாட் சாபுமீது இன்று நீதிமன்றத்தில், புக்கிட் கெப்போங் தாக்குதலின்போது தாக்குதலை எதிர்த்துப் போராடி உயிர்நீத்த போலீஸ்காரர்களையும் மற்றவர்களையும் அவமதித்தார் என்று குற்றவியல் வழக்கு பகுதி 500-இன்கீழ் குற்றம் சாட்டப்பட்டது.

TAGS: