பாக் லா: நான் சீர்திருத்தங்கள் குறித்து தெளிவாக இருந்தேன்

முன்னாள் பிரதமர் அப்துல்லா அகமட் படாவி, தாம் பதவியில் இருந்த போது அமலாக்க விரும்பிய சீர்திருத்தங்கள் மீது மிகவும் தெளிவாக இருந்ததாக கூறியிருக்கிறார்.

“ஒரு வேளை தாம் பதவியில் இருந்த போது எதிர்நோக்கிய எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் வலிமையைக் காட்டியிருக்க வேண்டும்,” என அவர் நேற்றிரவு விடுத்த அறிக்கை குறிபிட்டது.

அப்துல்லா தாம் விரும்பிய சீர்திருத்தத் திட்டங்கள் மீது தெளிவாக விளக்காததால் அவற்றுக்கு ஒரளவு எதிர்ப்பு இருந்ததாக பிரதமர் துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸ் கூறியதற்கு அவர் பதில் அளித்தார்.

தமது சீர்திருத்த திட்டங்களை பழமைப் போக்குடையவர்கள் எதிர்த்ததாக அப்துல்லா கூறியிருப்பது பற்றிக் கருத்துரைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்ட போது நஸ்ரி அவ்வாறு சொன்னதாக செய்தி இணையத் தளங்கள் தகவல் வெளியிட்டன.

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தமது சீர்திருத்தத் திட்டங்கள் மீது இன்னும் அதிகமான வலிமையைக் காட்டுவார் எனத் தாம் நம்புவதாகவும் அப்துல்லா தெரிவித்திருந்தார்.

“தலைவர் ஒருவர் மாற்றங்களைக் கொண்டு வர விரும்பும் போது அதனை ஆதரிப்பவர்களும் இருப்பார்கள். எதிர்ப்பவர்களும் இருப்பார்கள்.”

“ஆனால் தாம் செய்ய விரும்புவது சரியானது எனத் தமக்குத் தெரிந்தால் ஒரு தலைவர் அதனை நிறைவேற்றுவதற்கு வழிகளைக் காண வேண்டும்,” என்றார் அப்துல்லா.

பெர்னாமா