நஜிப், ரோஸ்மா சபீனாவை தள்ளுபடி செய்வதற்கு விண்ணப்பித்துள்ளனர்

பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் மீதான குதப்புணர்ச்சி வழக்கு விசாரணையில் தாங்கள் சாட்சிகளாக நீதிமன்றத்தில் ஆஜராவதைக் கட்டாயப்படுத்தும் சபீனாவை தள்ளுபடி செய்வதற்கு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் அவரது துணைவியார் ரோஸ்மா மான்சோரும் விண்ணப்பித்துக் கொண்டுள்ளனர்.

அந்தத் தகவலை நஜிப்பையும் ரோஸ்மாவையும் பிரதிநிதிக்கும் நான்கு வழக்குரைஞர்களில் ஒருவரான சலேஹுடின் சைடின் இன்று உறுதிப்படுத்தினார். ஆனால் அந்த விண்ணப்பம் குறித்த மேல் விவரங்களைத் தருவதற்கு அவர் மறுத்து விட்டார்.

நஜிப், ரோஸ்மா உட்பட அரசு தரப்பு வழங்க முன் வந்த சாட்சிகளை பேட்டி காண்பதற்கு அன்வார் தரப்பு செய்து கொண்ட விண்ணப்பத்தை கடந்த ஆகஸ்ட் எட்டாம் தேதி உயர் நீதிமன்ற நீதிபதி ஜபிடின் முகமட் டியா அனுமதித்தார்.

அரசு தரப்பு தனது வாதங்களின் முடிவில் நஜிப், ரோஸ்மா உட்பட 71 சாட்சிகளை பிரதிவாதித் தரப்புச் சாட்சிகளாக வழங்க முன் வந்தது.

1998ம் ஆண்டு அன்வாருக்கு எதிராக சுமத்தப்பட்ட முதலாவது குதப்புணர்ச்சி குற்றச்சாட்டு மீதான வழக்கில் அப்போதைய பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டுக்கு சபீனா அனுப்பப்பட்டது. ஆனால் அதனைத் தள்ளி வைப்பதற்கு அவர் விண்ணப்பித்துக் கொண்டார். நீதி மன்றமும் அதனை அனுமதித்தது.