இண்ட்ராப், பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு எதிரான வழக்கில் ஆதாரங்களைத் திரட்டுகிறது

இண்ட்ராப் என்ற இந்து உரிமை நடவடிக்கைக் குழு, பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு எதிராக தொடர்ந்துள்ள சிவில் வழக்கு தொடர்பில் ‘ஆதாரங்களைத் திரட்டும்’ பணியில் அதன் வழக்குரைஞர் சுரேஷ் குரோவர் ஈடுபட்டுள்ளார். அவர் மலேசியாவில் இந்திய சமூகத்தினரை தொடர்ந்து சந்தித்து வருகிறார்.

இண்ட்ராப் சட்டவிரோதமானது என அறிவிக்கப்பட்டு அதன் தலைவர்கள் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்படுவதற்கு முன்னர் அந்த வழக்கை 2007ம் ஆண்டு இண்ட்ராப் தலைவர் பி வேதமூர்த்தி தாக்கல் செய்தார்.

“காலம் வெகு குறைவாக இருக்கிறது. ஏனெனில் நாங்கள் 2013ம் ஆண்டு ஆகஸ்ட் 30ம் தேதிக்கு முன்னதாக விசாரணைக்குப் போக வேண்டும்,” என விளக்கிய குரோவர் தமது பயணம் அவசர அவசியமானது என்றார்.

அவர் இன்று கிள்ளான் ஹொக்கியான் அசெம்பிளி மண்டபத்தில் 1,500 ஹிண்ட்ராப் ஆதரவாளர்கள், இந்திய சமூகத்தினர் கலந்து கொண்ட கூட்டத்தில் உரையாற்றினார்.

மலேசியா முழுவதும் பல இடங்களுக்குச் சென்று இந்திய வம்சாவளியைச் சேர்ந்த குடிமக்களைச் சந்தித்து ஆதாரங்களைத் திரட்ட குரோவர் திட்டமிட்டுள்ளார். அந்தச் சந்திப்புக்களின்போது சட்ட நடவடிக்கை எதிர்நோக்கும் சவால்கள் பற்றி விளக்குவார். வாதிகளின்  பட்டியலில் மேலும் அதிகமான மக்களின் பெயர்களைச்  சேர்க்கவும் அவர் எண்ணம் கொண்டுள்ளார்.

அந்த சிவில் வழக்கில் பிரிட்டிஷ் மகுடமும் அரசாங்கமும் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளன.

பிரிட்டிஷ் பேரரசினால் அப்போதைய மலாயாவுக்கு கட்டாயமாக இடமாற்றம் செய்யப்பட்டதால் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டு விட்டதாக இண்ட்ராப் கூறிக் கொள்ளும் இந்தியர்களுக்கு இழப்பீடு வழங்குமாறும் அதில் கோரப்பட்டுள்ளது.

அதிகமான இந்திய வம்சாவளி மலேசியர்களைத் தாம் சந்திப்பது அவசியம் என்றும் குரோவர் சொன்னார்.

அந்த சிவில் கோரிக்கையில் அவர்களை சேர்ப்பதுடன் அவர்களுடைய நடப்பு வாழ்க்கை முறை, வறுமை நிலைக்கு அடிப்படையாகப் பயன்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

‘இத்துடன் நிற்காது’

லண்டனைத் தளமாகக் கொண்ட தமது சக வழக்குரைஞரான இம்ரான் கான்  வெளியேற்றப்பட்டதையும் குரோவர் கண்டித்தார்.

“நானும் அதே வேலையைச் செய்யப் போவதால் திரு கானை மட்டும் அகற்றுவது அறிவுக்கு ஒவ்வாதது.”

“அவர்கள் (அரசாங்கம்) அந்த வழக்கு வெற்றியடைவதை விரும்பவில்லை. அவர்கள் உங்களைக் கண்டும் உங்கள் உறுதியைக் கண்டும் அஞ்சுகின்றனர்,” என்று லண்டனில் இயங்கும் அந்த வழக்குரைஞர் சொன்னார்.

வேதமூர்த்தியின் சட்ட ஆலோசகரான கான், குரோவருடன் இணைந்திருக்க வேண்டும். ஆனால் “தடுக்கப்பட்ட குடியேற்றக்காரர்” என்பதற்காக அவரை நேற்று மலேசிய அதிகாரிகள் நாட்டிலிருந்து வெளியேற்றி விட்டனர்.

தாங்கள் அத்துடன் நிற்கப் போவதில்லை என்றும் கான் வெளியேற்றப்பட்டதை எதிர்ப்பது உட்பட அந்த சிவில் வழக்கிற்காக தொடர்ந்து போராடப் போவதாகவும் குரோவர் சொன்னார்.

“திரு கான் மீண்டும் இங்கு வருவார்”, என்றார் அந்த வழக்குரைஞர்.

அவர் மண்டபத்துக்கு வந்து சேர்ந்த போது ஆரஞ்சு நிற இண்ட்ராப் கொடிகளை அசைத்த இளைஞர்கள் “இண்ட்ராப் வாழ்க” என முழக்கமிட்டனர்.

அந்த நிகழ்வு முடியும் வரை போலீசார் காணப்படவில்லை என்றாலும் சில தனிநபர்கள், சாதாரண உடையில் இருந்த போலீஸ்காரர்கள் என நம்பப்படுகிறது.