மாட் சாபுவுக்கு பன்னாட்டு ஆதரவு

அமைதிக்காகவும் பேச்சுரிமைக்காகவும் போராடும் பன்னாட்டு அரசுசார்பற்ற அமைப்பு (என்ஜிஓ) ஒன்று, போலீசை சிறுமைப்படுத்தினார் என்று அண்மையில் கிரிமினல் அவதூறு குற்றம் சாட்டப்பட்ட பாஸ் துணைத் தலைவர் முகம்மட் சாபுவின் வாயைக் கட்டிப்போட சட்டம் பயன்படுத்தப்பட்டிருப்பது கவலை அளிப்பதாகக் கூறியுள்ளது. 

வரலாற்று நிகழ்வுகள், பொதுவிவாதத்துக்கும் சர்ச்சைக்கும் இடமளிப்பவை. அதனால் இக்குற்றச்சாட்டு, அவை  குறித்து பேசுவதற்கும் கருத்துரைப்பதற்கும் முகம்மட் சாபுவுக்குள்ள உரிமையை மறுக்கும் ஒரு முயற்சி என்று Armed of the Quill (AFTQ) Malaysia எனப் பெயரைக்கொண்ட அந்த அமைப்பு கூறியது.

ஒரு வரலாற்று நிகழ்வு தொடர்பில் மாற்றுக் கருத்து தெரிவிப்பது சட்டமீறல் அல்ல என்பதால் இங்கே சட்டம் அந்த பாஸ் தலைவருக்கு எதிராக “தவறாக”ப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று அவ்வமைப்பின் மலேசியப் பேராளர் ஷாஹ்ருல் அன்வார் ஷாபி குறிப்பிட்டார்.

அது, மலேசியா அரசமைப்பு உத்தரவாதமளிக்கும் உரிமைகளை மீறும்“அரசியல் பழிவாங்கும் செயல்”போலத் தெரிவதால் அக்குற்றச்சாட்டைக் கைவிட வேண்டும் என்று அவர் சட்டத்துறைத் தலைவரைக் கேட்டுக்கொண்டார்.

மாட் சாபு என்ற பெயரில் பிரபலமாக விளங்கும் முகம்மட் சாபு ஆகஸ்ட் 21-இல் தாசெக் குளுகோரில் ஒரு செராமாவில் நிகழ்த்திய உரை பொது ஒழுங்கைக் கெடுத்து விட்டதாக அரசு நினைக்கலாம்.

“ஆனால், நாட்டில் எப்படிப்பட்ட ஜனநாயகம் கடைப்பிடிக்கப்படுகிறது என்று மக்கள் குழம்பிப் போய் இருக்கிறார்கள்”, என்று அவர் ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

“வரலாற்று உண்மைகளை விவாதிக்கவும் சர்ச்சையிடவும் இடமளிக்க வேண்டும். வரலாறு என்பது நிரந்தரமானதல்ல. புதிய கண்டுபிடிப்புகள், தகவல்கள், விமர்சனங்கள் போன்றவை காரணமாக அது மாறும்.”

“அரசாங்கம் எந்தவொரு வரலாற்று நிகழ்வு தொடர்பிலும் தனது நிலைப்பாடே சரியானது என்ற கருத்தை மற்றவர்கள்மீது திணிக்கக்கூடாது.அவ்வாறு செய்வது சிந்திப்பதற்கும் கருத்துச் சொல்வதற்குமுள்ள உரிமையை மறுப்பதாகும்”, என்றவர் வலியுறுத்தினார்.

மாட் சாபு, புக்கிட் கெப்போங் தாக்குதலின்போது அத்தாக்குதலை எதிர்த்துப் போராடி உயிர்நீத்த போலீஸ்காரர்களை அவமதித்தார் என்று அவர்களின் உறவினர்களும் மற்றவர்களும் போலீசில் புகார் செய்ய அதன் விளைவாக அவர்மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் அவர்மீதான குற்றச்சாட்டு நிறுவப்பட்டால் ஈராண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படலாம்.

வரலாறு தொடர்பான சர்ச்சைகளுக்கு அறிவார்ந்த முறையில் தீர்வுகாண முயல வேண்டும் என்று ஷாஹ்ருல் அன்வார் கூறினார்.

எல்லாத் தரப்புகளையும் அழைத்து தொலைக்காட்சி அல்லது வானொலியில் பொது விவாதத்துக்கு ஏற்பாடு செய்யலாம். அதில் முன்வைக்கப்படும் வாதங்களை வைத்து பொதுமக்கள் தாங்களே ஒரு முடிவுக்கு வர முடியும்.

இப்படிப்பட்ட அறிவார்ந்த, கல்விசார்ந்த விவாதங்களை ஊக்குவிக்க வேண்டும்.

“கருத்துச் சொல்ல மாட் சாபுவுக்குள்ள உரிமை என்றும் மதிக்கப்பட வேண்டும்.

“இவ்விவகாரத்தை அரசு விவேகமாகக் கையாளுமானால் ஜனநாயக சீரமைப்புகளைச் செய்வதில் அது அக்கறை கொண்டிருப்பது உண்மைதான் என்று மக்கள் வெகுவாக அதைப் பாராட்டுவார்கள்”, என்றாரவர்.

மாட் சாபு மீதான சட்ட நடவடிக்கை, மலேசியாவில் சீரமைப்புகள் மேற்கொள்ளப்படும் என்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அறிவித்ததற்கு முரணாக இருக்கிறது என்றும் நோர்வே-யைத் தளமாகக் கொண்ட அந்த என்ஜிஓ கூறியது.

நஜிப், தம் மலேசிய தினச் செய்தியில் காலத்துக்குப் பொருந்தாத காலனிய சட்டங்களான உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் போன்றவை அகற்றப்படும் என்று குறிப்பிட்டிருந்தார்.

“இப்படிப்பட்ட முரண்பாடுகள் அரசாங்கத்துக்குக் கெட்ட பெயரை உண்டாக்கும். அரசாங்கம் பல தடவை மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப மாற்றங்களைச் செய்வதாக வாக்குறுதி அளித்திருக்கிறது.

“ஆனால், கொடுத்த வாக்குறுதிகளை மீறி மக்களுக்கு ஆத்திரமுண்டாக்குவதே வழக்கமாகி விட்டது”, என்றும் அவர் குறிப்பிட்டார்.

TAGS: