சட்டவிரோத பேரணி வழக்கைக் கைவிடுக என்ற கோரிக்கை நியாயமானதே

சட்டவிரோத பேரணிகள் தொடர்பான வழக்குகளைச் சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் கைவிட வேண்டும் என்பது “நியாயமான வேண்டுகோள்” என்கிறார் நடப்பில் சட்ட அமைச்சர் முகம்மட் நஸ்ரி அப்துல் அசீஸ்.

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், தம் மலேசிய தினச் செய்தியில் அறிவித்த பல சீரமைப்புகளில் பொது இடப் பேரணி தொடர்பான சட்டங்களை மறு ஆய்வு செய்வதும் அடங்கியிருந்தது. அதனைக் கருத்தில்கொண்டு நஸ்ரி இவ்வாறு கூறினார்.

இன்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நஸ்ரி, “நியாயம்தான். அது நியாயமான கோரிக்கைதான்”, என்றார்.

பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி டோனி புவா, இன்று ஓர் அறிக்கையில், அரசாங்கத்தின் புதிய கொள்கையின்படி 2008-இல் மெழுகுதிரி ஏந்தி விழிப்புணர்வு போராட்டத்தில் ஈடுபட்ட 21 பேர்மீதான குற்றச்சாட்டுகள் கைவிடப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு   எதிர்வினையாக நஸ்ரி இவ்வாறு மொழிந்தார்.

ஆனால், இவ்விவகாரத்தில் இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் சட்டத்துறைத் தலைவருக்குத்தான் உண்டு என்றும் அவர் குறிப்பிட்டார்.

“”குற்றச்சாட்டைக் கைவிடுவதா, வழக்கைத் தொடர்ந்து நடத்துவதா என்பதை அவர்தான் தீர்மானிக்க வேண்டும்”.

புவா உள்ளிட்ட 21 பேரின்மீதும் 2009 ஜனவரி 23-இல், போலீஸ் சட்டம் பகுதி 27-இன்கீழ் குற்றம் சுமத்தப்பட்டது. ஆனால், 33 மாதங்கள் கடந்து விட்டன. இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இன்னொரு நிலவரம் பற்றிக் குறிப்பிட்ட நஸ்ரி, ஜூலை 9 பெர்சே 2.0 பேரணியின்போது போலீசார் முரட்டுத்தனமாக நடந்துகொண்டார்கள் என்று கூறப்படுவதன்மீதான விசாரணை அறிக்கை தமக்குக் கிடைத்திருப்பதை உறுதிப்படுத்தினார்.

ஆனால், அதன் உள்ளடக்கத்தை வெளியிட மறுத்தார்.

“நான் அதைப் படித்துப் பார்த்தேன். ஆனால், அதைப் பகிர்ந்துகொள்ள மாட்டேன். உங்களுக்குத் தேவை என்றால் (உள்துறை அமைச்சர்) ஹிஷாமுடின் உசேனுக்கு எழுதிக்கேளுங்கள்”, என்றார்.

நியாயமான, சுயேச்சையான தேர்தல்கள் வேண்டி நடைபெற்ற தெரு ஆர்ப்பாட்டங்களின்போது போலீசார் முரட்டுத்தனமாக நடந்துகொண்டார்கள் என்று புகார் கூறப்பட்டதை அடுத்து அப்புகார்களை விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறு குழுக்களின் விசாரணைகளை அடிப்படையாகக் கொண்டு அவ்வறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது.

TAGS: