சபா ஆர்சிஐ விசாரணை: “அன்றையக் கண்டுபிடிப்புகள்” என்ன என்பதை நஜிப் விளக்குவாரா?

-செனட்டர் எஸ். இராமகிருஷ்ணன், ஆகஸ்ட் 28, 2012.

2007 ஆம் ஆண்டில், சபா சட்டவிரோத குடியேற்றக்காரர்கள் குறித்த நிலவரத்தை ஆராய நாடாளுமன்ற குழு ஒன்று நியமிக்கப்பட்டது. அதற்கு நமது தற்போதைய  பிரதமர் நஜிப் தலைமை தாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது அதே விசாரணையை மீண்டும் மேற்கொள்ள ஆர்.சி.ஐ எனப்படும் அரச விசாரணை ஆணயம் பணிக்கப்படும் முன், “அன்றையக் கண்டுபிடிப்புகள்” என்ன என்பதை பிரதமர்  நஜிப் துன் ரசாக் விளக்குவாரா?

அண்மையில் 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகியதற்குக் காரணம்  சபா சட்டவிரோத குடியேறிகள் விவகாரம் குறித்து மத்திய அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததே என தெரிவித்திருந்தனர். அன்றைய பொறுப்பாளர்களின் பதவி துஷ்பிரயோகம் மற்றும் தேசத் துரோகம் குறித்து ஆர்.சி.ஐ தீவிர விசாரணை மேற்கொள்ள வழிவகுக்கப்படவில்லை என்றால், சபா விவகாரம் தொடர்பாக கடந்த 11.8.2012 இல் விடுக்கப்பட்ட அறிவிப்பானது ஓர் அரசியல் நாடகமே!

குறிப்பிட்ட இவ்விவகாரத்திற்குத் தக்க விளக்கம் அளிக்க வேண்டியவர் முன்னாள் பிரதமர்  மகாதிர்தான். ஏனெனில் பிலிப்பின்ஸ் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளிலிருந்து  வந்த முஸ்லிம் கள்ளக்குடியேறிகளுக்கு அடையாள அட்டை வழங்க வழி வகுத்தவர் அவரே.  தற்போது அந்த ‘Project IC’-க்கு சாயம் பூசி நியாயம் கற்பிக்கிறார்  முன்னாள் பிரதமர். அதாவது சட்டவிரோத குடியேற்றக்காரர்கள் எவ்வளவு காலம் சபாவில் தங்கியிருந்திருக்கிறார்கள், எந்த அளவிற்கு தேசிய மொழியில் தேர்வு கொண்டிருக்கிறார்கள் எப்பதைப் பொறுத்தே அவர்களுக்கு மலேசிய குடியுரிமை தகுதி வழங்கப்படுகிறதாம்! தகுதி இருப்பின் அவர்கள் ஏன் மலேசிய குடிமக்களாகக்கூடாது எனும் கேள்வியையும் எழுப்பும் மகாதிர் இத்திட்டத்தை எதிர்ப்பவர்கள் அரசியல் சந்தர்ப்பவாதிகள் என சாடுகிறார்.

மலேசிய மக்கள் பல்வேறு பின்னணியிலிருந்து வந்தவர்கள். எனவே தமது அத்திட்டத்தை எதிர்ப்பவர்கள் இனவாதிகள் எனவும் தனது  வளைத்தளத்தில் குற்றஞ்சாட்டும் மகாதிரிடம் நாம் ஒரு கேள்வியை முன் வைக்கின்றோம். அவரின் கூற்றுப்படி ‘Project IC’ நன்நோக்கம் உடையதெனில் ஏன் இந்நாட்டில் பிறந்து வளர்ந்து, இம்மண்ணில் இரத்தமும் வியர்வையும் சிந்திய சில இந்தியர்களுக்கு குடியுரிமை வழங்கப்படவில்லை?  

இத்திட்டத்திற்கு மற்றொரு பெயர் “Project Mahathir”! ஆளும் கட்சியின் அரசியல்  இலாபத்திற்காகவே அத்திட்டம் கொண்டுவரப்பட்டதாகக் கருதப்படுகிறது. அதாவது அம்னோவுக்கு சபாவில் போதிய ஆதரவு இருக்க வேண்டும் என்பதே இதன் அடிப்படை நோக்கம். அதனை உறுதிப்படுத்தும் வகையில் பின்வரும் பட்டியல் அமைகிறது.

           
மக்கள் தொகை இன வாரியாக:
     

   மக்கள் 1960 ஆம் ஆண்டு (%)2006 ஆம் ஆண்டு (%)
 கடாஸான் 32 17.7
 சீனர் 23 9.6
 மற்ற முஸ்லிம்கள் 15.8 14.6 மற்ற பூமிபுத்ராக்கள்
 பஜாவ் 13.1 13.4
 இந்தோனேசியர்கள் 5.5 25 குடிமக்கள் அல்லாதவர்கள்
 முருட் 4.9 3.3
 பிலிப்பினோக்கள் 1.6 4.8
 மலாய்க்காரர்கள் 0.4 11.4

 

அம்னோவின் ஆதரவோடு அறிமுகப்படுத்தப்பட்ட “புரஜெக் ஐ.சி”யின் நோக்கம் சபாவில் கடாஸான் மற்றும் சீனர்களிடையே பிளவை ஏற்படுத்தி அரசியல் ரீதியல் அவ்விரு இனத்தினரைப் பலவீனப்படுத்தி அம்மாநிலத்தில் அம்னோ ஆட்சியை நிலைநாட்டவே என்பது இதன் வழி புலப்படுகிறது.

“Project IC” அமல்படுத்துவதில் அம்னோவுக்கு ஆதரவாக இருந்தவை இதர சில அரசியல் கட்சிகள், அரசு சார்பு நிறுவனங்கள், மலேசிய தேர்தல் ஆணையம், தேசிய பதிவுத்துறை மற்றும்  குடிநுழைவுத்துறை போன்றவை.

இன்னும் 6 மாதங்களுக்குள் நம் நாட்டின் 13வது பொதுத் தேர்தல் முடிந்துவிடும். மீண்டும் அதே நிலை திரும்பிவிடும்.

ஆகவே பிரதமரிடம் நாம் கேட்டுக்கொள்வது இதுதான்: சபா விவகாரத்தில் புதியதோர் அரச விசாரணை மேற்கொள்ள வகை செய்யும் முன் பழைய விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்ட இரகசியங்கள் என்ன என்பதை பிரதமர் அவசியம் விளக்க வேண்டும்.    மேலும், முன்னாள் பிரதமர் மகாதிர் ஆர்சிஐயால் விசாரிக்கப்பட வேண்டும்.