பக்காத்தான் விரும்பினால் சிலாங்கூர் கட்சித்தாவல்-தடுப்புச் சட்டம் கொண்டுவரும்

பக்காத்தான் ரக்யாட் உயர்தலைவர்கள் அனுமதித்தால் கட்சித்தாவல்-தடுப்புச் சட்டம் கொண்டுவருவது பற்றி சிலாங்கூர் பரிசீலிக்கும்.

அது ஒரு “அரசியல் விவகாரம்” என்றுரைத்த மந்திரி  புசார் காலிட் இப்ராகிம், இப்போதைக்கு அதனினும் முக்கியமான விவகாரங்கள் இருப்பதாக ஷா ஆலமில் செய்தியாளர் கூட்டமொன்றில் கூறினார்.

முக்கியமாக 13வது பொதுத் தேர்தலின் வேட்பாளர் பட்டியலில் கவனம் செலுத்த வேண்டியிருப்பதாக அவர் சொன்னார்.

“என்னைக் கேட்டால்,அது (கட்சித்தாவல்-தடுப்புச் சட்டம்) பெரிய விவகாரம் அல்ல.பக்காத்தான் கடந்த கால அனுபவத்தைக் கருத்தில்கொண்டு அதன் (தேர்தல்) பிரதிநிதிகளைக் கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும். அதுதான் இப்போது பெரிய விவகாரம்”, என்றவர் விளக்கினார்.

பினாங்கு அரசு அதன் சட்டமன்றம் செப்டம்பர் மாதம் கூடும்போது கட்சித்தாவல்-தடுப்புச் சட்டம் கொண்டுவர தீர்மானித்துள்ளது.

முதலில், அச்சட்டம் கொண்டுவரப்படுவது பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு பிடிக்காமல் இருக்கலாம் எனக் கருதப்பட்டது.அண்மையில் சாபா தலைவர்கள் இருவர் பிஎன்னைவிட்டு விலகி பக்காத்தான் ஆதரவாளர்களாக மாற அன்வார் காரணமாக இருந்தார் என்பதால் அவருடைய நடவடிக்கைகளுடன் இச்சட்டம் முரண்படுவதாகக் கருதப்பட்டது.

ஆனால், பினாங்கு அரசு கட்சித்தாவல் தடுப்புச் சட்டம் கொண்டுவருவதில் தமக்கு ஆட்சேபணை இல்லை என்று அன்வார் நேற்று கூறிவிட்டார்.

சிலாங்கூரில் மாநில நிலையிலான மெர்டேகா தின, மலேசிய தினக் கொண்டாட்டம் நாளை இரவு மணி 8.30க்கு டாட்டாரான் ஷா ஆலமில் நடைபெறும் என்றும் காலிட் கூறினார்.

அதில் கலாச்சார நிகழ்வுகள், ஆயுதப்படைகளையும் என்ஜிஓ-களையும் சேர்ந்த 56 குழுக்களின் அணிவகுப்பு முதலியவை இடம்பெறும்.

அரச மலேசியக் கடற்படையின் அமைதி அணிவகுப்பும் அன்வார் இப்ராகிமின் உரையும் அதில் முக்கிய அம்சங்களாக இருக்கும்.

 

 

TAGS: