நஜிப் கழுத்தைச் சுற்றியுள்ள கழுகுகள்

இந்த விவகாரம் நஜிப்பின் நம்பகத்தன்மை மட்டும் சம்பந்தப்பட்டதல்ல. அவர் தலைமை தாங்கும் அரசியல் கட்சியும் பெரிய முட்டுக் கட்டை ஆகும். அந்த ஜமீன்தார்கள் புதிய பொருளாதாரக் கொள்கையில் ஊறிப்போய் பயனடைந்தவர்கள். அவர்களுக்கு எப்படி விரைவாக பணக்காரராவது மட்டுமே தெரியும்.

நஜிப் உண்மை நிலைக்கும் கானல் நீருக்கும் இடையில் அல்லாடுகிறார்

கிங்பிஷர்: பிஎன் அரசியலில்  மக்களை நோக்கமாகக் கொண்ட ஆரோக்கியமான பண்பாடு உதயமாகும் என எதிர்ப்பார்த்துத் தொடக்கத்தில் முன்னேற்றகரமான தலைமைத்துவம் எனப் “பெரிதுபடுத்தப்பட்ட” நஜிப் அப்துல் ரசாக்கின் தலைமைத்துவத்திற்கு பெரும்பாலான மலேசியர்கள் ஆதரவு தெரிவித்தனர்.

ஆனால் அவர் மீதான நம்பிக்கை சரிந்து கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. அவரது நடவடிக்கைகள் பொது மக்கள் ஏற்கக் கூடியவையாக இல்லை. அரச மலேசியப் போலீஸ் படையைப் போன்று பிரதமரும் பொது மக்களுடைய நம்பிக்கையை இழந்து வருகிறார்.

பீரங்கி: இந்த விவகாரம் நஜிப்பின் நம்பகத்தன்மை மட்டும் சம்பந்தப்பட்டதல்ல. அவர் தலைமை தாங்கும் அரசியல் கட்சியும் பெரிய முட்டுக் கட்டை ஆகும். அந்த ஜமீன்தார்கள் புதிய பொருளாதாரக் கொள்கையில் ஊறிப்போய் பயனடைந்தவர்கள். அவர்களுக்கு கௌரவமாக எந்த வேலையும் செய்யாமல் எப்படி விரைவாக பணக்காரராவது மட்டுமே தெரியும்.

அவர்கள் எந்த மாற்றத்தையும் கடுமையாக எதிர்ப்பார்கள். தங்கள் நலனுக்குப் பாதகமாக இருக்கக் கூடிய எந்த சீர்திருத்தத்தையும் அவர்கள் நிராகரிப்பது திண்ணம்.

2008 தேர்தலுக்குப் பின்னர் ஊழலைத் துடைத்தொழிக்கப் போவதாக அப்துல் அகமட் படாவி வாக்குறுதி அளித்தார். ஊழல் தடுப்பு நிறுவனமும் அதிக வலிமையுடன் ஊழல் தடுப்பு ஆணையமானது. ஆனால் இப்போது அடுத்தடுத்து ‘ஊழலில்’ சிக்கிக் கொண்டு வருகிறது. தலைப்புச் செய்திகளிலும் இடம் பெறுகிறது.

ஒர் உதவி ஆணையாளர் உட்பட அதன் மூன்று அதிகாரிகள் நாணய மாற்று வணிகர் ஒருவரிடமிருந்து கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலைய வளாகத்தில் 900,000 ரிங்கிட்டை கொள்ளையடித்ததற்காக கைது செய்யப்பட்ட செய்தியை நாம் அண்மையில் அருவறுப்புடன் படித்தோம்.

நஜிப் இந்த மாதம் அறிவித்துள்ள புதிய செய்தி- சிவில் உரிமைகளைத் தாராளமாக்குவதாகும், அதாவது அம்னோ பாணியில். நமது அமைப்புக்களை சீர்திருத்துவதாகவும் அவர் உறுதி அளித்துள்ளார். ஆட்சி மாற்றம் நிகழ்ந்தால் மட்டுமே உண்மையான சீர்திருத்தம் ஏற்படும்

முவாக்: மாட் சாபுவைக் கவனிப்பதற்கு முழு அரசாங்க நிர்வாகத்தையும் அம்னோ/பிஎன் அரசாங்கம் பயன்படுத்த வேண்டுமா ? மக்கள் கொடுக்கும் வரிப்பணமும் அரசு ஊழியர் நேரமும் எப்படி விரயமாகிறது பார்த்தீர்களா ? அல்லது அதை விட நல்ல வேலை ஏதுமில்லையா ?

இசா@பென்யு: போலீசார் தாங்கள் செய்ய வேண்டிய வேலையைத் தான் செய்கின்றனர். நஜிப் தலையிட்டால் அதிகாரம் பிரிக்கப்படவில்லை என எதிர்க்கட்சிகள் குறை கூறும்.

மாட் சாபு பக்காத்தான் ராக்யாட்டுக்கு தீமை செய்கிறார். அவர் எந்த அளவுக்குப் பேசுகிறாரோ அந்த அளவுக்கு அதிகமான மக்கள் பாஸ் கட்சியிலிருந்தும் பக்காத்தான் ராக்யாட்டிலுமிருந்தும் வெளியேறுவார்கள்.

அவர் இப்போது போலீஸ், இராணுவம் ஆகியவற்றுக்கு ஏமாற்றத்தைத் தந்து விட்டார். அவரது ஒட்டை வாயினால் பெரிய வாக்கு வங்கி கை நழுவிப் போய் விட்டது.  உண்மையில் அவர் மீது குற்றம் சாட்டுவதின் மூலம் பிஎன், பக்காத்தானுக்கு நன்மை செய்து கொண்டிருக்கிறது.

அடையாளம் இல்லாதவன்_40dc: நஜிப் நடவடிக்கைகளிலிருந்து ஒரு விஷயம் தெளிவாகிறது- அவர் சொல்வதும் செய்வதும் ஒரே மாதிரியாக இருப்பது இல்லை- தாம் சொன்னதைச் செய்வதற்கு உண்மையான அதிகாரம் அவரிடம் இல்லை.

அம்னோ வலச்சாரிகள் ஆதரவு இல்லாததும் அவரது ‘பலவீனமான போக்கும்’ தாம் வாக்குறுதி அளித்ததை அவர் செய்ய விடாமல் தடுக்கின்றன. அவரது அண்மைய சீர்திருத்த அறிவிப்புக்கள் பொது உறவு ஆலோசகர்கள் வழங்கிய யோசனையாக இருக்க வேண்டும்.

நலிவடையும் தமது செல்வாக்கை உயர்த்திக் கொள்ளவும் அவர் அந்த ஆலோசகர்களை நாடியுள்ளார். வெகுமதிகளையும் வழங்கத் தயாராகிறார்

அ) அம்னோ/பிஎன்-னுக்கு விசுவாசமான ஆதரவாளர்களாக ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட அரசாங்க ஊழியர்களுக்கு சம்பள உயர்வும் போனஸும் வழங்குவது

ஆ)  எளிதில் திருப்தி அடையக் கூடிய இமாம்களுக்கும் கிராமத் தலைவர்களுக்கும் அலவன்ஸ்களை அதிகரிப்பது, திருமெக்காவுக்கு ஹாஜ் பயணங்களை வழங்குவது

நஜிப் பிரதமர் என்ற முறையில் ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது- தாம் தகுதியானவர் என்பதைக் காட்டிக் கொள்வதற்காக உலகம் முழுவதும் வரிப்பணத்தில் அவர் பயணம் செய்கிறார். அவர் நமக்கு ஏற்புடைய பிரதமர் அல்ல.

ஸ்விபெண்டர்: சொல்வது ஒன்று செய்வது ஒன்று என்பதில் நஜிப், பாக் லாவை மிஞ்சப் போகிறார்.