நகல் வாக்காளர் பட்டியலிலிருந்து 200 அந்நியர்கள் நீக்கப்படுவர்

சிலாங்கூர் பாயா ஜாராஸ் சட்டமன்றத் தொகுதிக்கான 2011ம் ஆண்டு இரண்டாவது கால் பகுதிக்கான நகல் துணை வாக்காளர் பட்டியலிலிருந்து குடிமக்கள் அல்லாத 220 பேரை நீக்குவதற்கு தேர்தல் ஆணையம் ஒப்புக் கொண்டுள்ளது.

கடந்த செவ்வாய், புதன் கிழமைகளில் உள்ளூர் பாஸ் தொகுதி ஆட்சேபம் தெரிவித்த 222 பெயர்கள் மீது விசாரணை நடத்திய பின்னர் அவர்களை நீக்குவதற்கு ஆணையம் ஒப்புக் கொண்டதாக பாயா ஜாராஸ் பாஸ் தேர்தல் செயலாளர் முகமட் பிஸால் முகமட் யூசோப் கூறினார்.

ஷா அலாமில் நடைபெற்ற அந்த விசாரணையின் போது முகமட் பிஸாலும் உடனிருந்தார். சம்பந்தப்பட்ட 222 பேரில் 30 பேர் மட்டுமே விசாரணைக்கு வந்திருந்ததாக அவர் சொன்னார்.

“தாங்கள் வாக்காளராவதற்கு விண்ணப்பிக்கவே இல்லை என அவர்களில் 28 பேர் கூறிக் கொண்டனர். தாங்கள் வாக்காளர்களாகப் பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பதும் தங்களுக்குத் தெரியாது என்றும் அவர்கள் தெரிவித்தனர்,” என இன்று தொடர்பு கொள்ளப்பட்ட போது முகமட் பிஸால் கூறினார்.

விசாரணையில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலோர் கம்ப்போடியர்கள் அல்லது இந்தோனிசியர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

அம்னோவின் முகமட் புஷ்ரோ மாட் ஜோகூர் வசமிருக்கும் பாயா ஜாராஸ் சட்டமன்றத் தொகுதி, பிகேஆர் கட்சியின் ஆர் சிவராசா வசமிருக்கும் சுபாங் நாடாளுமன்றத் தொகுதியில் அமைந்துள்ளது.

தேசியப் பதிவுத் துறையின் இணையத் தளத்தில் உள்ள பல நிரந்தர வாசிகளும் தற்காலிக வாசிகளும் கூட வாக்காளர்களாக பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக பாஸ் இதற்கு முன்னர் புகார் கூறியிருந்தது.

ஷா அலாம் பாஸ் தொகுதி ஆட்சேபம் தெரிவித்ததைத் தொடர்ந்து “சந்தேகத்துக்குரிய” 52 பெயர்களை அகற்றுவதற்கு தேர்தல் ஆணையம் ஒப்புக் கொண்டுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது.

கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் “போலி அடையாளக் கார்டுகளை” வைத்திருந்த 10,000க்கும் மேற்பட்ட வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கியிருப்பதாக பாஸ் ஜோகூர் இளைஞர் பிரிவுத் தலைவர் சுஹாய்சான் காயாட் கூறிக் கொண்டுள்ளார்.

ஒரே பெயரைக் கொண்ட, கிட்டத்தட்ட ஒரே மாதிரியான எண்களைக் கொண்ட வாக்காளர்கள் அவர்கள்.

அவர்களுக்கு “படியாக்கம் செய்யப்பட்ட” வாக்காளர்கள் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

TAGS: