‘Undilah’ வீடியோ மீட்டுக் கொள்ளப் பட்டதை எம்சிஎம்சி விளக்க வேண்டும்

வாக்காளர்களாகப் பதிவு செய்து கொள்ளுமாறு பொது மக்களுக்கு ஊக்கமூட்டும், கட்சிச் சார்பற்ற வீடியோவை ஒளிபரப்ப வேண்டாம் என உள்ளூர் ஒளிபரப்பு நிலையங்களுக்கு ஆணையிடப்பட்டதற்கான காரணத்தை அதிகாரிகள் விளக்க வேண்டும் என லெம்பா பந்தாய் எம்பி நுருல் இஸ்ஸா அன்வார் கேட்டுக் கொண்டுள்ளார்.

“”பொதுச் சேவை அறிவிப்பான வாக்களியுங்கள் ( Undilah ) என்னும் வீடியோவை பயன்படுத்த வேண்டாம் என எம்சிஎம்சி என்ற மலேசியப் பல்லூடக, தொடர்பு ஆணையம் உள்ளூர் ஒளிபரப்பு நிறுவனங்களுக்கு இந்த வாரம் உத்தரவிட்டிருக்கும் செய்தியை அறிந்து நான் மிகவும் வருத்தம் அடைந்துள்ளேன்,” என்றார் அவர்.

அந்த வீடியோவை பீட் தியோ என்பவர் தயாரித்தார், மலேசியா தினத்தன்று அது அறிமுகம் செய்யப்பட்டது.

அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளவர்களில் நுருல் இஸ்ஸாவும் ஒருவர் ஆவார். குவா மூசாங் எம்பி தெங்கு ரசாலி ஹம்சா, கல்வித் துணை அமைச்சர் வீ கா சியோங் உட்பட பல பிஎன் அரசியல்வாதிகளும் அதில் இடம் பெற்றுள்ளனர்.

மலேசியாவை உலகில் “சிறந்த ஜனநாயகமாக” மாற்றுவதாக அரசாங்கத் தலைவர்கள் கூறிக் கொண்டுள்ளதற்கு முரணாக அந்த நடவடிக்கை அமைந்துள்ளது என்றும் நுருல் இஸ்ஸா சொன்னார்.

“மலேசியாவை உலகில் “சிறந்த ஜனநாயகமாக” மாற்றுவதாக நாட்டை வழி நடத்துகின்றவர்கள் கூறியுள்ள வேளையில் எம்சிஎம்சி போன்ற அமைப்புக்கள் எடுத்துள்ள நடவடிக்கைகள் அத்தகைய முயற்சிகளை கீழறுப்புச் செய்வதோடு மலேசியர்களுடைய அறிவாற்றலையும் சிறுமைப்படுத்துகிறது,” என அவர் விடுத்த அறிக்கை குறிப்பிட்டது. அவர் பிகேஆர் உதவித் தலைவரும் ஆவார்.

நாட்டின் ஜனநாயக நடைமுறைகளை வலுப்படுத்தும் பொருட்டு வாக்காளர்களாக பதிவு செய்து கொள்ளுமாறு மலேசியர்கள் அந்த பொதுச் சேவை அறிவிப்பு கேட்டுக் கொள்வதாக அவர் சொன்னார்.

“அது அரசியல் சார்பின்றி அனைத்து மலேசியர்களின் ஜனநாயக உணர்வை தூண்டும் நோக்கத்தைக் கொண்டது.”

“அந்த பொதுச் சேவை அறிவிப்பு தொடர்பாக வெளியிட்டுள்ள உத்தரவை விளக்குமாறு நான் எம்சிஎம்சி-யைக் கேட்டுக் கொள்கிறேன். உண்மையில் எம்சிஎம்சி அந்த ஆணையை மீட்டுக் கொள்ள வேண்டும். பாசத்துக்குரிய நம் நாட்டில் ஜனநாயக நடைமுறைகளை வலுப்படுத்துவதற்கான ஒரு வழியாக அந்த வீடியோவை அது பிரபலப்படுத்த வேண்டும்,” என நுருல் இஸ்ஸா வலியுறுத்தினார்.

அந்தப் பொதுச் சேவை அறிவிப்பை ஒளிபரப்ப வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளும் உத்தரவை மின் அஞ்சல் வழி எம்சிஎம்சி ஆஸ்ட்ரோவுக்கு மீடியா பிரிமா பெர்ஹாட்டுக்கும் அனுப்பியுள்ளதாக செய்தி இணையத்தளம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

நாடு எதிர்நோக்கும்  பிரச்னைகளை தெங்கு ரசாலியும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளும் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளனர்.