திருச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட சிங்களவர்கள் மீது தாக்குதல்

இலங்கையிலிருந்து தமிழகம் சென்றிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட யாத்ரிகர்கள் மீது திருச்சி அருகே கல்வீசித் தாக்குதல் நடைபெற்றுள்ளது. அந்தத் தாக்குதலில் அவர்கள் பயணித்துக்கொண்டிருந்த வாகனங்களின் கண்ணாடிகள் சேதமடைந்து, யாத்ரிகர்கள் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கை புத்தளம் மாவட்டம் ஷிலா என்ற பகுதியைச் சேர்ந்த 184 சிங்கள யாத்ரிகர்கள் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை திருச்சி வந்தனர்.

நேற்று, பூண்டி மாதா கோயில் திருவிழாவைக் காணச் சென்றார்கள். அங்கு வரக்கூடாது என விடுதலைச் சிறுத்தைகள், நாம் தமிழர் இயக்கம் மற்றும் மதிமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். அதையடுத்து அவர்கள் அங்கிருந்து உடனடியாகப் புறப்பட்டனர்.

இலங்கை யாத்ரிகர்களுக்கு எதிர்ப்பு வலுத்துவரும் நிலையிலும், அதுதொடர்பான செய்தி வேகமாகப் பரவிவரும் நிலையிலும் அவர்களை இலங்கைக்கு பாதுகாப்பாகத் திருப்பியனுப்ப தமிழக காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டார்கள்.

அதற்காக, அவர்கள் வாகனங்களில் ஏற்றப்பட்டு, திருச்சி விமான நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டார்கள். வரும் வழியில், திருவாரூர் அருகே மதிமுகவினர் அவர்களது வாகனங்களை மறித்து காலணிகளை வீசியதாகக் கூறப்படுகிறது.

பின்னர் வாகனங்கள் தொடர்ந்து வந்துகொண்டிருந்தபோது, திருச்சி திருவெரும்பூர் அருகே மதிமுகவினர் கற்களை வீசித்தாக்குதல் நடத்தினார்கள். அதில் 12 பேர் காயமடைந்ததாகவும், மூன்று வாகனங்கள் சேதமடைந்ததாகவும் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பின்னர் அவர்கள் பாதுகாப்பாக விமான நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டார்கள். இன்று இரவு விமானம் மூலம் அவர்கள் இலங்கை திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தாக்குதலில் ஈடுபட்ட மதிமுவைச் சேர்ந்த 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை பிரஜைகள் யாரும் தமிழ்நாட்டுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு இலங்கை வெளியுறவு அமைச்சகம் ஏற்கெனவே அறிவுறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தின் பல இடங்களில் ஆர்ப்பாட்டம்!

இதனிடையே, தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் விடுதலைச் சிறுத்கைகள் கட்சியினர், நாம் தமிழர் இயக்கம் உள்ளிட்ட கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபசே, இந்தியமத்தியப் பிரதேசத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் 21-ம் தேதி வருகை தருவதை எதிர்த்தும், இலங்கை பாதுகாப்புப் படையினருக்கு இந்தியாவில் பயிற்சி தருவதைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

சேலம் மற்றும் செங்கல்பட்டில் சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

TAGS: