மஇகா-வை ஏசாதீர்கள்?

வணக்கம். இந்த வலைப் பகுதியில் சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன். இப்பகுதியில் நுழைவதற்கு காரணம் ஒன்றே ஒன்றுதான். அதாவது தெளிவான ஒன்றை எனக்கு தெரிந்ததை, நான் கண்ட உண்மைகளை பகிரவே வந்துள்ளேன். இதில் பலருக்கு உடன்பாடு இல்லாமல் போகலாம். சிலருக்கு பிடிக்காமல் போகலாம். அதற்காக  நான் வருந்தப் போவதில்லை. இது ஒரு திறந்த வெளிப் பார்வை.

மலேசிய இந்தியர் காங்கிரஸ் (MIC) ஒரு அரசியல் வாகனம். இவ்வாகனத்தை சரியாக இயக்குவதற்கு பலர் முயன்று இருக்கின்றனர். பலர் வெற்றி பெற்றிருக்கின்றனர். பலர் தோல்விகளைச் சந்தித்திருக்கின்றனர். ஆனால் ம.இ.கா. என்பது ஒரு உயிரில்லா இயக்கம். இந்த உன்னதமான இயக்கத்தைப் பற்றி தாறுமாறாக எழுதுவது ஒரு அறிவுடைமையான செயல் அல்ல என்பதே எமது தாழ்மையான கருத்து. இப்பக்கத்தில் 99% ம.இ.கா-வைக் குறைகூறுவது ஒரு சரியான முறை அல்ல என்பதே உண்மை. இந்த மாபெரும் கட்சியைப் பற்றி மிகவும் கேவலமாக மிகவும் தாழ்வாக பேசுவதை தவிர்க்கலாம்.

தலைவர்களைப் பற்றி குறை கூறலாம்; பாதகமில்லை. விமர்சனம் செய்யலாம்; பரவாயில்லை. அந்த தலைவனால் நான் முடக்கப்பட்டேன்; இந்திய சமுதாயம் சீரழிந்து விட்டது என்று கூறுவது அறிவுடைமை ஆகாது. கட்சியில் உள்ளவர்கள் அவர்களால் முடிந்த நிலையில் சேவை செய்கின்றார்கள். பலர் பயணிகளாகவும் இருக்கின்றார்கள். சிலர் இலாபம் கிடைக்கும் என்று எதிர்ப்பார்த்துக் காத்திருக்கின்றார்கள். சிலர் மற்றவர்களை எப்படி அழிக்கலாம் அவதூறு பேசலாம் என்று எண்ணுகின்றார்கள். இச்செயலானது எல்லா காலகட்டத்திலும்  நிகழ்கின்ற  விசயமே.

விசயத்திற்கு வருவோம். குறைகள் கூறுவோர் , ஏசுவோர், மட்டமாக பேசுவோர் அனைவரும் சற்று நிதானமாக சிந்தித்துப் பார்த்தால் ஒன்று கட்டாயமாக தெரியும். நாம் அழிக்கவா இக்குறைகளைக் கூறுகின்றோம். இல்லவே இல்லை. அதற்கு நல்ல தீர்வு காண வேண்டும் என்பதற்கே. நான் பேசுவது நீதியாய் இருந்தால் எடுத்துக் கொள்ளுங்கள். அநீதி என்பதை உணர்ந்தால் மறந்து விடுங்கள். இதையே ஒரு காரணமாக வைத்து என்னை ஏச ஆரம்பிக்காதீர்கள்.

என் ஆழமான கருத்து என்னவென்றால்  ஏசுவதை விடுத்து இக்கட்சியை எப்படி நிர்வகிப்பது என்று பேசலாமே. யார் தலைவராக வந்தால் சரியாக இருக்கும் என கணிக்கலாமே. ஒரு தலைவர் எப்படி இருக்க வேண்டும் என கூறலாமே. நாம் உறுப்பினராக இல்லாமல் இருக்கலாம். சமுதாய நன்மைக்காக வெட்ட நினைக்காமல் செழிப்பாக வளர்வதற்கு வழி வகுக்கலாமே. அழிப்பதற்கு துணைப் போகாமல் ஆக்கத்திற்கு ஊக்கம் தரலாமே.

இது வேண்டுகோள் தவிர கட்டளையல்ல. சிந்தித்துப் பார்க்கலாம். கண்களை மூடிக்கொண்டு உலகம் இருண்டு விட்டதாக நினைக்க வேண்டாம் என்று கூறுகின்றேன். முடியுமா? முயன்று பாருங்கள். முயற்சி திருவினையாக்கும்.

அன்புடன்

கணேசன் ஆறுமுகம்
சாதாரண ம.இ.கா கிளைத் தலைவன்