‘அட்டகத்தி’ – தமிழ் சினிமா வரலாற்றில் இன்னொரு பரிணாமம்

நூறாண்டுகாலத் தமிழ் சினிமா வரலாற்றில் ரொம்பவும் கவனமாய்க் கட்டமைக்கப்பட்டு வந்த காதலின் பரிணாமம் உடைந்து சிதறுவதோடு சமீபகால தமிழ்ச்சினிமா கவனப்படுத்தும் விளிம்புநிலை வாழ்வியலும் ‘அட்டகத்தி’ திரைப்படத்தில் நுட்பமாகத் துலக்கம் பெறுகின்றன.

சென்னைப் புறநகரில் உள்ள ஒரு கிராமப்பகுதிதான் கதைக்களம். கிராமம், நகரம் என்னும் சூழல்கள் தமிழ் சினிமாவிற்குப் புதிதல்ல என்றபோதும் காலங்காலமான கிராமத்து, நகரத்துக்கதைகள் யாரையெல்லாம் மையப்படுத்தின என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். ‘மண்வாசனை’ ‘தேவர் மகன்’ ‘சின்ன கவுண்டர்’ ‘நாட்டாமை’ உள்ளிட்ட திரைப்படங்கள் கிராமிய வாழ்வைப் படம்பிடிப்பவையாக மட்டும் இல்லாமல், நடுத்தரவர்க்கச் சாதிப் பெருமைகளை உயர்த்திப்பிடிப்பவையாக இருந்தன. நகர்ப்புற வாழ்வை மையப்படுத்திய பாலச்சந்தர் போன்றவர்களின் திரைப்படங்கள் மத்தியதர உயர்சாதி வாழ்வையே பேசுவதாக இருந்தன.

ஆனால், சமீபகாலத் தமிழ்சினிமா இந்த மையங்களைப் புறந்தள்ளி ஒடுக்கப்பட்டோர், விளிம்புநிலையினர், திருநங்கைகள் போன்ற வரலாறு மறுக்கப்பட்டவர்களின் வாழ்வியலையும் சொல்லத் தொடங்கியுள்ளது. நகர்ப்புற வாழ்வின் பன்மைத்தன்மைகள் கணக்கில் கொள்ளப்படுகின்றன. கிராமங்களிலிருந்து புலம்பெயர்ந்து வந்து சென்னையில் வதியும் தொழிலாளிகள் (அங்காடித் தெரு), பாலியல் தொழிலாளிகள் எல்லோருமே ‘Zoom’ பண்ணப்படுகிறார்கள்.

சினிமாத்துறைக்குள் புதிய இளைஞர்களின் வரவு, அவர்களின் சமூகப்பின்புலம், வழமைகளைக் கட்டுடைப்பதில் அவர்களிருக்கிருக்கும் வேட்கை ஆகியவையே இதனைச் சாத்தியமாக்குகின்றன. அதேவேளை இந்த மாற்றங்களுக்கு முகம் கொடுக்க முடியாத பழமைவாதிகள் தேங்கிப்போவதும் இயல்பாகிறது.

வாழ்நாள் சாதனைக்காகச் சென்ற ஆண்டில் ‘தாதா சாகிப் பால்கே’ விருது இயக்குநர் பாலச்சந்தருக்குக் கொடுக்கப்பட்டபோது, ‘தற்போதெல்லாம் அதிகம் படங்கள் இயங்காதது ஏன்’ என்ற கேள்வியும் அவர்முன் வைக்கப்பட்டது. அதற்கு அவர், ‘இப்போதெல்லாம் படமெடுக்கவேண்டுமென்றால் மதுரையைப் பற்றிச் சொல்லத் தெரிந்திருக்க வேண்டும். எனக்கு அதெல்லாம் வராது’ என்கிற பொருளில் பதிலளித்தார். அவர் சொல்லியது முற்றிலும் உண்மை. ஆனால் மதுரையை மட்டுமல்ல சென்னையையும் கூட அவரால் முழுசாகச் சொல்லி விடமுடியாது. அதன் பன்மைதன்மைகளை அவரால் கவனப்படுத்திவிட முடியாது. திரைத்துறையின் தற்போதைய புதுவரவுகள் அதைச் சிறப்பாகவே செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்களே இத்தகைய பின்புலங்களிலிருந்து வருபவர்களாக இருப்பது இதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

அந்தவகையில் ‘அட்டகத்தி’ திரைப்படம் இதுவரையில் சொல்லப்படாத புறநகர் கிராமப்புற வாழ்வை – தலித்களின் பண்பாட்டை – காதலின் பரிமாணத்தை ரொம்பவும் இயல்பாக ஆவணப்படுத்தியிருக்கிறது.

கதைநாயகன் ‘தினகரன்’ +2 ஆங்கிலத்தேர்வில் தோல்வி அடைந்துவிட்டு டுடோரியல் கல்லூரிக்கு சென்றுகொண்டிருக்கிறான். அவனோடு மனோ, மாரி, தேவா, மகேந்திரன் என்றொரு இளைஞர் பட்டாளமே சுற்றுகிறது. இவர்களின் ஃபுல்டைம்வொர்க் காதல், காதல், காதல்…. தான். எப்படியேனும் கைவசம் ஒரு காதலியைப் பெற்றுவிடவேண்டும் என்பதுதான் இவர்களின் இலட்சியம்.

பேருந்தில் வருகிற பள்ளி மாணவி பூர்ணிமாவை சைட் அடிக்க அவளும் சைட் அடிக்கிறாள். பின் காதலைச் சொல்லப்போகும் வேளையில் “அண்ணா ப்ளீஸ்னா… பின்னாடிலாம் வராதீங்கன்னா..” என்று சொல்லிப் ‘பாசமலராகி’ விடுகிறாள். தலையிலடித்துக் கொண்டு திரும்பும் நாயகன் திவ்யா, நதியா, அத்தைப் பொண்ணு அமுதா என்று விடாமுயற்சியோடு களம் இறங்குகிறான். எல்லா இடத்திலும் ஏதேனும் ஒருவைகையில் ‘பல்பு’ தான். ‘ச்சீச்சி இந்தப்பழம் புளிக்கும்’ என்று சொல்லி காதல் கனவுகளை கைவிடுகிறான். +2 வில் தேர்ச்சி பெற்றுவிட்டு அரசுகலைக் கல்லூரியில் பி.ஏ வரலாற்றுத் துறையில் சேருகிறான். அதே கல்லூரியில் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டுவந்த பூர்ணிமாவும் சேர்கிறாள்.

தினகரனை அவளே தேடிவந்து பேசுகிறாள். இருவருக்கும் இடையில் நட்பு ஏற்படுகிறது. பூர்ணிமா தன்னைக் காதலிப்பதாக நினைத்து அவளைச் சுற்றிச் சுற்றி வருகிறான். ஆனால் அவள் தான் விரும்பிய காதலனுடன் ஓடிப்போய்த் திருமணம் செய்துகொள்கிறாள். ஒருகணம் கண்ணீர் மல்கிக் குலுங்கி அழுதாலும் இதை take it easy – ஆக எடுத்துக்கொண்டு தனது பாதையில் மீண்டும் உற்சாகத்தோடு பயணிக்கிறான். எதிர்பாராதவிதமாக ஒரு பெண்ணைச் சந்திக்கிறான். அங்கேயும் காதல் அரும்புகிறது. மனைவியாகிறாள். ஒரு குழந்தைக்குத் தந்தையாகிறான். ஆசிரியனாக வாழ்க்கை நகர்கிறது.

ஒரு சராசரியான யதார்த்த வாழ்வைப் பிரதிபலிக்கும் இந்தக்கதை அடிப்படையில் இரண்டு முக்கிய அம்சங்களைக் கவனப்படுத்துகிறது. ஒன்று தலித் வாழ்வியலின் கொண்டாட்டக்கூறுகள்; மற்றொன்று காதலின் புனிதம் கட்டுடைக்கப்படுதல். மாட்டுக்கறிச் சோறு, நிலவொளியில் கானாப் பாட்டு, குடித்துவிட்டுக் கலாய்க்கும் கணவனை எதார்த்தமாக எடுத்துக் கொள்ளும் மனைவி, கோலியாட்டம், எழவு வீட்டில் இளவட்டங்கள் போடும் குத்தாட்டம் எல்லாமே தமிழ் சினிமாவில் ஏற்பட்டுவரும் மாற்றங்களைச் சுட்டுகின்றன. ‘பாலச்சந்தர்களால்’ முடியாத காரியத்தை ‘ரஞ்சித்கள்’ சாதித்துக் காட்டுகிறார்கள்.

மூன்றாம் பிறை, குணா, காதல் கோட்டை, காதலுக்கு மரியாதை எனப் பல வெரைட்டிகளில் வெளிவந்த காதல் காவியங்கள் முன்னிறுத்திய “புனிதக் காதல்” “ஒருமுறை மட்டுமே அரும்பும் தெய்வீகக் காதல்” போன்ற தத்துவங்களை இந்தப்படம் போட்டு உடைக்கிறது ; காலங்காலமாய் கற்பிதம் செய்யப்பட்டு வந்த கலாச்சாரக் கட்டுப்பெட்டித்தனத்தை போகிற போக்கில் கேலிசெய்கிறது. தினகரன், காதலில் தோல்வி ஏற்பட்டதும் அசால்டாக அடுத்த காதலுக்குத் தாவுவது, ‘இதுக்கெல்லாம் ஃபீல் பண்ணமுடியுமாடா?’ என்று சொல்லிக் கடந்துபோவது, என்பதான திரைக்கதை மாற்றங்களைப் பார்க்கும்போது தமிழ் சினிமாவின் மீது நம்பிக்கை ஏற்படத்தான் செய்கிறது. ‘அட்டகத்தியை’ தனது தயாரிப்பில் வெளியிட முன்வந்த ஸ்டுடியோ கிரீன் கே.ஈ.ஞானவேல்ராஜா பாராட்டிற்குரியவர்.

படத்தில் குறிப்பிடவேண்டிய இன்னொரு அம்சம், “கதாநாயகத்தனத்தின் (ஹீரோயிசம்) மரணம்”. நமது வறண்டு போன தமிழ் சினிமாவில் ஹீரோ என்பவன் எப்போதுமே வெல்ல முடியாத அதிமனிதன் (super man) தான். ஊரே திரண்டு வந்தாலும் எல்லோரையும் அல்லாக்காய் தூக்கி மல்லாக்கப் போடுபவன். யாராலும் அசைக்க முடியாதவன். எப்போதுமே வெற்றி வாகை சூடுபவன். ஆனால் அட்டகத்தி ‘தினகரன்’ அப்படியானவன் அல்லன். குத்துவாங்கி முகம் சிவப்பவன். அடிஉதைபட்டுத் தலைதெறிக்க ஓடுபவன். கானாப் பாடல் பாடி குதூகலிப்பவன். எழவு வீட்டில் குத்தாட்டம் போடுபவன். மொத்தத்தில் அவன் ஒரு ஹீரோதான், ஆனால் ‘ஹீரோ’ இல்லை.

நடிகர்கள் அத்தனை பேரும் புதுமுகங்கள். ஒவ்வொருவரும் தனது பங்கைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். குடிகாரத் தந்தை வேலு, மனைவி மீனாட்சி, அத்தைப் பெண் அமுதா, பூர்ணிமா, திவ்யா, நதியா, நண்பர்கள் பட்டாளம் எல்லோருடையதும் கச்சிதமான நடிப்பு. கதாநாயகன் ‘தினகரனாக’ வரும் தினேஷின் நடிப்பைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். மிகைப்படுத்தல்களோ ஆர்ப்பாட்டங்களோ இல்லாத தனது இயல்பான நடிப்பின்மூலம் முதல் படத்திலேயே முத்திரை பதித்திருக்கிறார். Casual, formal, லுங்கி, இடுப்புத்துண்டு அத்தனைக்கும் ‘நச்’ என்று பொருந்தும் உடல்வாகு, நமட்டுச் சிரிப்பு, துறுதுறுக்கும் கண்கள், கற்றை மீசை, செழித்த தாடி…. எந்தக் காட்சியிலும் சலிக்கவில்லை. பூர்ணிமாவின் மீதான காதலில் முதல்முறை தோற்கும்போது, “உனக்கு லவ் ஃபெயிலியர்டா சோகமா தான இருக்கணும்” என்று மனசாட்சி உசுப்ப, இல்லாத சோகத்தை இழுத்துவர முயற்சிக்கும் காட்சிகள் நடிப்பின் உச்சம். இருபது, நாற்பது வருடங்களாக நான்கைந்து நாயகர்களையே பார்த்துச் சலித்துப் போன பெண் ரசிகைகளுக்கு தினேஷ் ஒரு நல்வரவு.

இழிபண்பாடு என்பதாகப் புறக்கணிக்கப்பட்டு வந்த தலித் பண்பாட்டுக்கூறுகளில் வெகுமக்கள் தமக்கான கொண்டாட்டங்களைக் கண்டடைவதும், அந்தக் கானாப் பாடல் (நடுக்கடலுள் கப்பல எறங்கி தள்ள முடியுமா), எழவு ஆட்டம் எல்லாவற்றிலும் ஒத்ததிர்வதும் இயக்குநருக்குக் கிடைத்த ஆகப்பெரும்வெற்றி. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் பின்ணனி இசையும் பாடல்களும் ரசிக்கத்தக்கவை. குறிப்பாக அந்த இரண்டு கானாப்பாடல்கள் : “ஆடி போனா ஆவணி… நீ ஆள மயக்கும் தாவணி” “நடுக்கடலுள கப்பல எறங்கி தள்ள முடியுமா.. ஒரு தலையா காதலிச்சா வெல்ல முடியுமா”. மெல்லிசை பாடல்களும் உருகவிடும் ரகம்தான். பின்ணணி இசை வெறும் ஒலியாகக் கடந்துவிடாமல் ஒரு மொழியாகி நம்முடன் கலந்துரையாடுவது சிறந்த அனுபவம்.

இளைஞர்களிடையே திணிக்கப்பட்டுள்ள கலாச்சாரவாதங்களை இந்தப்படம் வெகு எளிதாக கலைத்துப்போட்டிருக்கிறது. கதையின் போக்கு ஒரு வழமையான சினிமாக் காட்சிகளின் தொகுப்பாக இல்லாமல் – திரைக்கதையை விடவும் திரைக்காட்சிகளுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளது. மொத்தத்தில் தமிழில் ஒரு மாற்று சினிமாவிற்கான முயற்சியை ‘அட்டகத்தி’ சிறப்பாகச் செய்திருக்கிறது. அந்தவகையில் வரவேற்கவும் பாராட்டவும் தக்கதெனினும் மனதில்பட்ட சில நெருடல்களையும் சொல்லியாக வேண்டும்.

ஹீரோ சைட் அடிக்கும் எல்லா பெண்களும் மூக்கும் முழியும் ஒட்டிய வயிறுமாய் செக்கச் செவேலென்று இருக்கிறார்கள். கறுப்பாய் இருக்கும் ஹீரோவின் அண்ணன் மற்றும் நண்பனுக்குக் கூட செக்கச் செவேலென்ற காதலிகள் தான். நாசமாய்ப் போன கதாநாயகிக் கலாச்சாரம் ஒரு மாற்று சினிமாவில்கூட உடைபடாதா?

குடியைப் பற்றிய பொதுப்புத்தி மனநிலையையே படம் பிரதிபலிக்கிறது. கல்லூரி மாணவர்களின் யதார்த்தத்தைப் படம்பிடித்துள்ள இயக்குநர், அவர்களின் ‘சரக்கடிக்கும்’ யதார்த்தத்தைக் கவனமாகத் தவிர்த்திருக்கிறார். ஹீரோ, காதல் சோகத்தில் கூட பெட்டிக்கடைக்குப் போய் “கூல்டிரிங்க்ஸ்” தான் குடிக்கிறார். பேருந்தில் ஹீரோவை ஒரு பெண் இழுத்து இழுத்து உரசும் காட்சியை அப்படி வலிந்து புகுத்தியிருக்க வேண்டாம். என்னதான் “கதாநாயகத்தனத்தின் மரணம்” நிகழ்த்தப்பட்டாலும் கதாநாயகனுக்காகவே ஒரு முழுநீளக்கதையை இட்டுநிரப்புவது என்னும் மோசடிகளுக்கு அவ்வளவு எளிதில் மரணம் வாய்க்காது போலும்!

இறுதியாக, படம் பார்த்துக் கொண்டிருக்கும் போது உறுத்திக் கொண்டே இருந்த ஒரு நினைவையும் சொல்லியாக வேண்டும்.. திவ்யா இல்லனா நதியா என்று கடந்துபோகும் ஆணின் ஹீரோயிசத்தைப் போல் ரமேஷ் இல்லனா சுரேஷ் என்று கடந்துபோகும் பெண்ணின் ஹீரோயினிசம் என்றைக்குத் தமிழ் சினிமாவாகும்?

நன்றி :

மீனா, வல்லினம்

http://www.vallinam.com.my