சைபுலுக்கு எதிரான அவதூறு வழக்கை அன்வார் மீட்டுக்கொண்டார்

ஒரு திடீர் திருப்பமாக, மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம், தம் முன்னாள் உதவியாளர் முகம்மட் சைபுல் புஹாரி அஸ்லானுக்கு எதிராக தொடுத்திருந்த அவதூறு வழக்கை மீட்டுக்கொள்வதென முடிவு செய்துள்ளார். குதப்புணர்ச்சி வழக்கில் தாம் விடுவிக்கப்பட்டதே தாம் நிரபராதி என்பதை நிரூபிக்கிறது என்றாரவர்.

அந்த அவதூறு வழக்கு இன்று கோலலும்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி சு கியோக் இயம்மின் பரிசீலனைக்கு வந்தது.

அப்போது அன்வாரின் வழக்குரைஞர் ரஞ்சிட் சிங், தம் கட்சிக்காரர் வழக்கைத் திரும்பப் பெற்றுக்கொள்ள விரும்புவதாகக் கூறினார்.  ஜனவரி 9-இல், நீதிபதி முகம்மட் ஸபிடின் முகமட் டியா குதப்புணர்ச்சி வழக்கிலிருந்து அன்வாரை விடுவித்து விட்டார் என்பதால் அன்வார் சைபுல்மீதான வழக்கைத் திரும்பப் பெற்றுக்கொள்ள விரும்புவதாக அவர் சொன்னார்.

2008, ஜூன் 26-இல், தேசா டமன்சாரா கொண்டோமினியத்தில் சைபுலுடன் குதப்புணர்ச்சியில் ஈடுபட்டதாக அன்வார்மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

அக்குற்றச்சாட்டிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார் என்றாலும் தீர்ப்பை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்துகொண்டிருக்கிறது.