‘கைரி அவர்களே, ஹுடுட் சட்டத்துக்காக திருத்தங்கள் கொண்டு வர கடைசி வரை போராடுங்கள்’

கிளந்தான் ஹுடுட் சட்டத்தை அமலாக்குவதற்கு உதவியாக கூட்டரசு அரசாங்கம் அரசியலமைப்பைத் திருத்த வேண்டும் என அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுதின் தெரிவித்துள்ள யோசனையை பாஸ் இளைஞர் பிரிவு வரவேற்றுள்ளது.

“ஹுடுட் தொடர்பாக அம்னோவில் அதன் தலைவர் உட்பட முக்கிய நிலைகளில் உள்ள உறுப்பினர்கள் பின்பற்றுகிற நிலைக்கு மாறாக கருத்துத் தெரிவித்துள்ள கைரி-க்கு சிலாங்கூர் பாஸ் வாழத்துக் கூறுகிறது,” என அதன் தலைவர் ஹாஸ்புல்லா முகமட் ரிட்ஸ்வான் ஒர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக அதிகாரத்தில் இருக்கும் அம்னோ, தான் மலாய்-முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதிப்பதாக கூறிக் கொள்கிறது. அதனால் மலேசியாவில் ஹுடுட் சட்டத்தை அமலாக்குவதில் அது முன்னிலை வகிக்க வேண்டும். ஆகவே அது கிளந்தான் நடவடிக்கையை தடுக்கக் கூடாது என்றார் அவர்.

கைரியின் யோசனை அத்துடன் நின்று விடாமல் தாம் சொன்ன திருத்தங்களை அரசாங்கம் செய்வதை உறுதி செய்ய கடைசி வரை அவர் போராட வேண்டும் என்றும் ஹாஸ்புல்லா கேட்டுக் கொண்டார்.

“ஹுடுட் விவகாரத்தில் வீரராகக் காட்டிக் கொள்வதற்காக கெட்டிக்காரத்தனமாக மட்டும் பேசி வார்த்தைகளை அள்ளி விட வேண்டாம். அம்னோ/பிஎன் தலைவர்கள் நெருக்கும் போதும் மருட்டும் போதும் சிறுவனைப் போலா கோழையாகி விட வேண்டாம்,” என அவர் கைரியை எச்சரித்தார்.

கைரியின் யோசனைக்கு ஆதரவு கொடுக்குமாறும் அவர் அனைத்து அம்னோ இளைஞர் பிரிவு உறுப்பினர்களையும் ஹாஸ்புல்லா கேட்டுக் கொண்டார்.

“ஹுடுட் விவகாரத்தை பாஸ் தொடர்ந்து ஒர் அரசியல் பொருளாகப் பயன்படுத்துவதைக் காண அம்னோ இளைஞர் பிரிவு விரும்பவில்லை,” என ரெம்பாவ் எம்பி-யுமான கைரி சொன்னதாக அம்னோவுக்கு சொந்தமான உத்துசான் மலேசியாவின் ஞாயிற்றுக் கிழமை பதிப்பான மிங்குவான் மலேசியா நேற்று செய்தி வெளியிட்டிருந்தது.

“கிளந்தானில் ஹுடுட் சட்டத்தை பாஸ் அமலாக்குவதற்கு அனுமதிக்கும் பொருட்டு கூட்டரசு அரசியலமைப்பை கூட்டரசு அரசாங்கம் திருத்த வேண்டிய அவசியம் உள்ளது.”

ஹுடுட் பிரச்னை காலம் காலமாகத் தொடருகிறது. அது தேர்தல்களுடன் பெரிதும் தொடர்புடையது. அது கடந்த வாரம் மீண்டும் முளைத்தது. அரசியல் களத்தில் இரு புறமும் உள்ளவர்கள், ஒருவர் மற்றவர் செய்வதை நாடகம் என வருணித்துள்ளனர்.

பாஸ் கட்சியும் டிஏபி-யும் அந்த விவகாரம் மீது நேருக்கு நேர் மோதிக் கொள்வதாக தோன்றும் வேளையில் ஹுடுட் அமலாக்கப் பிரச்னை தொடர்பாக மசீச-வையும் கெரக்கானையும் பேச விட்டு விட்டு அம்னோ மௌனமாக இருப்பதின் மூலம் வேடம் போடுவதாக எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் குற்றம் சாட்டியுள்ளார்.