தேர்தல் நாள் தேர்வு அவ்வளவு சிரமமானதா?

-செனட்டர் எஸ். இராமகிருஷ்ணன்

2009-ம் ஆண்டு பிரதமர் பதவி ஏற்றது முதல், நஜிப் துன் ரஸாக், நாட்டின் 13வது பொதுத்தேர்தல் எந்நேரத்திலும் நடைபெறலாம் என சமிக்ஞை காட்டிக் கொண்டிருக்கிறார்.

தேர்தலை நடத்த தேர்தல் ஆணையமும் தயார் நிலையில் இருக்கும் நிலையில் நாட்டு மக்கள் அனைவரையும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்க வைத்திருக்கிறார் பிரதமர்.

வணிகர்களும், வெளிநாட்டு முதலீட்டாளர்களும் தங்களது புது வர்த்தகம் மீதான இறுதி முடிவை நிலுவையில் வைத்துள்ளனர். சில தரப்பினர் தேர்தல் வரை பொறுத்திருந்து பார்ப்போம் எனும் வைராக்கியத்துடன் உள்ளனர். பலர் தங்கள் வெளிநாட்டுப் பயணத்தைக் கூட தள்ளி வைத்துள்ளனர்.

தேர்தல் நாள் அறிவிப்பில் பிரதமர் நியாயமாக நடந்துகொள்கிறாரா? ஜனநாயக முறையில் நடைபெறும் பொதுத் தேர்தலுக்கான நாள் தேர்வில் இத்தகைய நிச்சயமற்ற நிலை ஏன்?

அம்னோவும் தே.மு.வும்தான் தயார் நிலையில் இல்லையா? அல்லது  தேர்தலின் விளைவு குறித்து அவை அச்சமும், ஐயமும் கொண்டுள்ளனவோ?

இதுகாறும் அம்னோ/தே.மு. பேரிய தோல்வியைத் தழுவியதில்லை! தோல்வியை வரித்துக்கொள்ளவும் அவை தயாராக இல்லை! வாய்ப்பு கொடுத்தால் தேர்தலை கூடிய விரைவில் நடாத்தாமல் அப்படியும் இப்படியுமாகக் காலத்தைக் கடத்தி உலகின் மீக நீண்ட காலமாக ஆட்சியில் இருந்து வரும் கட்சி எனும் பெயரை நிலைநாட்ட தே.மு. முயற்சிக்கலாம்.

தேர்தல் நாள் இழுபறியாக இருப்பதற்குத் தாங்களே பொறுப்பு என்பதைக் காட்டிக்கொள்ளாமல் இருப்பதற்காக பி.கே.ஆர், ஜ.செ.க, பாஸ் கட்சிகள் மீது பிரதமரும், துணைப் பிரதமரும் பழி போடுகின்றனர். அம்னோ தோல்வியுற்றால் மலாய்க்காரர்கள் ‘அனைத்தையும்’ இழந்துவிடுவர் என்றும் பயமுறுத்தி வருகின்றனர்.  .

மலாய் சமூகம் அம்னோவை ஏன் ஒதுக்க வேண்டும் என்பது குறித்து அம்னோ தன்னைத் தானே ஆத்மீகமாக ஆராய வேண்டும். மலாய் இனத்தினர் தற்போது கூடுதல் விழிப்புணர்வு பெற்றுள்ளதோடு தங்களைச் சுற்றியுள்ள உலகின் பொருளாதார மாற்றம் எத்தகையது என்பதையும் உணர தொடங்கிவிட்டனர்

அம்னோவில் போலித்தனம், லஞ்ச ஊழல், உறவினருக்கு முதற்சலுகை போன்றவை மலிந்திருப்பதை அவர்கள் அறிந்துகொண்டனர்.

சுதந்திரம் பெற்று 55 ஆண்டுகள் ஆகியும் மலேசிய மக்களைப் பிரித்துவைக்கும் துருப்புச் சீட்டைப் பயன்படுத்துவதை அம்னோ இன்னமும் நிறுத்தியப்பாடில்லை. மக்கள் கூட்டணியை மாசு படுத்துவதற்கும் அதன் அரசியல் எதிர்காலத்தை முடக்கி வைப்பதற்கும் பலதரப்பட்ட வியூகங்கள் பயன்படுத்தப்படுகின்றன. எனினும் மக்கள் கூட்டணி ஒரு திடமான எதிர்கட்சியாகவே விளங்கிவருகிறது.

பி.கே.ஆர் கட்சியை நோக்கி பாய்ச்சப்படும் இனத்துவேசம் ஒவ்வொன்றும், அதன் பயணப் பேருந்துகளை நோக்கி வீசப்படும் ஒவ்வொரு கல்லும் அம்னோ/தே.மு. வுக்கான ஆதரவை திசை திருப்புகின்றன என்பதை அம்னோ தலைவர்கள் அறிவார்களா?

தே.மு. தோற்றால் வன்செயல் மூலும் என மக்களிடையே அச்ச உணர்வு தோற்றி- விக்கப்பட்டு வருகிறது. அதே வேளை அம்னோ ஆதரவாளர்கள் பிற இனங்கள்  மீது வெறுப்பும் சந்தேகமும் கொள்ளும்டியாக பிரதமர் மற்றும் துணைப் பிரதமர் ஆகியோரின் உரைகள் உள்ளன.

ஒரே மலேசியா பற்றி பேசும் அதே நேரத்தில் வெவ்வேறு இனங்களிடையே  வேறுபட்ட சித்தாந்தங்களை அவர்கள் கையாண்டு வருகின்றனர். அம்னோவின் இந்தப் பிரித்து ஆளும் போக்கு மலேசியர்களை ஒன்றுபடுத்தாது. அதே வேளையில்  மலேசியர்கள் மாறுதல் குறித்து சிந்திக்க ஆரம்பித்துவிட்டனர்.

நாடு தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதுதான் முக்கியமே தவிர தேசிய நலன் மற்றும் அமைதி சீர்குலைவு குறித்து அம்னோ/தே.மு தலைவர்களுக்கு கரிசணம் கிடையாது.

தேசிய முன்னணி 13வது பொதுத் தேர்தலில் வெற்றிபெறும் சூழ்நிலை உருவாகும் வரை பிரதமரும் தேர்தல் தேதியை அறிவிக்கப் போவதில்லை!

ஒரு வேளை மக்கள் கூட்டணி வெற்றி பெற்றால், அரசாங்கம் என்றென்றும் அதன் ஆட்சியிலேயே இருக்கும் என முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதிர் கோடி காட்டியுள்ளார். லஞ்ச ஊழலும் பதவி துஷ்பிரயோகமும் பரவலாக இருப்பதால், அம்னோ மீண்டும் மகுடம் சூட்டிக்கொள்ளும் வாய்ப்பு அந்தரத்தில் என்பது அவருக்குத் தெரிகிறது!

தேர்தலை நடத்தி வெற்றி வாகை சூடுவது என்பது அம்னோவுக்கு இப்போது கானல்நீர். ஆக தேதியை எப்படி அறிவிப்பார் பிரதமர்?

TAGS: