சிவபாலன் முனைவர் பட்டத்திற்கான தேர்வில் வெற்றி பெற்றதை நீதிமன்றம் உறுதிசெய்தது

மலாயா பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையில் தற்போது மூத்த விரிவுரையாளராக பணியாற்றி வரும் ஜி. சிவபாலன் தமது முனைவர் பட்டத்திற்கான வாய்மொழித் தேர்வில்  தாம் வெற்றி பெற்றதாக மலாயா பல்கலைக்கழக (யுஎம்) தேர்வுக்குழு செப்டெம்பர் 28, 2006இல் அறிவித்த வாய்மொழி முடிவு செல்லக்கூடியது மற்றும் அமலாக்கக்கூடியது என்பதை உறுதிப்படுத்துமாறு செய்திருந்த மனுவை கோலாலம்பூர் உயர்நீதிமன்றம்இன்று ஏற்றுக்கொண்டது.

கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி ரோகானா யுசுப், சிவபாலனின் மனுவை ஏற்றுக்கொண்டு அவருக்கு செலவுத்தொகை ரிம7,000 வழங்குமாறு மலாயா பல்கலைக்கழகத்திற்கு உத்திரவிட்டார்.

மேலும், 2006 ஆம் ஆண்டிலிருந்து தமக்கு கிடைக்க வேண்டிய அனுகூலங்கள் அனைத்தும், ஊதிய உயர்வு உட்பட, அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் தமது மனுவில் கோரியிருந்தார்.

தமது மனுவில் அக்டோபர் 16, 1996 ஆம் ஆண்டில் முனைவர் பட்டப் படிப்பிற்கு பதிவு செய்து கொண்டதாகவும், மார்ச் 20, 2006 இல் முறைப்படி தமது ஆய்வைத் தாக்கல் செய்ததாகவும் சிவபாலன் கூறினார்.

மேலும், செப்டம்பர் 28, 2006 இல் முறைப்படி வாய்மொழித் தேர்வில் (viva voce)
பங்கேற்றதாகவும் அவர் தெரிவித்தார்.

வாய்மொழித் தேர்வு நடந்த அன்றே அவர் அத்தேர்வில் வெற்றி பெற்றதாக அவரிடம் கூறப்பட்டது. ஆனால், மாதங்கள் பல கடந்தும் அவருக்கு அதிகாரப்பூர்வமான கடிதம் அனுப்பப்படவில்லை.

இது குறித்து சிவபாலன் மேற்கொண்ட முயற்சிகளுக்கு சரியான பதில் கிடைக்கவில்லை. அதில் சில பிரச்னைகள் இருப்பதாக மட்டுமே அவரிடம் கூறப்பட்டது.

மூன்று ஆண்டுகளுக்கு மேலாக அவருக்கு எவ்விதத் தகவலும் அளிக்கப்படவில்லை. புதிய துணை வேந்தரிடம் முறையிட்ட பின்னர் உடனடி நடவடிக்கை எடுக்க அவர் உத்தரவிட்டார்.

2010 ஆண்டு டிசம்பரில் இரண்டாவது முறையாக வாழ்மொழித் தேர்வில் பங்கேற்குமாறு கேட்டுகொள்ளப்பட்டார். முதலாவது வாழ்மொழித் தேர்வு நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் தெரியாததால் இரண்டாவது வாய்மொழித் தேர்வில் பங்கேற்க சிவபாலன் மறுத்து விட்டார்.

இறுதியில், சிவபாலன் முனைவர் பட்டத்திற்கான தேர்வில் தோல்வியுற்றதாகவும், அவர் இரண்டாவது வாய்மொழித் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்ட மாட்டார் என்றும் யுஎம் தமது கட்சிக்காரருக்கு தெரிவித்ததாக அவரின் வழக்குரைஞர் ஈஸ்வரி கூறினார்.

தாம் முனைவர் பட்டத்திற்கான வாழ்மொழித் தேர்வில் வெற்றி பெற்றதாக தெரிவிக்கப்பட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு யும் ஏன் அவ்வாறான முடிவை எடுத்தது என்று சிவபாலன் வினவியதாக ஈஸ்வரி கூறினார்.

இன்று, சிவபாலன் முனைவர் பட்டத்திற்கான தேர்வில் தோல்வியுற்றார் என்றும் அவர் அப்பட்டத்திற்கான படிப்பை மீண்டும் தொடர அனுமதிக்கப்பட மாட்டார் என்றும் கூறும் யுஎம்மின் கடிதம் செல்லத்தக்கதல்ல என்று நீதிபதி ரோகானா தமது அறையில் தீர்மானித்தார்.

செப்டம்பர் 28, 2006 இல் நடந்த சிவபாலனின் வாழிமொழித் தேர்வில் என்ன நடந்தது என்பது குறித்து யுஎம்மின் உள்தேர்வாளர் பேராசிரியர் எம். இராஜேந்திரன் அளித்த சத்தியப்பிரமான வாக்குமூலம் இன்னும் “தவறு என்று நிரூபிக்கப்படவில்லை”, என்று நீதிபதி கூறினார்.

பேராசிரியர் இராஜேந்திரனின் சத்தியப்பிரமாணத்தில் வாய்மொழித் தேர்வுக்குழு முனைவர் தேர்வுக்கான ஆய்வில் எவ்விதத் திருத்தமும் தேவைப்படாமல் சிவபாலன் வெற்றி பெற்றுள்ளார் என்றும் அவருக்கு முனைவர் பட்டம் வழங்கலாம் என்று ஏகமனதாக தீர்மானித்தது என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆகவே, தாம் முனைவர் பட்டத்திற்கான தேர்வில் வெற்றி பெற்றதாக கருதும் நியாயமான எதிர்பார்ப்பு சிவபாலனுக்கு உண்டு என்று நீதிபதி கூறினார்.

சிவபாலனின் தகுதி குறித்து அவரிடம் தெரிவிக்க மூன்று ஆண்டுகால தாமதம் ஏன் என்று யும் விளக்கம் அளிக்கத் தவறி விட்டதாகவும் நீதிபதி கூறினார்.