இந்திய அரசியல் அழுக்கு நிறைந்தது : ஹசாரே விமர்சனம்

புதுடில்லி: “அரசியல் முழுவதும் அழுக்கு நிறைந்தது,” என, சமூக சேவகர் அன்னா ஹசாரே கூறியுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தன் சொந்த ஊரான, ராலேகான் சித்தியிலிருந்து நேற்று டில்லி சென்ற அன்னா ஹசாரே ஊழலுக்கு எதிரான தன் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி ஆதரவாளர்களுடன் ஆலோசித்தார்.

இதன்பின் நிருபர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:

“அரசியல் பாதை புனிதமானது அல்ல; அது, முழுவதும் அழுக்கு நிறைந்தது. அதேநேரத்தில் போராட்டப் பாதை புனிதமானது. ஒரு பெரிய இயக்கமே, நாட்டிற்கு நல்ல எதிர்காலத்தை தர முடியும்; அரசியலால் தர முடியாது. அரசியல்பாதை சரியானது அல்ல என எங்களின் குழுவில் இடம் பெற்றிருந்த பலரிடமும் நான் கூறியுள்ளேன்.”

“ஊழலை ஒழிக்க, அரசியல் ரீதியான ஒரு மாற்று அமைப்பை உருவாக்க வேண்டும் என, சிலர் என்னிடம் தெரிவித்த போது, அது நல்ல யோசனையே என நான் கூறினேன். அதேநேரத்தில், அந்த மாற்று அமைப்பை எப்படி உருவாக்கப் போகிறீர்கள் என அவர்களிடம் ஐந்து முதல் ஆறு கேள்விகளை கேட்டேன். அந்த கேள்விகளுக்கு, அவர்கள் இன்னும் பதில் அளிக்கவில்லை.”

“புதிதாக உருவாக்கும் அரசியல் கட்சிக்கான உறுப்பினர்களை எப்படி தேர்வு செய்வீர்கள்? அந்தக் கட்சிக்கு எங்கிருந்து பணம் வரும்? புதிய கட்சியில் சேரும் உறுப்பினர்களில் யாரை எப்படி வேட்பாளர்களாக தேர்வு செய்வீர்கள்? என்பது போன்ற கேள்விகளே அவை.”

“நான் தேர்தலில் போட்டியிட விரும்பியிருந்தால் அதை முன்னரே செய்திருப்பேன். பஞ்சாயத்து தேர்தலில் கூட நான் போட்டியிட்டதில்லை. ஊழலுக்கு எதிராக ஒரு சரியான மாற்று அமைப்பை உருவாக்க வேண்டும் என நான் கூறியது அரசியல் ரீதியான மாற்று அமைப்பு அல்ல.”

“எனது அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி, ஆதரவாளர்கள், ஓய்வு பெற்ற அதிகாரிகள் மற்றும் பலருடன் அடுத்த இரண்டு நாட்களுக்கு ஆலோசனை நடத்துவேன். அதன் பின் முடிவு எடுப்பேன். அரசியல் என்பது சரியான பாதை அல்ல. அரசியல் நமக்கெல்லாம், சரியான எதிர்காலத்தை தரும் என்றால் ஒரு கட்டத்தில் நாம் நம்நாட்டின் தங்கத்தை எல்லாம் அடகு வைத்தது ஏன்? அரசியல் மூலம் நாடு சரியான எதிர்காலத்தை பெற முடியாது.” இவ்வாறு அன்னா ஹசாரே கூறினார்.

TAGS: