தடையை எதிர்த்து வழக்காடுவதற்கு பெர்சே-க்கு அனுமதி கிடைத்தது

பெர்சே 2.0 என அழைக்கப்படும் தேர்தல் சீர்திருத்த இயக்கத்துக்கு உள்துறை அமைச்சு விதித்த தடையை எதிர்த்து அந்த அமைப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க முடியும்.

பல அரசு சாரா அமைப்புக்களின் கூட்டணியான பெர்சே 2.0, உள்துறை அமைச்சும் அரசாங்கமும் பிறப்பித்த அந்தத் தடை உத்தரவை எதிர்த்து வழக்காடுவதற்கு கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் (முறையீடுகள், சிறப்பு அதிகாரங்கள் பிரிவு) இன்று அனுமதி அளித்தது. 

வழக்குரைஞரும் தலைவருமான அம்பிகா ஸ்ரீனிவாசனும் 14 ஏற்பாட்டுக் குழு உறுப்பினர்களும் சமர்பித்துள்ள விண்ணப்பம் “அற்பமானது அல்ல” எனத் தாம் கருதுவதாக நீதிபதி ரோஹானா யூசோப் கூறினார்.

அரசாங்கம் சமர்பித்த ஆட்சேபத்தை நிராகரித்த நீதிபதி அந்த விண்ணப்பத்தின் தகுதிகளை செவிமடுப்பதற்கு நீதிபதி ரோஹானா நவம்பர் 22ம் தேதியை நிர்ணயம் செய்தார்.

என்றாலும் பெர்சே 2.0 பெட்டாலிங் ஜெயா அலுவலகத்திலிருந்து பொருட்களைத் தாங்கள் கைப்பற்றியது மீது பிரதிவாதிகள் தெரிவித்த ஆட்சேபனையை நீதிபதி ஏற்றுக் கொண்டார்.

நீதிபதி அறையில் அந்த முடிவுகள் எடுக்கப்பட்டன.

நிர்வாக ஆணையை எதிர்த்து வழக்காடுவதற்கு பெர்சே 2.0க்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது மிக முக்கியமான முடிவு என அண்மையில் பிரான்ஸ் நாட்டின் உயரிய சிவிலியன் விருதைப் பெற்ற அம்பிகா நிருபர்களிடம் கூறினார்.

“நீதிமன்றம் அனுமதி அளித்தது குறித்து நான் மகிழ்ச்சி அடைந்துள்ளேன். இது ஒரு நுழைவாயில் மட்டுமே. ஆணையை எதிர்ப்பதற்கு எங்களுக்கு உரிமை இருப்பதாக நாங்கள் கருதுகிறோம்.”

அரசாங்கம் பெர்சே 2.0ஐ தடை செய்த பின்னர் தேர்தல் சீர்திருத்தத்துக்கான ஜுலை 9 பேரணிக்கு முன்னதாக அம்பிகாவும் ஏற்பாட்டுக் குழு உறுப்பினர்களும் அந்த விண்ணப்பத்தை தாக்கல்  செய்தனர்.

சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்தைச் சார்ந்த வழக்கு விசாரணை முறையீட்டுப் பிரிவின் தலைவர் கமாலுதின் முகமட் சைட் பிரதிவாதிகள் சார்பில் ஆஜரானர். மேல் முறையீடு செய்து கொள்வது மீது  தாம் மேல் உத்தரவை நாடப் போவதாக அவர் சொன்னார்.

“நான் சட்டத்துறைத் தலைவருக்கு முதலில் விளக்க வேண்டும். ஏனெனில் அவர் எனக்கு எஜமானர். நாங்கள் முறையீடு செய்வதற்கு 14 நாட்கள் அவகாசம் உள்ளது.”

“இல்லை என்றால், நாங்கள் அந்த விண்ணப்பத்தின் தகுதிகள் குறித்த விசாரணைத் தேதிக்காக காத்திருப்போம்,” என்றார் அவர்.