கூடங்குளம் அணுமின் நிலையத்தை கடல் வழியாக மீனவர்கள் முற்றுகை

ராதாபுரம் : கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தி அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தினர் இடிந்தகரையில் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அணுஉலையில் எரிபொருள் நிரப்ப எதிர்ப்பு தெரிவித்து கடந்த மாதம் 9-ந் தேதி கடற்கரை வழியாக சென்று கூடங்குளம் அணு மின்நிலையத்தை முற்றுகையிட்டனர்.

இந்நிலையில் கூடங்குளம் அணுஉலையில் எரிபொருள் நிரப்பும் பணி தொடங்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த போராட்டக்காரர்கள் கூடங்குளம் அணுமின் நிலையத்தை கடல் வழியாக மீண்டும் முற்றுகையிட போவதாக அறிவித்தனர்.

இதையடுத்து நேற்றிருந்தே போலீஸ் படை கூடங்குளம் பகுதியில் குவிக்கப்பட்டது. போராட்டத்தின் போது போலீசார் ஊருக்குள் நுழைந்து விடாமல் இருப்பதற்காக இடிந்தகரை சுனாமி காலனி பகுதியில் 2 இடங்களில் போராட்டக்காரர்கள் சாலையில் குழி தோண்டி துண்டித்தனர்.

மேலும் சுனாமி காலனி பகுதியில் 3 இடங்கள், இடிந்தகரை அருகே ஒரு இடம் என 4 இடங்களில் ரோட்டின் குறுக்கே முள் செடிகளை வெட்டி போட்டு தடை ஏற்படுத்தினர். போராட்டக் குழுவை சேர்ந்த இளைஞர்கள் அப்பகுதியில் நின்று கண்காணித்து வருகின்றனர்.

கடந்த முற்றுகை போராட்டத்தின் போது போராட்டக்காரர்கள் காவல் துறையினரை திசை திருப்பிவிட்டு மாற்று வழியில் சென்று அணுஉலையை முற்றுகையிட்டது போல் நடக்காமல் இருக்க கூடங்குளம், இடிந்தகரை, தாமஸ் மண்டபம், வைராவிகிணறு உள்ளிட்ட பகுதிகளில் இன்று போலீஸ் படை குவிக்கப்பட்டது.

மேலும் கூடங்குளம் அணுமின்நிலைய கிழக்கு மற்றும் தெற்கு கண்காணிப்பு கோபுரங்கள் இருக்கும் பகுதியிலும், கடந்த முறை முற்றுகை போராட்டம் நடந்த கடற்கரை பகுதியிலும் ஏராளமான போலீசார் நிறுத்தப்பட்டனர்.

நூற்றுக்கணக்கான இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், தமிழ்நாடு சிறப்பு காவல் படையின் 19 கம்பெனி போலீசார், அதிவேக அதிரடி படையின் 3 கம்பெனி வீரர்கள், மத்திய தொழில் பாதுகாப்பு படை, மத்திய ஆயுதப்படை, கடலோர காவல்படை ஆகியவற்றை சேர்ந்தவர்கள் உள்பட 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இவர்களை தவிர கடல் பகுதியில் தூத்துக்குடி மற்றும் ராமேஸ்வரத்தை சேர்ந்த கடலோர காவல் படை போலீசார் 10-க்கும் மேற்பட்ட படகுகளில் ரோந்து வந்து கண்காணித்தனர். கப்பற்படையை சேர்ந்த வீரர்கள் கப்பலில் வந்து அணுமின் நிலைய பகுதிக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்து விடாமல் இருக்கும் வகையில் தீவிரமாக கண்காணித்தனர்.

திட்டமிட்டப்படி போராட்டக்குழுவினர் ஒரு பகுதியினர் காலை 9 மணி அளவில் இடிந்தகரையில் இருந்து சுமார் 80 படகுகளில் கடலுக்குள் புறப்பட்டு சென்றனர். மீதமுள்ளவர்கள் அடுத்தடுத்து படகுகளில் அணுமின் நிலையத்தை நோக்கி சென்றனர்.

போராட்டக்காரர்கள் அணுமின்நிலையத்தை 500 மீட்டர் தூரத்தில் நின்றபடி முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்திருந்தனர். இருந்த போதிலும் அவர்கள் அணுமின் நிலையம் அருகே வந்து விடாமல் தடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் போலீசார் செய்திருந்தனர்.

மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி ஏந்தியபடி அணுமின்நிலைய கண்காணிப்பு கோபுரங்களில் நின்று கண்காணித்தனர்.

TAGS: