ஹாங்காங்கிலிருந்து ரிம40 மில்லியன் கடத்தப்பட்டது மூசாவுக்காக அல்ல சாபா அம்னோவுக்காக

ஹாங்காங்கில் ரிம40 மில்லியனுடன்  சாபா வணிகர் ஒருவர் பிடிபட்ட விவகாரத்தை ஆராய்ந்த மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) சட்டத்துறைத் தலைவரிடம் தாக்கல் செய்துள்ள ஆய்வு ஆவணங்கள் அப்பணம் சாபா முதலமைச்சர் மூசா அமானுடையது அல்ல என்றும் அது மாநில அம்னோவுக்கான பணம் என்றும் கூறுகின்றன.

“அப்பணம் சாபா அம்னோ தொடர்புக்குழுவுக்கு அளிக்கப்பட்டதாகும்.  அது முதலமைச்சருக்குச் சொந்தமான பணமல்ல”. நாடாளுமன்றத்தில் பத்து எம்பி தியான் சுவா-வுக்கு வழங்கிய எழுத்துப்பூர்வமான பதிலில் பிரதமர்துறை அமைச்சர் முகம்மட் நஸ்ரி அப்துல் அசீஸ் இவ்வாறு கூறினார்.

2008, ஆகஸ்ட் 14-இல், மைக்கல் சியா என்று அடையாளம் கூறப்பட்ட ஒரு வணிகர், ஹாங்காங் அனைத்துலக விமான நிலையத்தில் ரிம16 மில்லியன் பெறும் சிங்கப்பூர் டாலர்களுடன் கோலாலம்பூருக்குப் பயணமாகும் ஒரு விமானத்தில் ஏறுமுன் பிடிபட்டார்.

ஹாங்காங் ஊழல்தடுப்பு சுயேச்சை ஆணையம்(ஐசிஏசி) அவர் பணத்தைச் சலவை செய்யும் (கறுப்புப் பணத்தை வெள்ளையாக்குதல்) முயற்சியிலும் கடத்தல் முயற்சியிலும் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தியது.

ஐசிஏசி-இன் விசாரணையில் அப்பணம் மூசாவுக்கானது என்றும் அது சுவீஸ் வங்கியில் முதலமைச்சரின் பெயரில் ஏற்கனவே யுஎஸ்$30மில்லியன் உள்ள ஒரு கணக்கில் சேர்ப்பிக்கப்படுவதற்காக கொண்டு செல்லப்படுவதாகவும் தெரிய வந்தது. சுவீஸ் வங்கியில் உள்ள முதலைமைச்சரின் கணக்கு ஒரு வழக்குரைஞரின் பொறுப்பில் இருக்கிறது என்ற தகவலும் தெரிய வந்தது.

TAGS: