பொறுமைக்கும் எல்லை உண்டு என்கிறார் இந்திய வெளியுறவு அமைச்சர்

இலங்கைப் பிரச்னையில் இந்தியா பொறுமை காத்து வருவதாகவும், அந்தப் பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு என்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தங்களிடம் தெரிவித்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் தெரிவிக்கிறார்.

இந்திய அரசின் அழைப்பின் பேரில், சம்பந்தர் தலைமையில் மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், விநாயகமூர்த்தி, செல்வராசா உட்பட ஏழு பேர் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் குழு டெல்லி சென்றுள்ளது.

தமிழ்க் கூட்டமைப்பு குழு இன்று காலை வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவைச் சந்தித்து ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ஆலோசனை நடத்தியது.

அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சம்பந்தர், அந்தச் சந்திப்பு திருப்திகரமாக அமைந்ததாக தெரிவித்தார்.

இந்தியாவி்ன் நிலைப்பாடு மற்றும் இந்திய அரசின் சார்பில் எடுக்கப்பட்டுள்ள முயற்சிகள் குறித்து கிருஷ்ணா விளக்கியதாகவும், தங்களது முயற்சிகள் தாங்கள் எதிர்பார்த்த விதத்தில் இன்றுவரை பலனளிக்கவில்லை என்று அவர் தெரிவித்ததாகவும் சம்பந்தர் கூறினார்.

தாங்கள் பொறுமை காத்து வருவதாகவும், ‘அந்தப் பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு’ என்று கிருஷ்ணா கூறியதாகவும் சம்பந்தர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான, தங்கள் தரப்பு முயற்சிகளையும், கருத்துக்களையும் கிருஷ்ணாவிடம் எடுத்துரைத்ததாக சம்பந்தர் கூறினார்.

தங்களது மக்கள் ஏமாற்றப்படுவதை ஏற்க முடியாது என்றும் நியாயமான அரசியல் தீர்வு காண்பதற்கு எல்லோரும் ஒத்துழைத்து, அந்தத் தீர்வைக் காணலாம் என்றால், அந்தப் பாதையில் செல்வதற்குத் தயார் என்றும் சம்பந்தர் கூறினார்.

TAGS: