கூடன்குளத்தில் வீடு புகுந்து கொள்ளையடிக்கும் தமிழக காவல்துறை!

தமிழகம்: கூடன்குளத்தில் 10.09.2012 அன்று நடந்த கலவரத்தின் தற்போதைய நிலைமையை கண்டறிய 22, 23.09.2012 ஆகிய இரு நாட்களில் நெல்லை மாவட்டம், கூடன்குளம், இடிந்தகரை, சுனாமி குடியிருப்பு, வைராவி கிணணு ஆகிய கிராமங்களில் உள்ள மக்களை நேரிடையாகச் சமநீதி வழக்கறிஞர்கள் சார்பில் 34 பேர் கொண்ட குழு ஆய்வு செய்தது.

அதில், ஒரு சில வழக்கறிஞர்கள் நேற்று (11.10.2012) செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில்,

நாங்கள் அந்த மக்களை நேரில் சந்தித்தபோது, அங்கு நடந்த சம்பவத்தையும் மனக்குமுறல்களையும் கொட்டித் தீர்த்தனர். ஊருக்குள் நுழைந்தால் ஆண்களை அதிகமாக பார்க்க முடியவில்லை. வீடு, வீடாக சென்று வீட்டில் உள்ள ஆண்கள் எங்கே என்று காவல்துறையினர் மிரட்டுவதாக கூறுகின்றனர்.

இடிந்தகரை கிறித்துவ தேவலாயத்திற்குள் காவல்துறையினர் புகுந்து மாதா உருவச்சிலையினை உடைத்தும் சிறுநீர் கழித்தும் அழிம்பு செய்து, அந்த மக்களின் மனதை புண்படுத்தியுள்ளனர்.

இடைவெளியின்றி பல நாட்களாக தொடரும் 144 தடை உத்தரவால் மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் தரப்பிலிருந்து எந்த எதிர்நடவடிக்கையும் இல்லாத நிலையினைக் கருத்திற்கொண்டு உடனடியாக 144 தடை உத்திரவை நீக்க வேண்டும்.

கலவத்தின்போது கண்ணீர் புகை குண்டால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் மருத்துவ வசதி செய்வதற்கு கூட வெளியில் செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. இந்த நிலைமையை உடனே சீர் செய்ய வேண்டும்.

இரவு – பகல் பாரா என்ற பெயரில் காவல்துறையினர் வீடுகளுக்குள் புகுவதையும் பெண்களை நாக்கூசும் வார்த்தைகளால் பேசுவதையும் உடனடியாக நிறுத்த வேண்டும்.

வீடு புகுந்து தாக்குதல் மற்றும் திருட்டு செயல்களில் ஈடுபட்ட ஆண், பெண் காவலர்கள் அனைவர் மீதும் உரிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போராட்டத்தில் கலந்துகொள்ளாத அப்பாவி மக்களையும் கைது செய்துள்ளனர். அவர்களை சிறையில் தனிமைப்படுத்தி வைத்துள்ளனர். ஆகையால் அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். மக்களின் மீதான தாக்குதலுக்கு காரணமான அதிகாரிகளை பணியிட மாறுதலுக்கும் துறை வாரியான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். சேதப்படுத்தப்பட்டுள்ள வீடுகள், வாகனங்களுக்கான இழப்பீடுகளை தாமதமின்றி உரியவர்களுக்கு வழங்கிட வேண்டும் என்றனர்.

TAGS: