இந்தியர் ‘எடுப்பார் கைப்பிள்ளை’ அல்லர்!

-செனட்டர் டாக்டர் எஸ். இராமகிருஷ்ணன், அக்டோபர் 12, 2012.

புதிய வரவு செலவு திட்டத்தை முன்வைத்த போது முதல் முறையாக தமிழ்ப் பள்ளிகளின் சீரமைப்புக்கு100 மில்லியன் ரிங்கிட் சிறப்பு ஒதுக்கீடு செய்வதாகப் பிரதமர் அறிவித்தார். எனினும் நடப்பு அரசு கொள்கையின்படி, தமிழ்ப்பள்ளிகளுக்கான சீரமைப்பு வேலைகள் எதுவாக இருப்பினும் அவை மலாய் குத்தகையாளர்களிடம் ஒப்படைத்தாக வேண்டும்!

அத்துடன் பள்ளி சீரமைப்புக்கான கட்டணம் எப்போதும் அதிகபட்சமாகவே இருக்கும். காரணம்? மலாய் குத்தகையாளர்களுக்கு உதவும் வேண்டும் என்பதற்காக! இந்த யுக்தியால் அரசாங்க ஒதுக்கீட்டில் பெரும் பகுதி அவர்களுக்கு சென்றுவிடும்! இருப்பினும் இந்திய சமூகத்துக்கு 100 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கியுள்ளோம் என தேசிய முன்னணி அரசு மார்தட்டிக் கொள்ளும்! மஇகாவும் மீண்டும்-மீண்டும் அதனைப் பெருமையோடு அறிவிப்பு செய்து, அரசாங்கத்துக்கு இந்தியர்கள் மீது அதிக அக்கறையுள்ளதென அப்பாவி இந்தியர்களை ஏமாற்றும்.

ஒரு முக்கிய குறிப்பு என்னவெனில், சீனர் பள்ளி மறுசீரமைப்புப் பணிகள் யாவும் இன்னாள் வரை சீனக் குத்தகையாளர்களிடமே ஒப்படைக்கப்பட்டு வருகின்றன என்பதுதான்!

இதே போல் தமிழ்ப் பள்ளிகள் தொடர்பான குத்தகைகளை இந்தியர்களிடமே  வழங்கும்படி பல அரசு சாரா நிறுவனங்கள் அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டன.  இப்போதுதான் கண் திறந்தது போல் மஇகாவும் இக்கோரிக்கையைப் பிரதமரிடம்  கொண்டுசெல்ல, நிதி அமைச்சின் மூலம் அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டதன் விளைவக, முதல் முறையக அவ்வேண்டுகோளுக்கு செவிசாய்க்கப்பட்டுள்ளது!

இப்புதிய வாய்ப்பை இந்திய குத்தகையாளர்கள் நழுவவிடக்கூடாது! மஇகா தலைமைத்துவம் அமைத்துள்ள சூர்யா கூட்டுறவுக் கழகத்தில் பதிந்துகொள்ள ஊக்குவிக்கப்படுகிறது. ஏனெனில் இக்கழகத்தில் உறுப்பியம் பெற்றுள்ள குத்தகையாளர்களுக்கு மட்டுமே தமிழ்ப்பள்ளி சீரமைப்புப் பணிகள் ஒப்படைக்கப்படுகின்றன! துருப்புச் சீட்டு வழி குத்தகையாளர்களின் தேர்வு! ஆகவே இந்திய குத்தகையாளர்கள் விரைவாக செயல்பட வேண்டும்.

எது எப்படி இருப்பினும், இத்திடீர் திருப்பம் இந்திய வாக்குகளை வசப்படுத்துவதற்கான ஒரு வியூகமாக இருக்கக்கூடாது. அரசாங்கக் கொள்கையில் இது ஒரு திட்டவட்டமான மாற்றமாக இருக்க வேண்டும்! இந்தியர் நலனுக்காக அம்னோவிடம் விட்டுக்கொடுத்தோ, கெஞ்சிக் கூத்தாடியோ நீதி நியாயம் பெறும் நிலை இனியும் நீடிக்கக்கூடாது! உரிமைகளைப் பணயம் வைத்துதான் இந்நாட்டு இந்தியர் தங்களுக்கு உரியவனவற்றைப் பெற வேண்டுமா? இனியும் எந்த ஓர் இந்தியனும் ‘எடுப்பார் கைப்பிள்ளையாக’ இருக்கக் கூடாது. நமது மாண்பை நாமே காத்துக்கொள்ள வேண்டும்.

1980-ம் ஆண்டில் டத்தோஸ்ரீ சாமிவேலு பொதுப்பணி அமைச்சராகப் நியமனம் பெறும் முன், தமிழ்ப்பள்ளி சீரமைப்பு வேலைகள் இந்திய குத்தகையளர்களிடமே விடப்பட்டதாக அறிகிறேன்! ஆனால் சாமிவேலு இவ்வழக்கத்தை மாற்றி மலாய் அரசியல் உறுப்பினர்களின் குடும்ப குத்தகையாளர்களுக்கு அவற்றைக் கொடுத்ததாகத் தெரிய வருகிறது!

தமிழ்ப்பள்ளிகளுக்கான 100 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீட்டில் புதிய 6 பள்ளிகளுக்கான செலவும் அடங்குமா? அப்புதிய பள்ளிகளுக்கான நிலத்தை கல்வி அமைச்சு அடையாளம் கண்டுவிட்டதா? கட்டுமான வேலைகள் ஆரம்பித்து விட்டனவா? மஇகா மத்தியஸ்தராக இருப்பதால் இவை குறித்த தகவல்களை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்!

கடந்த 55 வருடங்களாக தமிழ்பள்ளிகள் புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளன. முந்தைய காலத்தை போல் இம்முறையும் கல்வி அமைச்சு மிக நாசுக்காக தமிழ்ப்பள்ளி விவகாரத்தை மஇகாவிடம் ஒப்படைத்துள்ளது. இதனால் தமிழ்ப்பள்ளிகளுக்கு சிறந்த எதிர்காலம் உண்டா? டத்தோ பழனிவேலு தமிழ்ப்பள்ளிகளுக்கும் அமைச்சரா? நாட்டில் 523 தமிழ்ப்பள்ளிகள் இருந்தும் கல்வி அமைச்சில் அதற்கான ஒரு தனித்துறை கிடையாதா?

இந்திய இளைஞர்களுக்கான பயிற்சிக்கு 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்குவதாக நிதி அமைச்சு அறிவித்தது. எவ்வகையில் இப்பயிற்சிகள் அளிக்கப்படும்? அந்த 50 மில்லியன் மஇகாவிடம் கொடுக்கப்படுமா? சூரியா கூட்டுறவு கழகத்திடம் வழங்கப்படுமா?

மஇகா-விடம் ஏற்கனவே தெக்குன் கடனுதவி பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது! அக்கடன் உதவிக்கு விண்ணப்பம் செய்பவர்கள் மஇகா தலைவரின் சிபாரிசை கொண்டிருக்க வேண்டும்!

2008ம் ஆண்டு பொதுத் தேர்தலில் இந்திய சமூகம் மஇகாவை புறக்கணித்து விட்டது. எனினும் அம்னோ மஇகாவைக் காப்பாற்ற மூச்சுக் காற்று கொடுத்து வருகிறது. இதுதான் மலேசிய இந்தியர்களின் பரிதாப நிலை! இந்தியர்கள் மஇகாவை புறக்கணித்தாலும் அம்னோ அதற்கு உயிர் கொடுத்து, இந்தியர்களை அடிமைகளாக்கி சந்தர்ப்பத்துக்கு பயன்படுத்திக்கொள்ளும். இந்தியர்களின் கல்வி முன்னேற்றம், பொருளாதார வளம் குறித்து அம்னோவுக்கு அக்கறையில்லை. அதற்கு வேண்டியது இந்தியர்களின் வாக்கு மட்டுமே!

அதே வாக்குகளைக் கொண்டு இந்தியர்கள் தங்கள் சந்ததியினரின் எதிர்காலத் தைச் செப்பனிட முடியும்! இனியும் சந்தர்ப்பவாதிகளுக்கு இந்தியர் இரையாக வேண்டாம்!