இன்று இந்தியாவின் 65-ம் ஆண்டு விடுதலை நாள்!

பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து இந்தியா விடுதலை அடைந்து இன்றுடன் 65 ஆண்டுகள் ஆகின்றன. இதனையொட்டி இந்தியா முழுவதும் இன்று விடுதலை நாள் கொண்டாடப்பட்டது.

டெல்லி செங்கோட்டையில் இன்று காலை இந்தியத் தேசியக் கொடியை தலைமையமைச்சர் மன்மோகன் சிங் ஏற்றி வைத்தார்.

முன்னதாக செங்கோட்டைக்கு வந்த தலைமையமைச்சரை மத்திய இராணுவத்துறை அமைச்சர் மற்றும் துணை அமைச்சர்கள் வரவேற்றனர். பின்னர் முப்படைகளின் அணிவகுப்பை ஏற்றுக் கொண்ட தலைமையமைச்சர் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார்.

விடுதலை நாள் விழாவை முன்னிட்டு, செங்கோட்டையைச் சுற்றி மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 85 ஆயிரம் காவல்துறையினரும் சென்னையில் மட்டும் 10 ஆயிரம் காவல்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே விடுதலை நாளை முன்னிட்டு நேற்று நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்திய இந்தியக் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல், “ஊழல் புற்றுநோயை அடியோடு ஒழிப்போம்” என்றார்.

முதன் முதலில் ஆயுதம் ஏந்தி ஆங்கிலேயே ஆட்சி தலைவர் ராபர்ட் ஆஷை  சுட்டு கொன்று ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்தையே அலற வைத்த அஞ்சா நெஞ்சன் மாவீரன் வாஞ்சிநாதன் பிறந்த செங்கோட்டையில் அவரது சிலை முன்பு இந்திய தேசம் அடிமை விலங்கு உடைத்தெறியப்பட்ட ஆகஸ்ட் 15ம் தேதி நள்ளிரவு 0 மணி 0 நிமிடம் 0 விநாடியில் நகராட்சி சங்கு ஓலிக்க, வாண வெட்டுகள் முழங்க வீரவாஞ்சி சிலைக்கு மாலை அணிவித்து விடுதலை பெற்ற நாளை உள்ளூர் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு கொண்டாடினர்.